தேடுதல்

மெக்சிகோ வழியே அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல முயலும்  ஹொண்டுராஸ் மக்கள் மெக்சிகோ வழியே அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல முயலும் ஹொண்டுராஸ் மக்கள் 

நாட்டிற்குள் அடைக்கலம் தேடி வருவது குற்றமாகாது - ஆயர்கள்

வறுமையிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும் தப்பிப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடைக்கலம் தேடி வருவது, தண்டனைக்குரிய குற்றமாகாது – அமெரிக்க ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய அமெரிக்காவின் சில நாடுகளிலிருந்து, மெக்சிகோ வழியே, அமெரிக்க ஐக்கிய நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கும் மக்களை, நல்மனம் கொண்ட அனைவரும், கருணையுடன் கண்ணோக்கவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வறுமையிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும் தப்பிப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடைக்கலம் தேடி வருவது, தண்டனைக்குரிய குற்றமாகாது என்று கூறும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், இம்மக்களைத் தடுத்து நிறுத்த, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை, மெக்சிகோ எல்லைக்கு, அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அனுப்பியுள்ளது குறித்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

தன் நாட்டு எல்லைகளைப் பாதுக்காக்கும் கடமையும், உரிமையும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு உள்ளபோதிலும், அநீதி, வன்முறை, பொருளாதார சீர்குலைவு ஆகிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாண்புடன் நடத்தி, அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்யவேண்டிய கடமையும் தங்கள் நாட்டு அரசுக்கு உள்ளது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், குடியேற்றத்தாரர் பணிக்குழு கூறியுள்ளது.

இத்தகையப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மத்திய அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், அமெரிக்க ஐக்கிய நாடு, முதலீடுகளை அந்நாடுகளில் செய்யவேண்டும் என்றும், ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:35