தேடுதல்

Vatican News
லெபனனில் வாழும் சிரியா புலம் பெயர்ந்தோர் லெபனனில் வாழும் சிரியா புலம் பெயர்ந்தோர்  (AFP or licensors)

சிரியா புலம்பெயர்ந்தோருக்கு கிறிஸ்தவ அமைப்பால் புது வாழ்வு

சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரை, ஐரோப்பாவிற்குள் வரவேற்று, குடியமர்த்தி, நல் வாழ்வை அமைத்துக் கொடுக்கும் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்புகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டில் வாழும் சிரியா நாட்டு புலம் பெயர்ந்தோருள் 83 பேருக்கு, சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பும், இத்தாலிய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து,  இத்தாலியில் புகலிடம் வழங்க உள்ளன.

புலம்பெயர்ந்த சிரியா மக்களை சட்டப்பூர்வமாக ஐரோப்பாவிற்குள் கொணர்ந்து, அவர்களுக்கு புது வாழ்வை வழங்குதில் கவனம் செலுத்திவரும் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பும், கிறிஸ்தவ சபையினரும், இப்புதனன்று, லெபனானிலிருந்து வருகைதரும் 83 புலம்பெயர்ந்தோரை, உரோம் விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, 2100 புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய உதவியுள்ளனர்.

2016ம் ஆண்டு, பிப்ரவரி முதல், சிரியா நாட்டு புலம் பெயர்ந்தோருடன் இப்பணியை ஆற்றிவரும் கிறிஸ்தவ அமைப்புகள், அவர்களை ஐரோப்பாவிற்குள் வரவேற்பதுடன், அவர்களை குடியமர்த்தி, சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.

இத்தாலிக்குள் குடியேறும் புலம் பெயர்ந்தோருக்கு மொழியைக் கற்றுக்கொடுத்தல், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல் போன்ற பணிகளை இத்தாலியக் குடிமக்களின் நிதி உதவியுடனேயே ஆற்றுவதாக, இந்த கிறிஸ்தவ பிறரன்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

30 October 2018, 16:19