தேடுதல்

Vatican News
பங்களாதேஷ் அரசியல் தலைவர்கள் பங்களாதேஷ் அரசியல் தலைவர்கள்  (AFP or licensors)

கிறிஸ்மஸ் காலத்தில் தேர்தல்கள் வேண்டாம்

டிசம்பர் இறுதி வாரத்தில் பங்களாதேஷ் நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவது, கிறிஸ் மஸ் கொண்டாட்டங்களைப் பாதிக்கும் என்று அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில், டிசம்பர் இறுதி வாரத்தில் தேர்தல் நடைபெறுவதை மாற்றியமைக்குமாறு அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.

டிசம்பர் இறுதி வாரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நிகழ்வதையும், பொதுவாக, பங்களாதேஷ் தேர்தல்களில் வன்முறைகள் ஏற்படுவதையும் மனதில் கொண்டு, கிறிஸ்தவர்கள் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

பங்களாதேஷ் கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பில், 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத் தலைவர் K.M. Nurul Huda அவர்களை அண்மையில் சந்தித்த வேளையில், இவ்விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர்.

தேர்தல் நாளன்று, அவரவர், தங்கள் தொகுதிகளில் இருக்கவேண்டும் என்பதாலும், தேர்தலையொட்டி நிகழும் வன்முறைகளைத் தடுக்க, காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்பதாலும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் இடம்பெறும் உறவினர்களின் சந்திப்பு, பொருள்கள் வாங்குதல் போன்றவை இடம்பெறாது என்று, கிறிஸ்தவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டனர்.

தேர்தல்களை, டிசம்பர் 20ம் தேதிக்கு முன்னதாகவோ, அல்லது, சனவரி முதல் வாரத்திலோ நடத்தினால், கிறிஸ்தவர்கள், தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்று இக்குழுவினர் தேர்தல் ஆணையத் தலைவரிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

02 November 2018, 14:04