தேடுதல்

புனிதர்களாக உயர்த்தப்படும் அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல் மற்றும் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ புனிதர்களாக உயர்த்தப்படும் அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல் மற்றும் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ 

பொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை

ஒரு திருத்தந்தை, ஒரு பேராயர், இரு மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இரு அருள் சகோதரிகள், மற்றும், பொதுநிலையினரான ஓர் இளையவர் என்று, ஏழு அருளாளர்கள், புனிதர்களாக உயர்த்தப்படும் இஞ்ஞாயிறன்று, புனிதத்தைப் பற்றி சிந்திப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

141018 ஞாயிறு சிந்தனை

"புனிதம் ஒருசிலருக்கு மட்டும்தானா? இல்லை. நாம் ஒவ்வொருவரும் புனிதராக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தொட்டுவிடக்கூடியக்கூடிய தூரத்தில்தான் புனிதம் உள்ளது. அதற்குத் தேவையானதெல்லாம் இரண்டே அம்சங்கள்: இறைவனின் அருள், மற்றும், நமது நல்ல மனம்"

புனிதத்தைக் குறித்த இந்த எளிமையானச் சொற்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், 1966ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதி, புதன்கிழமை, ஒலித்தன. அன்று, அவ்வளாகத்தில் நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள சிறுவர், சிறுமியர் பெருமளவில் வந்திருந்தனர். புனிதம் என்றால் என்ன என்பதை, அவர்களுக்குப் புரியும் வகையில், எளிய சொற்களில் அன்று சொன்னவர், திருத்தந்தை 6ம் பவுல்.

"நாம் இறைவனின் கருவிகளேயன்றி வேறெதுவும் இல்லை என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொள்ளும் அத்தருணம், மிக அழகானது. நாம் எவ்வளவு காலம் வாழவேண்டுமென்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு காலம் மட்டுமே நாம் வாழ்கிறோம். நாம் எவ்வளவு செய்யமுடியும் என்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு மட்டுமே நம்மால் செய்யமுடியும்" - சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றிய வேளையில் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் கூற்றாக, "அன்பின் வன்முறை" (The Violence of Love) என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள சொற்கள் இவை.

‘நாம் தொட்டுவிடக்கூடியக்கூடிய தூரத்தில்தான் புனிதம் உள்ளது’ என்று கூறிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், 'நாம் இறைவனின் கருவிகள் என்பதைப் புரிந்துகொள்வதே மிக அழகானது' என்று கூறிய பேராயர் ரொமேரோ அவர்களும்,  இஞ்ஞாயிறன்று, புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.

ஒரு திருத்தந்தை, ஒரு பேராயர், இரு மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இரு அருள் சகோதரிகள், மற்றும், பொதுநிலையினரான ஓர் இளையவர் என்று, ஏழு அருளாளர்கள், புனிதர்களாக உயர்த்தப்படும் இஞ்ஞாயிறன்று, புனிதத்தைப் பற்றியும், புனிதர்களைப் பற்றியும் சிந்திப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருஅவையால் புனிதர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், மற்றும், புனிதர் என்று அறிவிக்கப்படாமலேயே மக்களால் புனிதர்கள் என்று கருதப்படுவோர் அனைவரும், தங்கள் வாழ்வுப் பாதையில், முக்கியமான தருணங்களில், உன்னத முடிவுகளை எடுத்ததால், இன்று, முடிவெடுக்கும் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் வழிகாட்டிகளாக மாறியுள்ளனர்.

அனைத்தையும் அறிந்து, தெளிந்து தெரிவு செய்து, முடிவுகள் எடுக்கும் திறமை மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள தனித்துவமான திறமை. இத்திறமையை மையப்படுத்தி, தற்போது உலக ஆயர்கள் மாமன்றம், “இளையோர், நம்பிக்கை மற்றும் அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தல்” (Young People, the Faith and Vocational Discernment) என்ற மையக்கருத்துடன் நடைபெற்று வருகிறது. முடிவுகள் எடுப்பதை பற்றி கூறும் நற்செய்தியும் இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வில் முக்கியமான முடிவெடுக்கும் நிலையில் இருந்த ஓர் இளையவர், "நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" - மாற்கு 10:17 என்ற கேள்வியுடன் இயேசுவைத் தேடி வந்த நிகழ்வை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். அவரிடம் இயேசு, கட்டளைகளைக் கடைபிடித்தாலே நிலைவாழ்வை அடையலாம் என்று கூறுகிறார். தான் இளவயதுமுதல் கட்டளைகளைக் கடைபிடித்து வருவதாகக் கூறிய இளையவர், அந்த அடிப்படை நிலையைத் தாண்டி, இன்னும் தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கும்போது, இயேசு அவருடைய வாழ்வைப் புரட்டிப்போடும் வண்ணம் ஓர் ஆலோசனை வழங்குகிறார்:

