சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளி குறித்த விழிப்புணர்வு சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளி குறித்த விழிப்புணர்வு 

பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளி

இந்தியாவின் 12 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் 20,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர், பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளியைக் கொண்டாடினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இயங்கிவரும் 12 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் 20,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர், பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளியைக் கொண்டாட உறுதிபூண்டதை, இந்திய ஆயர் பேரவை பெருமையோடு அறிவித்துள்ளது.

இந்த மாணவர்கள் எடுத்த உறுதிமொழியை, இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும், குறிப்பாக, அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் பின்பற்றவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவின் செயலர், அருள்பணி ஜோசப் மணிப்பாடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சலேசிய சபையினர் நடத்தும் தொன் போஸ்கோ பள்ளி, இயேசு சபையினர் நடத்தும் புனித சேவியர் பள்ளி, ஜீசஸ் அண்ட் மேரி கான்வென்ட் பள்ளி, பிரசென்டேஷன் பள்ளி, ஆகியவை உட்பட, 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த முயற்சியை மேற்கொண்டனர் என்று இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இறைவன் வழங்கியுள்ள வாழ்வு என்ற கொடையை பராமரிக்கவும், குறிப்பாக, குழந்தைகளும், வயதில் முதிர்ந்தோரும் சுவாசிப்பதில் தொல்லைகள் அடையாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால், ஒலி மாசுப்பாடு உருவாவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சீரழிவும் உருவாகிறது என்பதும், குறிப்பாக, டில்லி மாநகரம், காற்று மாசுபாட்டில் உலகிலேயே மிகவும் ஆபத்தான இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:59