பேரரசர் முதலாம் ஒட்டோ பேரரசர் முதலாம் ஒட்டோ 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 14

மத்திய காலத்தில் ஜெர்மனியில் மட்டுமல்லாமல், ஐரோப்பா எங்கும், திருஅவை மீது பொதுநிலையினர் அதிகாரம் கொண்டிருந்தனர். பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் ஓங்கியிருந்தது

மேரி தெரேசா – வத்திக்கான்

பேரரசர் முதலாம் ஒட்டோ(Otto) கி.பி.936ம் ஆண்டிலிருந்து ஜெர்மானிய அரசராகவும், 962ம் ஆண்டிலிருந்து 973ம் ஆண்டுவரை, அதாவது அவர் இறக்கும்வரை, புனித உரோமைப் பேரரசின் அரசராகவும் விளங்கியவர். பெரிய ஒட்டோ எனவும் அழைக்கப்படும் இப்பேரரசர், மத்திய காலத்தில் உரோமைப் பேரரசை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் முயற்சியில், திருஅவையை அதிகமாகப் பயன்படுத்தினார். நிலப்பரப்புக்களை ஆயர்களின் நிர்வாகத்தில் விட்டுவிட்டால், அவர்கள் இறந்தபின்னர், குடும்ப வாரிசு சண்டையும், போட்டி அரசும் உருவாகாது என்று நினைத்தார். அதனால் பேரரசில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் ஆயர்களை குறுநில மன்னர்களாக நியமித்தார். தனது சொந்த சகோதரரான கொலோன் பேராயர் புருனோ அவர்களை, Lotharingiaவிற்கு குறுநில மன்னராக நியமித்தார். Lotharingia அரசு என்பது, இக்காலத்திய நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனியின் வட Rhine-Westphalia பகுதி, ஜெர்மனியின் Saarland, பிரான்சின் Lorraine ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த அரசை, 2ம் Lothair அரசர், தனது தந்தை முதலாம் Lothair டமிருந்து 855ம் ஆண்டில் பெற்றார். இவரின் பெயரில் இந்த அரசு அழைக்கப்பட்டது.

பேரரசர் முதலாம் ஒட்டோ, தனது ஆட்சியில் ஆயர்களுக்குப் பொறுப்பளித்த இந்த முயற்சி வெற்றியடைய, திருத்தந்தையின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இதனால் திருத்தந்தையால் முடிசூட்டப்பட விரும்பினார் அவர். முந்தைய அரசர்கள் பெப்பின் மற்றும் பெரிய சார்லஸ் வழங்கியிருந்த நன்கொடைகளை திருத்தந்தைக்குத் திருப்பிக் கொடுத்தார். பாப்பிறை மாநிலங்களின் சுயாட்சியை உறுதி செய்தார். அவர், கி.பி.962ம் ஆண்டில், உரோம் நகரில் திருத்தந்தை 12ம் ஜான் அவர்களால், புனித உரோமைப் பேரரசராக முடிசூட்டப்பட்டார். மேற்கு ஐரோப்பாவில், வேற்று மதத்தவரான ஹங்கேரியர்களின் ஆக்ரமிப்புக்கு இவர் முடிவு கட்டினார். இதனால் பேரரசர் முதலாம் ஓட்டோ, கிறிஸ்தவ உலகின் மீட்பர் என போற்றப்பட்டார். பேரரசர் ஒட்டோ முடிசூட்டப்பட்ட ஓராண்டிலேயே, திருத்தந்தை 12ம் ஜான் அவர்கள் மீது, அரசதுரோகம் குற்றம் சுமத்தி அவரைப் பதவியைவிட்டு நீக்கி, அந்த இடத்தில் பொதுநிலையினர் ஒருவரை நியமித்தார். வருங்காலத்தில், தான் பேரரசரோடு பற்றுறுதி கொள்வதாக முதலில் நம்பிக்கை பிரமாணம் செய்யாமல், எந்த ஒரு திருத்தந்தையும் திருநிலைப்படுத்தப்படக் கூடாது என்ற ஆணையைப் பிறப்பித்தார் பேரரசர் முதலாம் ஒட்டோ. ஆதலால் ஓட்டோவின் புதிய பேரரசில், திருத்தந்தையர் ஆயர்கள் போன்று நியமிக்கப்பட்டனர். அவர்களும், துணைநிலை ஆளுனர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலை அடுத்த நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கி.பி.1039ம் ஆண்டு முதல், 1056ம் ஆண்டு வரை ஆட்சி செய்த, பேரரசர்களிலே மிகவும் வல்லமை படைத்த பேரரசர் மூன்றாம் ஹென்றியின் அணுகுமுறையில் இது தெளிவாகத் தெரிந்தது.

