தேடுதல்

Vatican News
Azov உக்ரைன் கடற்படை கப்பல்கள் Azov உக்ரைன் கடற்படை கப்பல்கள்  (ANSA)

உக்ரைன் நாட்டிற்காக செபிக்க விண்ணப்பம்

இரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள் அகற்றப்படுவதற்கு செபிக்குமாறு, உக்ரைன் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை, இரஷ்யா கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, உக்ரைன் நாடாளுமன்றம், இத்திங்களன்று இராணுவச் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளவேளை, இரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள் அகற்றப்படுவதற்கு செபிக்குமாறு, உக்ரைன் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

Crimeaவுக்கும், இரஷ்யாவின் Taman தீபகற்பத்திற்கும் இடையேயுள்ள Kerch நீர்கால்வாயில், நவம்பர் 25, இஞ்ஞாயிறன்று, உக்ரைன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களையும், அதில் பணியாற்றிய 23 பேரையும் இரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைன் நாட்டின் நிலப்பகுதியாகிய Crimeaவை, 2014ம் ஆண்டில், இரஷ்யா, தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இந்நடவடிக்கையையொட்டி ஏற்பட்டுள்ள பதட்டநிலைகள் அகற்றப்படவும், ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்புக்காகவும் செபிக்குமாறு, உக்ரைன் கிறிஸ்தவர்கள், கேட்டுக்கொண்டுள்ளனர்.  

இரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கடற்படை கப்பல்களில் இருந்த பல உக்ரைன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும், இந்நிகழ்வு, இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதட்டநிலையை உருவாக்கியுள்ளது எனவும், செய்திகள் கூறுகின்றன.

உக்ரைன் நாடாளுமன்றம் இசைவு தெரிவித்துள்ள இராணுவச் சட்டம், நவம்பர் 28, இப்புதன் முதல், முப்பது நாள்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் இராணுவச் சட்டம், கூட்டம் நடத்தும் உரிமை, பேச்சு சுதந்திரம் உட்பட, மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது. (CNA/EWTN)

27 November 2018, 15:14