தேடுதல்

இயேசு சபையின் 28வது உலகத் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே இயேசு சபையின் 28வது உலகத் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே 

இறை ஊழியர் அருப்பே அருளாளராக்கப்படும் வழிமுறைகள் ஆரம்பம்

இயேசு சபையின் 28வது உலகத் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு சபையின் 28வது உலகத் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அவர், இனி, 'இறை ஊழியர்' என்று கருதப்படுகிறார் என்று, இயேசு சபையின் தற்போதைய உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 14, இப்புதனன்று, இறை ஊழியர் அருப்பே அவர்களின் 111வது பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், உலகெங்கும் பணியாற்றும் இயேசு சபையினருக்கு அனுப்பியுள்ள மடலில், இச்செய்தியினை, அருள்பணி சோசா அவர்கள் அறிவித்துள்ளார்.

இறை ஊழியர் அருப்பே அவர்களின் வாழ்வும், குறிப்பாக, அவர், இயேசு சபையின் உலகத் தலைவராக, 18 ஆண்டுகள் ஆற்றிய பணியும், நற்செய்தி விழுமியங்களுக்கு சாட்சியாக விளங்கின என்பதை, அருள்பணி சோசா அவர்கள் இம்மடலில் நினைவு கூர்ந்துள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறுதிக் கட்டங்களில், இயேசு சபையின் உலகத் தலைவராகப் பொறுப்பேற்ற இறை ஊழியர் அருப்பே அவர்கள், அச்சங்கத்தின் வழியே உருவான புதுப்பித்தல் பணிக்கு ஓர் இறைவாக்கினராக செயலாற்றினார் என்று, அவரையடுத்து உலகத் தலைவராகப் பொறுப்பேற்ற அருள்பணி பீட்டர் ஹான்ஸ் கோல்வென்பாக் அவர்கள் கூறியதை, அருள்பணி சோசா அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் நிலவும் அநீதிகளுக்கு பதிலிருக்கும் வகையில், இறை ஊழியர் அருப்பே அவர்கள், உருவாக்கிய JRS என்றழைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் பணியைக் குறித்து, அருள்பணி சோசா அவர்கள் தன் மடலில் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

இறை ஊழியர் அருப்பே அவர்களை அருளாளராக உயர்த்தும் வழிமுறைகளைத் துவக்கும் சிறப்பு நிகழ்வு, 2019ம் ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி, அருப்பே அவர்கள், இறையடி சேர்ந்த 28வது ஆண்டு நிறைவன்று, உரோம் நகர் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் நடைபெறும் என்பதையும், இயேசு சபையின் உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 15:00