மாற்கு 10: 21-22

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

புனிதர்கள் அனைவரும், தாங்கள் எடுத்த முக்கியமான முடிவுகளில் இறைவனின் துணையைக் கட்டாயம் நாடியிருப்பர் என்பது உறுதி. அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போடும் வண்ணம் இயேசு சவால்களை முன்வைத்தபோது, அவர்கள் தயங்காமல் அவற்றை ஏற்றதால், இன்று புனிதர்களாக நம்முன் உயர்ந்து நிற்கின்றனர். வாழ்வை முற்றிலும் புரட்டிப்போடும் முடிவுகளை, புனிதர்கள் எடுத்தனர் என்பதற்கு, இஞ்ஞாயிறு, புனிதராக உயர்த்தப்படும் பேராயர் ரொமேரோ அவர்கள், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

1917ம் ஆண்டு பிறந்த ஆஸ்கர் அர்னுல்ஃபோ ரொமேரோ (Óscar Arnulfo Romero) அவர்கள், தன் 25வது வயதில் அருள்பணியாளராகவும், 53வது வயதில் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றவர். 1970ம் ஆண்டு, அருள்பணி ரொமேரோ அவர்களை ஆயராக நியமனம் செய்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஏழு ஆண்டுகள் சென்று, அவரை, சான் சால்வதோரின் பேராயராகவும் நியமனம் செய்தார்.

1977ம் ஆண்டு, தன் 60வது வயதில், ரொமேரோ அவர்கள், சான் சால்வதோர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றபோது, அந்நகரின் செல்வந்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராயர் ரொமேரோ அவர்கள், கோவில், சார்ந்த பணிகளை மட்டுமே ஆற்றுவார், சமுதாயப் பிரச்சனைகளில் தலையிடமாட்டார் என்று அவர்கள் எண்ணியதால் மகிழ்ந்தனர். அதே வேளையில், சான் சால்வதோர் நகரில், 'மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழக'த்தை (Central American University) நடத்திவந்த இயேசு சபையினர் மனம் உடைந்துபோயினர். அவர்களைப் பொருத்தவரை, பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார் என்று எண்ணியதால், இந்த மனநிலை அவர்களுக்கு உருவானது.

அதே பல்கலைக் கழகத்தில் பணியாற்றி, பின்னர், வறுமைப்பட்ட விவசாயிகள் நடுவில் உழைத்துவந்த இயேசு சபை அருள் பணியாளர், ருத்தீலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், பேராயர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய நீதி குறித்து இருவருக்கும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு.

1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ரொமேரோ அவர்கள் பேராயர் பொறுப்பை ஏற்று இரு வாரங்கள் சென்று, மார்ச் 12ம் தேதி, அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்கள் கொல்லப்பட்டார். கொலையுண்டு கிடந்த நண்பர் கிராந்தேயின் சடலத்திற்கு முன், பேராயர் ரொமேரோ அவர்கள், முக்கியமானதொரு முடிவெடுத்தார்.

தன் நண்பர் கிராந்தேயின் அடக்கச் சடங்கில் பேராயர் ஆற்றிய மறையுரை, எல் சால்வதோர் நாட்டின் அதிகார வர்க்கத்தை அதிர்ச்சியடையச் செய்தது. வறியோரும் அந்த மறையுரையைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அது ஆனந்த அதிர்ச்சி. அருள்பணி கிராந்தே அவர்களுக்குப் பதிலாக, தங்கள் சார்பில் போராட, பேராயர் ரொமேரோ அவர்கள் கிடைத்ததை எண்ணி, வறியோர், ஆனந்தம் அடைந்தனர்.

பேராயர் ரொமேரோ அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள், வத்திக்கானிலும் அதிர்வலைகளை உருவாக்கின. அவரைக் குறித்து வத்திக்கானில் நிலவிய வதந்திகளை பொருட்படுத்தாது, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பேராயர் மீது தனி மதிப்பு வைத்திருந்தார் என்று, வரலாற்றுப் பேராசியர், ரொபெர்த்தோ மொரோஸோ (Roberto Morozzo della Rocca) அவர்கள் கூறியுள்ளார். அருள்பணி கிராந்தே அவர்கள் கொலை செய்யப்பட்ட சில நாட்களில், அதாவது, 1977ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள் வத்திக்கானுக்குச் சென்று, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்தார்.