 

பேரரசர் மூன்றாம் ஹென்றி, தன் மக்களைப் பாதுகாப்பதற்கு கடவுளால் தான் நியமிக்கப்பட்டவர் என நம்பினார். இதனால், திருவெளிப்பாடு நூலில் விவரிக்கப்பட்டிருப்பது போன்று முதன்மைக் குரு போன்று, ஆடையணிந்து அலங்கரித்துக்கொண்டார். அரச கடவுள் போன்று இவர் இருந்தார். ஆயர்களையும், திருத்தந்தையரையும் இவர் நியமித்தார். அந்தப் பணிக்கு அவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதையும் அவர் உறுதி செய்தார். எதிர் திருத்தந்தையால், திருத்தந்தை ஒன்பதாம் பெனடிக்ட் (கி.பி.1032-1045) அவர்கள், உரோம் நகரைவிட்டு விரட்டப்பட்டு, ஜான் கிரேசியன் என்பவரை நியமித்தபோது, பேரரசர் மூன்றாம் ஹென்றி தலையிட்டு, இந்த மூவரையுமே நீக்கிவிட்டு, திருத்தந்தையர் 2ம் கிளமென்ட், 2ம் தமாசுஸ், 9ம் லியோ, 2ம் விக்டர் ஆகியோரை, அடுத்தடுத்து நியமித்தார். அருள்பணியாளர்கள் மற்றும் மக்களால், ஆயர்,  நியமிக்கப்பட வேண்டும் என்ற பழைய திருஅவை சட்டம் முற்றிலும் மறக்கப்பட்டது. ஆயர்கள் நியமனம், அரசர்கள் மற்றும் அவரின் பெரிய பிரபுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆயர் திருநிலைப்பாட்டில், ஆயர், பிரபுக்களின்முன் முழந்தாளிட்டு, தனது மரியாதையைச் செலுத்தி, அவருக்குரிய மோதிரத்தையும், கோலையும் பெறுவார். அந்த நிகழ்வில் ஆயரின் ஆட்சி அதிகார எல்லையும் நிர்ணயிக்கப்பட்டது. புதிய ஆயராக நியமிக்கப்படுபவர், தனது நியமனத்துக்காக நிறையப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆன்மீக வாழ்வு வர்த்தகமாக்கப்பட்ட நிலை, திருஅவை முழுவதும் நிலவியது.

பங்குத்தந்தை, பொதுநிலையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தார். பொதுநிலையினர் திருஅவையின் சொத்துக்கள்மீது அதிகாரம் கொண்டிருந்தனர். இதனால் தங்களுக்கு விருப்பமானவர்களை பங்குத்தந்தையராக நியமித்தனர். இந்தக் கட்டுப்பாடு, திருஅவையின் பழைய மரபு, திருஅவையின் பழைய சட்டம் ஆகியவற்றுக்கு முரணாக இருந்தது. திருஅவையின் உள்ளார்ந்த சுதந்திரம் மற்றும் அதன் இயல்பையே இவை பலவழிகளில் மீறுவதாகவும் இருந்தது. எனவே இதில் தலையிட்டு மறுமலர்ச்சி கொண்டுவர குளுனி ஆதீன துறவு சபையினர் துணிச்சலுடன் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 14:18