திருத்தந்தை 7ம் கிரகரி திருத்தந்தை 7ம் கிரகரி  

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 15

திருத்தந்தை 7ம் கிரகரி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, திருத்தந்தையரின் மேலான அதிகாரம் உறுதி செய்யப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான்

 மத்திய காலத்தில் ஜெர்மனியில் மட்டுமல்லாமல், ஐரோப்பா எங்கும், பிரபுத்துவ ஆட்சி ஓங்கியிருந்தது. பொதுநிலை விசுவாசிகள், திருஅவை மீதும், அதன் சொத்துக்கள் மீதும் அதிகாரம் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பங்குத்தந்தையராக நியமித்தனர். இச்செயல், திருஅவையின் பழைய மரபு, திருஅவையின் பழைய சட்டம் ஆகியவற்றுக்கு முரணாகவும், திருஅவையின் உள்ளார்ந்த சுதந்திரம் மற்றும் அதன் இயல்பையே பலவழிகளில் மீறுவதாகவும் இருந்தது. எனவே இந்நிலைக்கு எதிராக, திருஅவையின் பொறுப்பாளர்கள் சிலர் துணிச்சலுடன் குரல் கொடுக்கத் தொடங்கினர். தம் திருத்தூதர்கள் மற்றும், அவர்கள் வழிவருகின்ற ஆயர்களிடம் கிறிஸ்து வழங்கியுள்ள திருஅவையின் மேலான அதிகாரத்தை பொதுநிலையினர் எப்படி வைத்திருக்க முடியும் என்ற குரல்கள் ஆயர்களிடமிருந்து எழ ஆரம்பித்தன. குறிப்பாக, அரசர் மூன்றாம் ஹென்றி, திருத்தந்தையர் மீது கொண்டிருந்த உயரிய அதிகாரம் பற்றி கேள்வி கேட்கத் தொடங்கினர். இதனால், திருஅவை முழுவதும் மீண்டும் ஆன்மீக சக்தி எழுச்சி பெறத் தொடங்கியது.

இவ்வாறு  கேள்வி கேட்டவர்களில் முக்கியமானவர், கர்தினால் Humbert of Silva Candida (1000-மே 5, 1061). ஆயிரமாம் ஆண்டில் பிரான்சின் Lorraineல் பிறந்த இவர், திருஅவையின் முக்கியமான உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். திருஅவைக்குள் பொதுநிலையினர் அருள்பணியாளர்களுக்குப் பணிந்து நடக்க வேண்டும், ஆயர்கள் முதலில் அருள்பணியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும், பின்னர் பொதுநிலையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆயர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் பற்றி ஆராயப்பட்டு, பேராயர் மற்றும் புதிய ஆயர் பொறுப்பேற்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஆயர்களால், திருநிலைப்படுத்தப்பட வேண்டும். கர்தினால் Humbert அவர்கள், இவ்வாறு சொன்னதுடன், திருத்தந்தை ஜெலாசியுஸ் அவர்கள் கொண்டுவந்த பழமைமிக்க கோட்பாட்டை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தார்,. திருஅவையும் அரசும் ஒரே அமைப்பின்கீழ் உள்ளது. ஆன்மீகமும், அரசும் முரண்பாடுகளை எதிர்கொள்கையில், ஆன்மீக அதிகாரத்தில் இருப்பவரின் குரலே இறுதியாக கேட்கப்பட வேண்டும். இந்த உலகின் மீது திருத்தந்தைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உறுதியுடன் கூறி வந்தார், கர்தினால் Humbert. இவ்வாறு பேரரசர் பெரிய ஒட்டோ காலத்திலிருந்து, சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் நிலவிய பிரபுத்துவ அமைப்பைச் சீர்படுத்தும் முயற்சியில் இறங்கினார், அவர். இதற்கு முதலில் பேரரசரின் இரும்புப் பிடியிலிருக்கும் திருத்தந்தை விடுதலை பெற வேண்டும் என எண்ணினார் கர்தினால் Humbert.

