"அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்" (யோவான் 11: 35) "அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்" (யோவான் 11: 35) 

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 9

இலாசரின் மரணத்தைத் தொடர்ந்து, மார்த்தாவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலிலும், இறந்தோர், தொடர்ந்து வாழ்கின்றனர் என்ற எண்ணம், வெளிப்படுவதை உணர்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இலாசரை உயிர்ப்பித்த புதுமை - பகுதி 9

இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் திருநாளை, அண்மையில் நாம், கொண்டாடினோம். நவம்பர் 2ம் தேதி சிறப்பிக்கப்பட்ட இந்நாளில், உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ கல்லறை வளாகங்களில், நாம், நேரத்தைச் செலவழித்திருப்போம். ஒவ்வொரு கல்லறையிலும், இறந்தோரின் பெயர், மற்றும், அவர்களது பிறப்பையும், இறப்பையும் குறிக்கும் தேதிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன், விவிலிய வாசகங்களும், வேறு பல கூற்றுகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இயேசு, மார்த்தாவிடம் கூறிய "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவான் 11:25) என்ற சொற்களை, பல கல்லறைகளில் நாம் வாசித்திருப்போம்.

ஒரு சில கல்லறைகளில், குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் உள்ள கல்லைறைகளில், வேறுபட்ட வாசங்கங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் காணமுடியும். இதோ, ஒரு சில வேறுபட்ட கல்லறை வாசகங்கள்:

"நான் இப்போது இங்கு இல்லை. எனவே, இங்கு வந்து உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்"

"அப்பா, இப்போது, அமைதியில் இளைப்பாருங்கள். அது, உங்களுக்கு மிகவும் தேவைப்பட்டது"

"உங்களுக்குப் புரியாத ஒன்று, இப்போது எனக்குப் புரிகிறது"

கல்லறை வாசகங்கள், மரணத்தையும், மறுவாழ்வையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை வெளிக்கொணர்கின்றன.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர், தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே தீர்மானித்தனர் என்று சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்கள், தன் கல்லறையில் எழுதப்பட வேண்டிய வரிகளை, தன் நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப்போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”

மரணத்தைத் தாண்டி வாழ்வு உண்டு என்ற எண்ணம், பல மதங்களில், பல்வேறு வழிகளில், கூறப்பட்டுள்ளது. இலாசரின் மரணத்தைத் தொடர்ந்து, மார்த்தாவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலிலும், இறந்தோர், தொடர்ந்து வாழ்கின்றனர் என்ற எண்ணம், வெளிப்படுவதை உணர்கிறோம். யூத சமுதாயத்தில் வாழ்ந்த சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இடையே, உயிர்த்தெழுதலைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவின. உயிர்த்தெழுதலையும், மறுவாழ்வையும் சதுசேயர்கள் நம்பவில்லை. பரிசேயர்களோ அதனை நம்பினர். "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" (யோவான் 11:24) என்று இலாசரைக் குறித்து, மார்த்தா, இயேசுவிடம் கூறும்போது, பரிசேயர்கள் வழியே கற்றுக்கொண்ட பாடத்தை அவர் அறிக்கையிடுகிறார்.

மார்த்தாவை, துவக்ககாலக் கிறிஸ்தவர்களின் ஒரு பிரதிநிதியாக உருவாக்கி, அவர் வெளி்யிடும் அறிக்கை வழியே, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை, குறிப்பாக, மறுவாழ்வைக்குறித்து அவர்கள் கொண்டிருக்க வேண்டிய  நம்பிக்கையை, நற்செய்தியாளர் யோவான், இப்புதுமையில் அறிக்கையிட முயன்றுள்ளார் என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர்.

துவக்ககாலக் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, அவர்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல், எப்போதும் அவர்களை நெருக்கிக்கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்டு, அழிந்துபோன தங்கள் முன்னோரை, இறைவன், கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இப்புதுமை வழியே, குறிப்பாக, மார்த்தாவின் சொற்கள் வழியே, நற்செய்தியாளர் யோவான் முயன்றுள்ளார்.

