தேடுதல்

இந்தோனேசியா நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தோனேசியா நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 

இந்தோனேசிய சிறாருக்கு உதவும் Save the Children அமைப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 15 இலட்சம் மக்களில் 6 இலட்சம் பேர், சிறுவர், சிறுமியர் - Save the Children

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் Sulawesi மாநிலத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், ஆறு இலட்சம் சிறார் உட்பட, 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, Save the Children என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள சிறாரில், 2 இலட்சம் பேர், தங்கள் உறைவிடங்கள், உறவினர்கள், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் இழந்து, மிகப்பெரும் அளவில் துன்பங்களை அனுபவித்து வருவதாகக் கூறும் இவ்வமைப்பினர், தங்கள் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் மன பாதிப்புக்கள் குறித்து, ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே, அடிப்படை உதவிப்பொருள்களை வழங்கியுள்ள Save the Children அமைப்பு, குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில், உதவி மையங்களை, பல்வேறு இடங்களில் துவக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உதவிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன், உலகின் பல நாடுகளில், 1919ம் ஆண்டு, துவக்கப்பட்ட Save the Children அமைப்பு, 1976ம் ஆண்டு முதல், இந்தோனேசியா நாட்டில் பணியாற்றி வருகிறது.

இதற்கிடையே, இந்தோனேசிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இத்தாலியின் மிலான் உயர் மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பு, முதல் தவணையாக, 30,000 யூரோக்களை, அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 17:14