தேடுதல்

Vatican News
தீபாவளி சிறப்புக் கொண்டாட்டங்கள் தீபாவளி சிறப்புக் கொண்டாட்டங்கள்  (AFP or licensors)

இருளிலிருந்து ஒளிபோல், பகை உணர்வுகளிலிருந்து அன்பு பிறக்கட்டும்

இறைவன் வழங்கியுள்ள செல்வங்கள் அனைத்தும், உடன் மனிதனுக்கு உதவுவதற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவிலும் உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளித் திருவிழாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள்.

இருளின் மீது ஒளியும், தீமைகளின் மீது நன்மையும், அறியாமையின்மீது ஞானமும் வெற்றிகொண்ட இந்த ஒளியின் திருவிழா, உலக மக்கள் அனைவரிலும் தனிப்பட்ட முறையில் ஆன்மீக அர்த்தத்தை தூண்டுவதாக உள்ளது என தங்கள் செய்தியில் கூறியுள்ள இந்திய ஆயர்கள், நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள உடமைகளும், செல்வங்களும், பிறருக்கு உதவுதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக நோக்கப்பட வேண்டும் என மேலும் அதில் கூறியுள்ளனர்.

இருளிலிருந்து ஒளி வரமுடியுமெனில், வெறுப்புணர்வுகளிலிருந்து வெளிப்பட்டு, அன்பு பிறக்க முடியும் என நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறிய வார்த்தைகளையும் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள்.

எக்காலத்தையும் விட தற்போது, அன்பின் ஒளியும், நீதியின் வெளிச்சமும், பிறரன்பு எனும் தீபமும், உண்மையாயிருத்தல் எனும் சுடரும், மதங்களின் சரியான பயன்பாடும் தேவைப்படுகின்றன எனக் கூறும் ஆயர்கள், ஏழை, பணக்காரர், கல்வி கற்றோர், படிக்காதவர் என எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் ஒளியின் தேவை உள்ளது என எடுத்துரைத்துள்ளனர்.

உண்மை, ஒன்றிப்பு, நீதி, அமைதி என்ற உள்மன தீபங்களை இந்த தீபாவளித் திருவிழா நாளில் ஏற்றி, நாமனைவரும் ஒளியை பிறருக்கு எடுத்துச் செல்பவர்களாகச் செயல்படுவோம் என விண்ணப்பித்து, திருவிழா வாழ்த்து கூறி, தங்கள் செய்தியை நிறைவுச் செய்துள்ளனர், இந்திய ஆயர்கள்.

06 November 2018, 15:19