தேடுதல்

Vatican News
பானமா இளையோர் பானமா இளையோர்  (ANSA)

பானமா நாட்டில் பழங்குடியின இளையோரின் உலக மாநாடு

பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஒரு தயாரிப்பாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த இளையோரின் உலக மாநாடு நடைபெறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு சனவரி 17ம் தேதி முதல் 21ம் தேதி முடிய பானமா நாட்டின் சொலோய் (Soloy) நகரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளையோரின் உலக மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டின், பானமா நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஒரு தயாரிப்பாக இந்த மாநாடு நடைபெறுவதாக, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியான ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.

பழங்குடியின இளையோர் உலக மாநாட்டிற்கு, ஒரு சிலுவை, ஒரு குடிசை, மரத்தின் வேர் ஆகிய பல அடையாளங்கள் அடங்கிய ஓர் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

இளையோர் அனைவரும் இயேசுவின் தியாக வாழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்க சிலுவையும், இவ்வுலகப் பயணத்தில் அனைவரும் ஒன்றாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் குறிக்க குடிசை வீடும் இந்த இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளன என்று இந்த இளையோர் மாநாட்டை ஒருங்கிணைக்கும் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த மாநாடு நடைபெறும் நாள்களில், சொலோய் நகரில், பழங்குடியினரின் கிராமம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், அவர்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைவடிவங்கள், கண்காட்சியாகவும், கலை நிகழ்ச்சிகளாகவும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் பல அம்சங்கள், இந்த இளையோர் மாநாட்டின் மையக் கருத்துக்களில் ஒன்றாக இருக்கும் என்று, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

05 November 2018, 15:04