தேடுதல்

பர்த்திமேயுவுக்கு இயேசு பார்வையளிக்கும் புதுமை பர்த்திமேயுவுக்கு இயேசு பார்வையளிக்கும் புதுமை 

பொதுக்காலம் 30ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

281018 ஞாயிறு சிந்தனை

கடந்த 24 நாள்களாக, வத்திக்கானில் நடைபெற்றுவந்த 15வது உலக ஆயர்களின் மாமன்றம், இஞ்ஞாயிறு நிறைவுக்கு வந்துள்ளது. “இளையோர், நம்பிக்கையும், அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலும்” என்ற மையக்கருத்துடன், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில், 34 இளையோர் உட்பட, 300க்கும் அதிகமான மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், வழிநடத்தி வந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

நிறைவுற்ற மாமன்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட Instrumentum Laboris என்ற ஏட்டின் முதல் வரிகளிலேயே, இம்மாமன்றத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:

இளையோரைப் பேணிக்காக்கும் பணி, திருஅவை, தனக்கு விருப்பமானால், தெரிவு செய்யும் பணி அல்ல. மாறாக, அது, திருஅவையின் அழைத்தலிலும், பணியிலும் இணைபிரியாத அங்கம். இதுவே, மாமன்றத்தின் நோக்கம். எம்மாவுஸ் ஊரை நோக்கிச் சென்ற சீடர்களுடன் இணைந்து நடந்த இயேசுவைப்போல் (லூக்கா 24 13-25) திருஅவையும் அனைத்து இளையோருடனும், அன்பின் மகிழ்வை நோக்கி நடந்துசெல்லத் தூண்டப்படுகிறது.

எம்மாவுஸ் சென்ற சீடருடன் இயேசு நடந்து சென்றபோது, அச்சீடர்களின் அகக்கண்களை அவர் படிப்படியாகத் திறந்தார் என்பதை அறிவோம். இந்தப் பயணத்தை உருவகமாகக் கொண்டு நடைபெற்ற ஆயர்கள் மாமன்றம் நிறைவடையும் இஞ்ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் நிகழ்வு, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

எம்மாவுஸ் பயணத்தில், பேசுதல், செவிமடுத்தல், காணுதல் என்ற மூன்று புலன் திறமைகளின் வழியே, சீடர்கள் இருவரும் உள்ளொளி பெற்றனர். இதே திறமைகளை, உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விழைந்தார். அக்டோபர் 3ம் தேதி, புதனன்று, இம்மாமன்றத்தின் துவக்கத் திருப்பலியில், திருத்தந்தை கூறியச் சொற்கள், மாமன்றப் பிரதிநிதிகளுக்கும், நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளன:

"நம்பிக்கை, நமக்குச் சவால் விடுக்கின்றது. 'எப்போதும் இவ்வாறுதான் செய்யப்பட்டது' என்று பரம்பரைப் பழக்கங்களைத் தாங்கிப்பிடிக்கும் மனநிலையைத் தகர்க்க சவால் விடுக்கின்றது. நம் இளையோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவர்கள் வாழும் சூழல்களையும் கூர்ந்து பார்க்க, நம்பிக்கை, நம்மைத் தூண்டுகிறது."

துவக்கத் திருப்பலிக்குப் பின், அன்று பிற்பகல், மாமன்றத்தின் முதல் அமர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய துவக்க உரையில், துணிவுடன் பேசுதல், கவனமுடன் செவிமடுத்தல் என்ற இரு அம்சங்கள் மாமன்றப் பகிர்வுகளில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இளையோரின் கருத்துக்களுக்குச் செவிமடுப்பது, சவால் நிறைந்த பணி என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, "செவிமடுக்காத திருஅவை, புதியனவற்றைக் காணாமல், இறைவனின் ஆச்சரியங்களைக் காணாமல், தன்னையே மூடிக்கொள்ளும் திருஅவையாகத் தோன்றும். அத்தகையத் திருஅவை, இளையோரிடையே நம்பகத்தன்மையை இழந்துவிடும். இளையோர், திருஅவையை நாடிவருவதற்குப் பதில், விலகிச் செல்வர்" என்று கூறினார்.

திறந்த கண்ணோட்டம் கொண்ட திருஅவையே இளையோரைக் கவர்ந்திழுக்கும் என்பதை, மாமன்ற அமர்வுகளில் தாங்கள் கற்றுக்கொண்டதாக, ஒரு சில ஆயர்கள், தங்கள் பகிர்வுகளில் கூறியுள்ளனர். இத்தகைய கண்ணோட்டத்தை அளித்த மாமன்றம் முடிவுறும் இத்தருணத்தில், பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு, இயேசு, பார்வை தந்த புதுமை, இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளதை, இறைவன் நமக்கு வழங்கும் அருள்நிறை வாய்ப்பாக எண்ணிப்பார்க்கலாம். இப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள்.

இந்தப் புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவற்றில், நற்செய்தியாளர் மாற்கு மட்டும், பார்வையற்று, தர்மம் கேட்டு வாழ்ந்த அம்மனிதருக்கு, பெயர் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள புதுமைகளில், குணமடைந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர், பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.

பெயர் சொல்லி அழைப்பது... என்ற நம் முதல் எண்ணத்தில், இரு வேறு பக்கங்கள் உள்ளன. அவை, எதிரெதிர் துருவங்களாய் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர், அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அவரை இழிவுபடுத்தும், இருள் சூழ்ந்த பக்கம்.

ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவராக பணியாற்றுபவரை, பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது, கூடுதலான மரியாதை வெளிப்படும். இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்ற அடைமொழிகளுடன் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும், தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட, மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.

இனி நாம் சிந்திக்க இருப்பது, பெயர் சொல்லி அழைப்பதன் இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர் ஆகியோரை, நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகளைப் பயன்படுத்தி அவர்களை அழைக்கும்போது, அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் இயற் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. எனவே, அவர்கள் எல்லாருமே, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களால் அழைக்கப்படுகின்றனர். இந்திய சமுதாயத்தை பீடித்துள்ள சாபமான சாதிகளின் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு, கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர் சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை. நம் அகக்கண்களைக் குருடாக்கும் பழக்கங்கள்.

நம் அகக்கண்கள் பார்வை இழந்திருந்தால், அதற்கு இறைவன் பார்வைத்திறன் தரவேண்டும் என்று மன்றாடுவோம். ஒருவரை, பெயர்சொல்லி அழைக்கும்போது, அழைப்பவரும், அழைக்கப்படுபவரும் மாண்பு பெறும் புதுமைகள் நடப்பதை, வாழ்வில் உணரமுயல்வோம்.

பார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார்.

இயேசுவின் சீடர்களான யாக்கோபும், யோவானும், அவரது இருபுறங்களிலும் அரியணைகளில் அமர விரும்பியதை, சென்ற வார நற்செய்தியாகக் கேட்டோம். அதைத் தொடர்ந்து, பார்வையற்ற பர்த்திமேயுவின் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இவ்விரு நிகழ்வுகளையும், நற்செய்தியாளர் மாற்கு, ஒன்றன்பின் ஒன்றாக, உடனுக்குடன் இணைத்திருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

சென்ற வாரம் நாம் வாசித்த நற்செய்தியில், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" (மாற்கு 10:36) என்று இயேசு, யாக்கோபு, யோவான் இருவரிடமும் கேட்டபோது, அவர்கள், இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். அதே கேள்வியை, இயேசு, இன்றைய நற்செய்தியில், பர்த்திமேயுவிடமும் கேட்கிறார். "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" (மாற்கு 10:51) என்று இயேசு கேட்டதும், அவர் பார்வை பெற விழைவதைக் கூறுகிறார்.

யாக்கோபும், யோவானும், கண்களில் தெளிவானப் பார்வைத்திறனைப் பெற்றிருந்தாலும், இயேசு யார் என்ற உண்மை நிலையைக் காண இயலாதவண்ணம், அரியணை ஆசை, அவர்களின் அகக்கண்களை குருடாக்கி இருந்தது. ஆனால், உடலளவில் பார்வைத்திறன் அற்றிருந்த பர்த்திமேயுவோ, இயேசுவை, அகக்கண்களால் "தாவீதின் மகன்" என்று உணர்ந்திருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, அதேவைளை, உள்ளத்தளவில் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.

கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."

அகக்கண் கொண்டு பார்க்கும் அற்புதத்தைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. மருத்துவமனை ஒன்றில், இருவர், ஒரே அறையில் தங்கி இருந்தனர். இருவரும் ஏறத்தாழ படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். அவ்விருவரில், ஒருவருடைய படுக்கை, சன்னலுக்கருகில் இருந்தது. அவர், ஒவ்வொரு நாள் மதியமும், மிகவும் சிரமப்பட்டு, தன் படுக்கையிலேயே, ஒரு மணி நேரம், எழுந்து அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும், சன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று, அவரது வர்ணனை ஒரு மணி நேரம் நீடிக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர், அந்த ஒரு மணி நேரம், கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக, வெளி உலகைப் பார்த்தார்.

இது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, சன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்தைய இரவு, தூக்கத்திலேயே, அமைதியாக, அவர் இறந்துபோனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே, அவர் தந்த வர்ணனை வழியே, தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம், இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று, இன்னும் அதிக வருத்தம்.

இரு நாட்கள் சென்றபின், அந்த சன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார். மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்" என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். சன்னல் வழியே வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை, ஒன்றும் இல்லை.

அவருடைய அதிர்ச்சியைக் கண்ட நர்ஸ், அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி, இந்தப் படுக்கையில் இருந்தவர், சன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர், அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது என்று, நர்ஸ் சொன்னது, அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும், ஓர் அழகான உலகைக் காண்பதற்கு, கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். சன்னலை வைத்து சொல்லப்படும் மற்றொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வந்தனர். அந்தப் பெண்மணி, அடுத்தநாள் காலையில், காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு" என்று அப்பெண் தன் கணவனிடம் முறையிட்டார். இந்த முறையீடு, மூன்று நாட்கள் தொடர்ந்தன.

நான்காம் நாள் காலையில், வழக்கம் போல், சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு" என்று வியந்து பாராட்டினார்.

கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம வீட்டு சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னார்.

பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

இறுதியாக, இன்று நிறைவுறும் ஆயர்கள் மாமன்றத்தின் பயனாக, இளையோர் கூடுதலான உந்து சக்தி பெற்று, இவ்வுலகையும், கத்தோலிக்கத் திருஅவையையும் வழிநடத்திச் செல்ல, இறைவன் அவர்களுக்கு துணை புரிய வேண்டுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் ஆறுதலான சொற்களை, இன்றைய இளையோரை நோக்கி அவர் கூறுவதாக கற்பனை செய்து, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

இறைவாக்கினர் எரேமியா 31:8-9

இதோ! மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2018, 17:09