மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாட்டு  எல்லையில் புலம் பெயர்ந்தோர் மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையில் புலம் பெயர்ந்தோர் 

புலம் பெயர்ந்தோரை கருணையுடன் கண்ணோக்கவேண்டும்

மெக்சிகோ நாடும், அமெரிக்க ஐக்கிய நாடும் குடிபெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகள் என்பதை இவ்விரு நாடுகளிலும் வாழும் மக்கள் உணரவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டிற்குள் நுழைந்துள்ள குடிபெயர்ந்தோர், மற்றும் புலம் பெயர்ந்தோரை கருணையுடன் கண்ணோக்கவேண்டும் என்றும், அந்நியரைக் கண்டு உருவாகும் அச்சம், வெறுப்பைத் தூண்டிவிடக்கூடாது என்றும், மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Rogelio Cabrera அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டை அடையும் நோக்கத்துடன், மத்திய அமெரிக்க நாடுகள் சிலவற்றிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ள மக்கள், மெக்சிகோ நாட்டிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையிலுள்ள எல்லை நகரான Tijuanaவை அடைந்துள்ளதையடுத்து, பேராயர் Cabrera அவர்கள் இவ்வாறு விண்ணப்பித்துள்ளார்.

மெக்சிகோ நாடும், அமெரிக்க ஐக்கிய நாடும் குடிபெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகள் என்பதை இவ்விரு நாடுகளிலும் வாழும் மக்கள் உணரவேண்டும் என்று பேராயர் Cabrera அவர்கள் தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 2000த்திற்கும் அதிகமான மத்திய அமெரிக்க மக்கள் Tijuana நகரையும், வேறு 3000த்திற்கும் அதிகமானோர் Mexicali நகரையும் வந்தடைந்துள்ளனர் என்றும், கடந்த ஞாயிறு முதல் Tijuana நகர மக்கள், குடியேறிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

குடியேற்றதாரர்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல, ஆனால், அனைவரும் சட்டம், ஒழுங்கு ஆகியவை சீர்குலையாமல் நடப்பதை விரும்புகிறோம் என்று Tijuana நகர மேயர் கூறியுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 15:01