 1056ம் ஆண்டில் ஜெர்மானிய மற்றும், புனித உரோமைப் பேரரசின் பேரரசர், மூன்றாம் ஹென்ரியின் மரணம், அவருக்குரிய ஒரே வாரிசாக, அவரின் ஆறு வயது மகன் நான்காம் ஹென்ரி இருந்தது, பேரரசர் இறந்த அடுத்த ஆண்டே திருத்தந்தை 2ம் விக்டர் இறந்தது ஆகியவை, பொதுநிலையினரின் பிடியிலிருந்து திருத்தந்தையை மீட்டெடுத்து திருஅவையில் மாற்றத்தைக் கொண்டுவர, திருஅவையின் சீர்த்திருத்த குழுவுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் தங்கள் குழுவில் ஒருவரை திருத்தந்தையாக நியமித்தனர். திருத்தந்தை 9ம் ஸ்டீபன் ஆகிய இவர், தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய காலத்திலே காலமானார். உரோமைய பிரபுக்களுக்கு இது வசதியாக இருந்தாலும், திருஅவையின் சீர்திருத்தத்தில் ஆர்வமாக இருந்த நிக்கொலாஸ் என்பவரை, திருத்தந்தை 2ம் நிக்கொலாசாகத் திருநிலைப்படுத்தியது, சீர்த்திருத்த குழு. திருத்தந்தை 2ம் நிக்கொலாஸ், 1059ம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வறிக்கையின்படி, திருத்தந்தையர் தேர்தலில், பேரரசரும், உரோம் பிரபுக்களும் ஒதுக்கப்பட்டனர். ஆதலால், கர்தினால்களே திருத்தந்தையரைத் தேர்ந்தெடுத்தனர். அதேநேரம், பேரரசரின் ஒப்புதலும் அதற்குத் தேவைப்பட்டது. 1061ம் ஆண்டில், திருத்தந்தை 2ம் நிக்கொலாஸ் இறக்கவே, பிரபுக்கள் மீண்டும் திருஅவையில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினர். இத்தகைய கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், கர்தினால்கள், மற்றுமொரு சீர்திருத்தவாதியான ஆன்செல்ம் லூக்காவை, 2ம் அலெக்சாண்டர் என, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். திருத்தந்தை 2ம் அலெக்சாண்டர் அவர்கள் இறந்தபின்னர், 1073ம் ஆண்டில், இத்தாலியரான திருத்தந்தை 7ம் கிரகரி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே,  கர்தினால் Humbert அவர்களின் கோட்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு, திருத்தந்தையரின் மேலான அதிகாரமும் உறுதி செய்யப்பட்டது.

Hildebrand of Soana எனவும் அறியப்படும், திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், சிறிய உருவமாய், மெல்லிய குரல் உடையவராய், கல்வியில் வல்லுனராக இல்லாவிடினும், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் போன்று, நீதிக்காக உழைப்பதில் உறுதியுடன் செயல்பட்டார். 1075ம் ஆண்டில் Dictatus papae என்ற புகழ்பெற்ற அறிக்கையை வெளியிட்டு, திருத்தந்தையரின் தன்னிகரற்ற அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். திருத்தந்தைக்கு அனைவரும் பணிந்து நடக்க வேண்டும் என்றார். திருத்தந்தைக்குப் பணிந்து நடக்காதவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும், திருஅவையைவிட்டு புறம்பாக்குவதற்கும் உரிமைகள் உண்டு என்றார். திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களின் நடவடிக்கைகள், திருஅவையின் சீர்திருத்தத்தில் ஆர்வமாயிருந்த குழுவினருக்கு ஊக்கமளிப்பதாய் இருந்தன. ஆனால், பேரரசரின் அதிகாரத்திற்கு இவை இடையூறாகவே இருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 14:09