தேடுதல்

Vatican News
இரஷ்யாவில், நவம்பரில் நீர் உறைந்து காணப்படும் குளம் இரஷ்யாவில், நவம்பரில் நீர் உறைந்து காணப்படும் குளம்  (AFP or licensors)

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

COP 24 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு, வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, போலந்து நாட்டின் Katowice நகரில் நடைபெறவிருக்கின்றது.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து, வருகிற டிசம்பரில் போலந்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து அரசுகளும், 2050ம் ஆண்டுக்குள், சுற்றுச்சூழலுக்கு கேடு வருவிக்காத நீடித்த நிலையான புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை பயன்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வருமாறு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தால், ஒவ்வொரு நாளும், உலகளவில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு வருகின்றோம் என்றும், காலநிலை மாற்றம் குறித்த புதிய கொள்கைகள், நியாயமான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்றும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

COP 24 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு, வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, போலந்து நாட்டின் Katowice நகரில் நடைபெறவிருக்கின்றது. இது, காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. நடத்தும் 24வது உலக மாநாடாகும். 

உலகளாவிய வெப்பநிலையை 2 டிகிரி செல்சியுசுக்கும் குறைவாக, முடிந்தால் 1.5 டிகிரி செல்சியுசுக்கும் குறைவாக மாற்றும் வழிமுறைகள் பற்றி, போலந்து மாநாட்டில், நாடுகள் கலந்துரையாடவிருக்கின்றன.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளை, இந்த உலக மாநாட்டிற்கு அனுப்பவுள்ளது. (Zenit)

24 November 2018, 15:42