தேடுதல்

Vatican News
பேருந்து தாக்குதலில் பலியானவர்களுக்கு அடக்க சடங்கு பேருந்து தாக்குதலில் பலியானவர்களுக்கு அடக்க சடங்கு  (ANSA)

எகிப்து கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலுக்கு கண்டனம்

கடந்த ஆண்டு காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில், அதே போன்று இவ்வாண்டும் தாக்குதல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எகிப்தின் Minya நகரருகே காப்டிக் கிறிஸ்தவத் திருப்பயணிகள் வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் தாக்கப்பட்டது குறித்து, எகிப்திற்கான திருப்பீடத்தூதர், WCC எனும் உலக கிறிஸ்தவசபைகளின் கூட்டமைப்பினர், ஐரோப்பிய ஐக்கிய அவையினர் ஆகியோர் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த சூழல் உருவாகிவரும் நிலையில், இத்தகைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒரு பெரும் பின்னடைவாக உள்ளது என கவலையை தெரிவித்த திருப்பீடத் தூதர், பேராயர் Bruno Musaro அவர்கள், காப்டிக் துறவு மடம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டபின் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதக்குழு ஒன்று துப்பாகிச் சூடு நடத்தியதில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் எடுத்துரைத்தார்.

இத்துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கு ஆறுதலையும் வெளியிட்டு WCC எனும் உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஐக்கிய அவையும் தங்கள் செய்திகளை தனித்தனியாக அனுப்பியுள்ளன.

ஏற்கனவே, இத்தகைய தாக்குதல் ஒன்று, இதே காப்டிக் துறவு மடத்திற்குச் சென்ற திருப்பயணிகள் மீது, கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

03 November 2018, 16:50