பெரு நாட்டு கர்தினால் Pedro Barreto உரையாற்றுகிறார் பெரு நாட்டு கர்தினால் Pedro Barreto உரையாற்றுகிறார் 

மக்களை ஏமாற்றாமல் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்

நாட்டு மக்களுக்கு எல்லா நேரங்களிலும் நீதி கிடைக்க வேண்டுமென்று, பெரு நாட்டின் கத்தோலிக்க திருஅவை அதிகமாக வலியுறுத்தி வருகின்றது - கர்தினால் Barreto

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டு அரசியல்வாதிகள், பொது மக்களிடம் பொய் சொல்லாமல், நியாயமான வழியைப் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பெரு நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் ஆலன் கார்சியா அவர்கள், 18 மாதங்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்ற நீதிமன்றத்தின் ஆணையை, தான் மீறவில்லை என்று பொதுப்படையாக தெரிவித்த சிலமணி நேரங்களுக்குள், உருகுவாய் நாட்டு தூதரகத்தில், அவர் அடைக்கலம் தேடியுள்ளார் என்று, பெரு நாட்டைச் சேர்ந்த கர்தினால் Pedro Barreto  அவர்கள் குறை கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் அரசுத்தலைவர் தனது பதவி காலத்தை முடித்தவுடன் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வு பெரு நாட்டில் இடம்பெற்று வருகின்றது என்று, பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ள, கர்தினால் Barreto அவர்கள், நாடு எதிர்கொள்ளும் குழப்பமான சூழல் குறித்த ஆயர் பேரவையின் கருத்தையும் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு எல்லா நேரங்களிலும் நீதி கிடைக்க வேண்டுமென்று, பெரு நாட்டின் கத்தோலிக்க திருஅவை, குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதிலிருந்து அதிகமாக வலியுறுத்தி வருகின்றதையும் சுட்டிக்காட்டினார், கர்தினால் Barreto.

நாட்டில் தீண்டத்தகாதவர்கள் என யாருமே இல்லை எனவும், நாடு, சட்டத்தின் அடிப்படையில் சென்றுகொண்டிருக்கின்றது எனவும், பெரு நாட்டு நீதித்துறை வெளி உலகுக்கு காட்டி வருகின்றது என்றும், கர்தினால், பீதேஸ் செய்தியிடம் குறிப்பிட்டுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:32