தேடுதல்

Vatican News
அருளாளர் ஆஸ்கர் ஆர்னுல்போ ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள்களுடன் அருளாளர் ஆஸ்கர் ஆர்னுல்போ ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள்களுடன் 

அருளாளர் ரொமேரோ புனிதப்பொருள், பானமா நாட்டில்...

புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள், பானமா நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கென அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்களில் ஒருவரான, அருளாளர் ஆஸ்கர் ஆர்னுல்போ ரொமேரோ (Óscar Arnulfo Romero) அவர்களின் புனிதப் பொருள், அக்டோபர் 2, இச்செவ்வாயன்று, பானமா நாட்டை அடைந்தது.

அருளாளர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டபோது, அவர் அணிந்திருந்த உடையின் இரத்தம் தோய்ந்த ஒரு துண்டு, புனிதப் பொருளாக, பானமாவின் புனித தொன் போஸ்கோ பசிலிக்காவை அடைந்த வேளையில், அதனை, பானமா பேராயர், José Domingo Ulloa அவர்கள் வரவேற்றார்.

அருளாளர் ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள், பானமா நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படும் என்றும், 2019ம் ஆண்டு சனவரி மாதம், அங்கு நடைபெறும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளின் போது, இப்புனிதப் பொருளும் இளையோரின் வணக்கத்திற்காக வைக்கப்படும் என்றும், பானமா உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 14, ஞாயிறன்று, அருளாளர்களான ரொமேரோ, மற்றும், திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோருடன், இன்னும் ஐந்து அருளாளர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் புனிதர்களாக உயர்த்தப்படுவர்.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், 6 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்வர் என்று, இந்நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

05 October 2018, 15:58