பிலிப்பீன்ஸில் புனித பாத்ரே பியோ அவர்களின் இதயத்தை உள்ளடக்கிய புனிதப் பொருள் பிலிப்பீன்ஸில் புனித பாத்ரே பியோ அவர்களின் இதயத்தை உள்ளடக்கிய புனிதப் பொருள் 

புனித பாத்ரே பியோ இதயத்தை வணங்கிய 50 இலட்சம் மக்கள்

புனித பாத்ரே பியோ அவர்களின் இதயத்தை உள்ளடக்கிய புனிதப் பொருளை 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் வணங்கினர் - பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பாத்ரே பியோ அவர்களின் இதயத்தை உள்ளடக்கிய புனிதப் பொருள், பிலிப்பீன்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், இந்தப் புனிதப் பொருளை 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் வணங்கியுள்ளதாகவும் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடு, பாரகுவாய், மற்றும் அர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட புனித பாத்ரே பியோ அவர்களின் இதயம், அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல், பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா, சேபு, தவாயோ, லீப்பா ஆகிய நகரங்களில் மக்களின் வணக்கத்தைப் பெற்று வந்துள்ளது.

இப்புனிதப் பொருள் பிலிப்பீன்ஸ் நாட்டைவிட்டு இத்தாலிக்கு புறப்பட்ட வேளையில், இறுதித் திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் Orlando Beltran Quevedo அவர்கள், புனித பாத்ரே பியோ போன்ற புனிதர்களைக் கண்டு பாராட்டுவது மட்டும் போதாது, அவர்களைப்போல பிறரன்பிலும், பணிவிலும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தன் மறையுரையில் கூறினார்.

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டில், கிறிஸ்தவ விழுமியங்கள் மறக்கப்பட்டுவிட்டதால், ஊழலும், வன்முறைகளும் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன என்று கர்தினால் Quevedo அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஏனைய நாடுகளில் காணப்பட்ட பக்தியைக் காட்டிலும், பிலிப்பீன்ஸ் நாட்டில் காணப்பட்ட பக்தி, தங்கள் உள்ளங்களைத் தொட்டதாக, இத்திருப்பயணத்தில் உடன் சென்றிருந்த, புனித பாத்ரே பியோ திருத்தலத்தின் தலைவர், அருள்பணி Carlo Laborde அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 14:36