Cerca

Vatican News
புனித பூமியின் துறவு இல்லம் புனித பூமியின் துறவு இல்லம்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 8

ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக ஒன்றிப்பை உருவாக்கியதில், அதாவது ஐரோப்பாவை உருவாக்கியதில், திருஅவையின் தலைமைத்துவம் முக்கிய பங்காற்றியது.

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்கள், உரோம் நகரில் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அறிவும், திறமையும் நிறைந்தவர். இவர் திருத்தந்தையாகப் பணியேற்பதற்குமுன்னர், பொது வாழ்விலிருந்து ஒதுங்கி, ஒரு துறவு இல்லத்தில் தனிமை வாழ்வை நடத்தினார். 590ம் ஆண்டில் திருத்தந்தை 2ம் பெலாஜியுஸ் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, இவர் திருத்தந்தை பணியை ஏற்க வேண்டுமென பொது மக்கள் வற்புறுத்தினர். அதனால் திருத்தந்தை பணியை ஏற்றார். மத்திய இத்தாலியை ஆட்சி செய்த அதிகாரிகள், திறமையற்றவர்களாய் இருந்ததால், அந்தப் பொறுப்பை தானே ஏற்றார். மேற்கத்திய திருஅவைகள் மீது, திருத்தந்தையின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தியதுடன், நாகரீகமற்ற பழங்குடி இனத்தவரையும், ஆங்லோ-சாக்சன் (Anglo-Saxon) இனத்தவரையும் மனமாற்றுவதில் கவனம் செலுத்தினார். இவர் திருத்தந்தை  புனித பெரிய கிரகரி எனவும் போற்றப்படுகிறார்.

ஆங்லோ-சாக்சன் எனப்படுபவர்கள், ஏறத்தாழ 410ம் ஆண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், ஜெர்மனியின் Angeln மற்றும் Saxony பகுதியிலிருந்து பிரிட்டன் சென்ற பழங்குடி மக்கள் ஆவர். 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உரோமைப் பேரரசின் மத்திய பகுதி நலிவடைந்து வந்ததால், அதனைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டனில் இருந்த உரோமை இராணுவம், பிரிட்டனிலிருந்து சென்றுவிட்டது. அப்போது உரோமை இராணுவம், பிரிட்டனை அவ்வளவு மதிப்புக்குரியதாக கருதவில்லை. அதேநேரத்தில், டென்மார்க்கிலிருந்து Jute மற்றும் Frisian இனத்தவரும் பிரிட்டன் தீவுகளில் குடியேறினர். ஆயினும், இப்புதிய பூமியில், ஆங்லோ-சாக்சன்கள், தாங்களே முதலாளிகளாக, சிறுசிறு அரசுகளை அமைத்து ஆளத் தொடங்கினர். உரோமையர்கள் விட்டுச்சென்ற மரபுகளைக் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. உரோமையர்களின் கல் கட்டடங்களையெல்லாம், இவர்கள் மரத்தாலான கட்டடங்களாக மாற்றினர். இந்த ஆங்லோ-சாக்சன்கள், தங்களின் மத நம்பிக்கைகளைப் பின்பற்றினர். இவர்கள் தங்களின் மொழியைப் பேசினர். இதுவே இப்போது பேசப்படும் ஆங்கில மொழியாகும். கி.பி.410ம் ஆண்டிலிருந்து 1066ம் ஆண்டுவரை, 600 ஆண்டுகளுக்கு மேலாக, ஆங்லோ-சாக்சன் இனத்தவர், பிரிட்டனை ஆக்ரமித்திருந்தனர். அந்த ஆண்டுகளில் பிரிட்டனின் அரசியல் அமைப்பு பல மாற்றங்களைக் கண்டது.

திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், ஆங்லோ-சாக்சன்கள் மத்தியில் மறைப்பணியாற்ற ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரு கதை சொல்லப்படுகின்றது. ஒருமுறை இவர், உரோம் அடிமைச் சந்தைக்கு அருகில் நடந்துகொண்டிருந்தவேளை, சில இளம் ஆங்லோ இனத்தவர் விற்பனைக்காக அங்கு நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். பார்ப்பதற்கு இவ்வளவு அழகாகத் தெரியும் இந்த இளையோர், இருளின் அடிமைகளாக வாழ்வதா என்று கவலைப்பட்டார். அந்த இளையோர் தங்களை Angliயர் என அறிமுகப்படுத்தியபோது, திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், உடனே  Angeli (Angles) களின் முகங்களை, அதாவது வானதூதர்களின் முகங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் விண்ணகத்திலுள்ள தூதர்களின் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். அந்த இளையோர் மீண்டும், தாங்கள் Deiraவிலிருந்து வருகின்றவர்கள் எனச் சொன்னதும், திருத்தந்தை அவர்கள், உடனடியாக,  de ira Dei அதாவது கடவுளின் சினத்திலிருந்து  காப்பாற்றப்பட்டவர்கள் என்றும் பதில் சொன்னார். அந்த ஆங்லோ இளையோரின் அரசரின் பெயர் Aelle என்றதும், ஓ, அந்த நிலத்தில் அல்லேலூயா பாடப்பட்டிருக்க வேண்டும் என மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். பின்னாளில்,  திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், உரோம் நகரைச் சேர்ந்த துறவி புனித அகுஸ்தீன் என்பவரை ஆங்லோ-சாக்சன் பகுதிக்கு மறைப்பணியாற்ற அனுப்பினார். 597ம் ஆண்டில் புனித அகுஸ்தீன் அவர்கள், பிரிட்டனுக்குச் சென்றார். Kent நகரின் அரசர் Aethelbert அவர்கள் மிக விரைவில் கிறிஸ்தவராக மாறினார். ஆங்லோ-சாக்சன்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறினர். புதிதாக உருவான இங்கிலாந்து திருஅவையோடு திருத்தந்தை நெருங்கிய உறவு வைத்திருந்தார். திருத்தந்தையரின் இந்த உறவு, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் காக்கப்பட்டன.

மாபெரும் புனிதர் போனிபாஸ் (கி.பி.754) அவர்கள் போன்று, இங்கிலாந்திலிருந்து மறைப்பணியாளர்கள் ஜெர்மனியின் உள்நாட்டுப் பகுதியை மனந்திருப்புவதற்காகச் சென்றனர். அவர்கள் எல்லாருமே உரோம் திருத்தந்தையோடு ஒரு பிள்ளைக்குரிய பாசத்தோடு தொடர்பு வைத்திருந்தனர். அதன் பயனாக, மேற்கு ஐரோப்பா முழுவதும், உரோம்  திருத்தந்தையோடு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இஸ்பானியத் திருஅவையும் உரோம் நகருடன் நெருங்கிய தொடர்பு வைக்கச் செய்தார் இவர். ஆரியனிசக் கொள்கையைப் பின்பற்றிய Visigothic இன அரசர் Recared என்பவர், ஆரியனிச கொள்கையாளர்களுக்கும், கத்தோலிக்க ஆயர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தைக் கேட்டபின்னர், அந்த அரசரும் கத்தோலிக்கத்தைப் பின்பற்றினார். திருத்தந்தை பெரிய கிரகரி, திருத்தந்தையாகப் பதவியேற்ற குறுகிய காலத்தில் இது இடம்பெற்றது. லொம்பார்தி இனத்தவர் கத்தோலிக்கத்தைப் பின்பற்றச் செய்தார். சீரழிந்திருந்த பழைய கலாச்சாரத்திலிருந்து ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக ஒன்றிப்பை உருவாக்கியதில், அதாவது ஐரோப்பாவை உருவாக்கியதில், திருத்தந்தை மற்றும் திருஅவையின் தலைமைத்துவம் முக்கிய பங்காற்றியது.  

10 October 2018, 15:39