தேடுதல்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க சந்தியாகோவில் பேரணி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க சந்தியாகோவில் பேரணி 

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கு உதவும் ஐ.நா. நிதி அமைப்பு, 20 ஆண்டுகளுக்கு மேலாக, 139 பகுதிகளில் 460க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெற்றுவரும் எல்லாவிதமான வன்முறைகளும், அவர்களின் மாண்பும், சமத்துவமும் மதிக்கப்படவில்லை என்பதன் வெளிப்பாடே என்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கூறப்பட்டது.

நவம்பர் 25, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாளையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் இவ்வாரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் ஒழிக்கப்படுவதற்கு, உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்படுமாறு இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

அச்சம், வன்முறை, பாதுகாப்பின்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று பெண்களும்,  சிறுமிகளும் சுதந்திரமாக வாழும்போதுமட்டுமே, உலகம், பெண்கள் குறித்து பெருமையடைய முடியும் என்றும், கூட்டேரெஸ் அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இவ்வுலக நாள் “உலகை ஆரஞ்சு நிறமாக்குங்கள்: மீ டூவுக்குச் செவிமடுங்கள் (Orange the World :#HearMeToo)” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெற்றுவரும் எல்லாவிதமான வன்முறைகள் குறித்து உலகினரின் கவனத்தை ஈர்ப்பதாய் ஆரஞ்சு நிறம் உள்ளது எனவும், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தங்களின் நிலையைப் பகிர்ந்துகொள்வதற்கு #HearMeToo என்ற ஹாஷ்டாக் உதவுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கு உதவும் ஐ.நா. நிதி அமைப்பு, கடந்த ஆண்டில் மட்டும், அறுபது இலட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உதவியுள்ளது. (UN)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:42