தேடுதல்

மெக்சிகோ வழியாக குடிபெயர முயலும் மக்கள் மெக்சிகோ வழியாக குடிபெயர முயலும் மக்கள் 

மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் வெளிப்பாடே குடிபெயர்தல்

குடிபெயர விரும்பும் மக்களை சந்தேகக் கண்கொண்டு நோக்காமல் அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும், இலட்சக்கணக்கான மக்கள் அனுபவித்து வரும் ஏழ்மை, அநீதி, வன்முறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆகியவற்றினால் உருவான பாதிப்புகளின் ஒரு சிறு பகுதியே, அப்பகுதியில் தற்போது நிகழும் குடிபெயர்தல்கள் என உரைக்கிறது, மெக்சிகோ உயர் மறைமாவட்டத்தின் அறிக்கை.

மத்திய அமெரிக்காவிலிருந்து, குறிப்பாக, ஹொண்டூராஸ் நாட்டிலிருந்து, பெருமெண்ணிக்கையில், மக்கள், மெக்சிகோ வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைய முயன்றுவரும் இவ்வேளையில், இது குறித்து மெக்சிகோ உயர் மறைமாவட்ட தகவல் தொடர்பு மையம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீதியான முறையில் தங்கள் விருப்பத்தை வெளியிட்டு நல் வாழ்வைத் தேடும் இம்மக்களை, அச்சுறுத்தலாக, சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடாது என்று இவ்வறிக்கை விண்ணப்பித்துள்ளது.

'புலம்பெயர்வோர் குறித்த நம் கடமை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, புலம் பெயர விரும்பும் மத்திய அமெரிக்க மக்களுக்கு, குறிப்பாக, ஹொண்டூராஸ் மக்களுக்கு, மெக்சிகோ ஆயர்கள் ஆற்றி வரும் மேய்ப்புப்பணி உதவிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஏழ்மையாலும், அநீதிகளாலும், வன்முறைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், மத்திய அமெரிக்க மக்கள் குடிபெயர்வதைக் குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் எல்லைகளை பாதுகாக்கும் உரிமையுடைய பணக்கார நாடுகள்,  குடிபெயர விரும்பும் மக்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டிய கடமையையும் உணர்ந்திருக்க வேண்டும் எனவும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், தங்கள் அண்மை அறிக்கையில் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 14:46