இதற்குப்பின், அடுத்த ஆண்டே மீண்டும் இவ்விருவரும் இரண்டாம் முறையாகச் சந்தித்தபோது, தன்னை உற்சாகப்படுத்தி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், மீண்டும் தன் நாள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்: "நீங்கள் ஆற்றும் பணி மிகக்கடுமையானது என்பது எனக்குத் தெரியும். பலர் உங்கள் செயல்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் போகலாம். எல்லாரும் உங்களைப்போல் சிந்திப்பதும் இல்லை. உங்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், அனைவரும் ஒருமித்த எண்ணம் கொண்டிருப்பது இயலாது. இருப்பினும், நீங்கள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், துணிவுடனும் முன்னேறிச் செல்லுங்கள்" என்று திருத்தந்தை தன்னிடம் கூறியச் சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், தன் மறையுரையிலும் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் ஆதரவையும், ஆசீரையும் பெற்றிருந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இன்னும் தீவிரமாக தன் நீதிப்பணியில் ஈடுபட்டார்.

எல் சால்வதோர் நாட்டில், தொடர்ந்து நடந்துவந்த கொலைகளையடுத்து, பேராயர் ரொமேரோ அவர்கள், இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். அரசாலும், செல்வந்தராலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்பு தரும் புகலிடமாக, மறைமாவட்டத்தின் குருமாணவர் இல்லத்தின் கதவுகளைத் திறந்துவைத்தார். நூற்றுக்கணக்கான வறியோர் அங்கே தஞ்சம் அடைந்தனர்.

சான் சால்வதோரில் எழுப்பப்பட்டு வந்த புதிய பேராலயத்தின் பணிகளை உடனடியாக நிறுத்தச் சொன்னார். ‘உள்நாட்டுப் போர் முடியட்டும்; ஏழைகள் வயிறு நிறையட்டும்; குழந்தைகள் நல்ல கல்வி பெறட்டும்... பின்னர், நமது பேராலயத்தைக் கட்டுவோம்’ என்று பேராயர் ரொமேரோ அவர்கள் தெளிவாகக் கூறினார். அவர் எடுத்த இந்த இரு முடிவுகளும் தலத்திருஅவையின் புரட்சியை இன்னும் ஆழப்படுத்தின.

1980ம் ஆண்டு, மார்ச் 23ம் தேதி, தவக்காலத்தின் 5ம் ஞாயிறன்று, பேராயர் ரொமேரோ அவர்கள் வழங்கிய மறையுரையின் இறுதியில், ஆயுதம் தாங்கி, மக்களை வதைத்துவந்த மரணப்படை வீரர்களுக்கு ஒரு சிறப்பான அறிவுரை வழங்கினார்:

“சகோதர வீரர்களே, இந்நாட்டு மக்கள் மத்தியில்தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும்படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும், இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற கட்டளைக்கு அடிபணிய வேண்டும். இறை கட்டளையை மீறி, உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்குக் கீழ்படிவதைவிட, உங்கள் மனசாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக்கொண்டு திருஅவை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அடக்குமுறையை உடனடியாக நிறுத்துங்கள்.” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

அந்த மறையுரையை வழங்கியதற்கு அடுத்தநாள், மார்ச் 24ம் தேதி, கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவுக்கு முந்திய நாள், பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது, சுட்டு கொல்லப்பட்டார்.

இறையரசின் நீதியை நிலைநாட்ட, பேராயர் ரொமேரோ அவர்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, அவரை மறைசாட்சிய மரணம் வரை அழைத்துச் சென்றது. அதேபோல், இஞ்ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் எடுத்த முக்கியமான முடிவுகள் அவர்களை உன்னத நிலைக்கு உயர்த்தின. இந்த ஏழு புனிதர்களில், ஒருவர், நுன்சியோ சுல்ப்ரீசியோ (Nunzio Sulprizio) என்ற 19 வயது நிறைந்த இளையவர். இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெறும் புனிதர் பட்ட விழாவில் 19 வயது இளையவர் புனிதராவது இளையோருக்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என்று நம்புகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, தன்னைச் சந்திக்க வந்த இளையவரை அன்பொழுகப் பார்த்ததுபோல், இன்றைய இளையோரை அன்பொழுகக் காணவேண்டும் என்றும், புனிதத்தில் வாழ, இயேசு விடுக்கும் சவால்கள் நிறைந்த அழைப்பை ஏற்கும் துணிவை, இளையோர் பெறவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2018, 14:48