தேடுதல்

Vatican News
Moroccoவில் திருத்தந்தை செல்லவிருக்கும் Casablanca நகரம் Moroccoவில் திருத்தந்தை செல்லவிருக்கும் Casablanca நகரம்  (©djo8000 - stock.adobe.com)

மொரோக்கோ நாட்டு திருத்தூதுப் பயணம் குறித்து Rabat பேராயர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொரோக்கோ திருத்தூதுப் பயணம், முஸ்லீம்-கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க ஓர் உந்து சக்தியாக விளங்கும் - பேராயர் López

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, மார்ச், 30, 31 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொரோக்கோ நாட்டிற்கு வருகை தருவது, இங்கு வாழும் தலத்திருஅவை மக்களையும், மொரோக்கோ நாட்டு மக்களையும் சந்திக்க மட்டுமல்ல, இந்நாட்டின் வழியே, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு முயலும் மக்களையும் அவர் சந்திக்க வருகிறார் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் வெளியிட்டுள்ள மடலில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் மொரோக்கோ நாட்டு திருத்தூதுப் பயணம் குறித்து திருப்பீட செய்தித் தொடர்பாளர் அறிவித்ததையடுத்து, Rabat உயர் மறைமாவட்ட பேராயர் Cristóbal López அவர்கள் வெளியிட்டுள்ள மடலில், திருத்தந்தையை மொரோக்கோ நாட்டிற்கு அழைத்த அரசர், 6ம் முகம்மது அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

1985ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், மொரோக்கோ நாட்டில் காலடி பதித்த முதல் திருத்தந்தை என்பதை, தன் மடலில் குறிப்பிட்டுள்ள பேராயர் López அவர்கள், புனிதத் திருத்தந்தையின் வருகை, மொரோக்கோ மக்கள் மனங்களில் ஏராளமான நம்பிக்கையை அளித்தது என்று கூறியுள்ளார்.

உரோம் ஆயருடன் மொரோக்கோ மக்கள் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை பெரும் வாய்ப்பாக அமையும் என்றும், முஸ்லீம்-கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க ஓர் உந்து சக்தியாக விளங்கும் என்றும் பேராயர் López அவர்கள் தன் மடலில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

14 November 2018, 15:32