தேடுதல்

மியான்மாரில் திருத்தந்தையுடன் கர்தினால் சார்லஸ் மாங் போ மியான்மாரில் திருத்தந்தையுடன் கர்தினால் சார்லஸ் மாங் போ 

கர்தினால் போ - ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர்

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராக, மியான்மார் நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் - ஆசிய செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராக, மியான்மார் நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

இதுவரை ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றிய மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதி தன் பணிக்காலத்தை நிறைவு செய்வதையடுத்து, 2019ம் ஆண்டு, சனவரி 1ம் தேதி முதல், கர்தினால் போ அவர்கள் பொறுப்பேற்க உள்ளார்.

மியான்மார் நாட்டின் Monhla என்ற ஊரில், 1948ம் ஆண்டு பிறந்த போ அவர்கள், சலேசிய துறவு சபையில் சேர்ந்து, 1976ம் ஆண்டு தன் 28வது வயதில் அருள்பணியாளராக தன் பணிகளைத் துவக்கினார்.

1990ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், அருள்பணி போ அவர்களை, Lashio மறைமாவட்டத்தின் முதல் ஆயராகவும், பின்னர், 2003ம் ஆண்டு, யாங்கூன் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும் நியமனம் செய்தார்.

2000மாம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு முடிய, மியான்மார் ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய பேராயர் போ அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார்.

28 ஆசிய நாடுகளை உள்ளடக்கிய 19 ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பிற்கு, 2011ம் ஆண்டு முதல், தலைவராகப் பணியாற்றிய மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதி தன் பொறுப்புக்களை கர்தினால் போ அவர்களிடம் ஒப்படைக்கிறார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 15:21