மக்களுக்கு வந்திருக்கும் உதவிப் பொருள்களைக் கணக்கெடுக்கும் இந்தோனேசியப் படைவீரர்கள் மக்களுக்கு வந்திருக்கும் உதவிப் பொருள்களைக் கணக்கெடுக்கும் இந்தோனேசியப் படைவீரர்கள் 

இந்தோனேசியாவில் கத்தோலிக்க அமைப்புகளின் உதவிகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்ய, கத்தோலிக்க அமைப்புகள் இணைந்து வந்துள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் Sulawesi தீவில் உருவான நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்ய, கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களும், தலத்திருஅவையும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இந்தோனேசியாவின் காரித்தாஸ் அமைப்பு, கத்தோலிக்க துயர் துடைப்பு பணிகள், மற்றும் பல்வேறு மறைமாவட்டங்களின் பணிக்குழுக்கள் இணைந்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால், அப்பகுதியில் அமைந்திருந்த விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்குத் தேவையான உதவிகளை விமானங்கள் வழியே கொண்டு செல்வது கடினமாகியுள்ளது என்றும், பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் காரணமாக, சாலை வழி உதவிகளும் தாமதமாகின்றன என்றும் காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், இதுவரை, 1407 பேர் இறந்துள்ளனர் என்றும், இன்னும் பலரது நிலை அறியப்படவில்லை என்றும் ஊடங்கங்கள் கூறுகின்றன. 

இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கருகே, Soputan எனுமிடத்தில் எரிமலையிலிருந்து சாம்பல் வெளிப்பட துவங்கியுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை .விடப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 16:51