கல்லறையைத் தாண்டிய வாழ்வு உண்டு என்ற எண்ணத்தை, பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர் எசேக்கியேல் வெளிப்படுத்தியுள்ளார். பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை, கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வார் என்று அவர் கூறுகிறார். எலும்புகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில், இறைவனின் ஆவியானவர் உயிர்மூச்சாக வீசியபோது, அந்த எலும்புகள், படிப்படியாக, சதையும், தோலும் பெற்று, உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய், எழுந்து நின்ற அற்புதக் காட்சியை, 37ம் பிரிவில், முதல் 11 இறைவாக்கியங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து, ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

இயேசுவிடம் தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் கொட்டி, ஓரளவு ஆறுதலும், நம்பிக்கையும் பெற்ற மார்த்தா, தன் சகோதரியான மரியாவை அழைத்துவர தன் இல்லம் திரும்பினார். அதற்குப்பின் நிகழ்ந்ததை நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு விவரித்துள்ளார்:

யோவான் 11: 28-29,31-35

மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், "போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்... வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்று மார்த்தா கூறிய அதே சொற்களை, மரியாவும் இயேசுவிடம் கூறுகிறார். (யோவான் 11: 21,32) உயிர்த்தெழுதலைக் குறித்து, மார்த்தாவிடம் பேசிய இயேசு, மரியாவிடம் எதுவும் பேசவில்லை. மரியாவும், சூழ இருந்தவர்களும் அழுத காட்சி, இயேசுவின் உள்ளத்தை வேதனையால் நிறைத்தது. அவரும் கண்ணீர்விட்டு அழுதார்.

மார்த்தா, மரியா, மற்றும் யூதர்கள் ஆகிய அனைவரும் இலாசரைப் பிரிந்த வேதனையில் அழுதனர். அவரை இனி காணமுடியாது என்ற நம்பிக்கையின்மையும் அவர்களின் கண்ணீருக்கு கூடுதல் காரணம் என்பதை நாம் உணரலாம். ஆனால், இயேசுவோ, இலாசர் உயிருடன் எழுவார் என்பதை அறிந்திருந்தாலும், தன் நெருங்கிய நண்பனைப் பிரிந்த வேதனை, அவரிடம் கண்ணீரை வரவழைத்தது.

"அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்" (யோவான் 11: 35) என்று தமிழில் கூறப்பட்டுள்ள இந்த இறைவாக்கியம், ஆங்கிலத்தில், "Jesus wept" என்ற இரு சொற்களால் கூறப்பட்டுள்ளது. விவிலியத்திலேயே மிகக் குறுகிய இறைவாக்கியம் இது என்று சொல்லப்படுகிறது.

இயேசு கண்ணீர் விட்டதாக, லூக்கா நற்செய்தியில் நாம் ஒருமுறை வாசிக்கிறோம். மக்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரத்துடன் எருசலேம் நகருக்குள் நுழைந்த இயேசு, அந்நகரை எண்ணி அழுதார் என்று லூக்கா கூறியுள்ளார்: இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார். (லூக்கா 19:41) என்று கூறப்பட்டுள்ளது.

"இயேசு அழுதார்" என்ற இறைவாக்கியத்தைக் குறித்து திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்கள், பேசியபோது, "இயேசு, ஒரு மனிதர் என்ற முறையில், இலாசருக்காக அழுதார்; அவர், இறைவன் என்ற முறையில், அவரை இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றெழச் செய்தார்" என்று கூறியுள்ளார்.

தன் நண்பன் இலாசரின் மரணத்தால் வேதனையுற்று கண்ணீர் வடித்த இயேசு, அனைவரோடும் சேர்ந்து, கல்லறையை நெருங்குகிறார். கல்லறைக்கு முன் நிகழ்ந்தனவற்றை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2018, 13:43