அமெரிக்க ஐக்கிய நாடு நோக்கி செல்லும் ஹொண்டூராஸ் மக்கள், மெக்சிகோவில் ஓய்வெடுத்தல் அமெரிக்க ஐக்கிய நாடு நோக்கி செல்லும் ஹொண்டூராஸ் மக்கள், மெக்சிகோவில் ஓய்வெடுத்தல் 

அமெரிக்க கனவை நோக்கி புலம்பெயரும் மக்கள் குறித்து ஆயர்கள்

மத்திய அமெரிக்க கண்டத்தின் வரலாற்றில் இதுவரை எழாத ஒரு சூழல் உருவாகியிருப்பதை, ஹொண்டூராஸ் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் - ஆயர்களின் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹொண்டூராஸ் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டை நோக்கிச் செல்வதைக் குறித்து ஹொண்டூராஸ் நாட்டு ஆயர்கள், ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆயிரமாயிரம் மக்கள் மேற்கொண்டுள்ள இப்பயணம், மனிதாபிமான நெருக்கடி என்றும், இதனால், பல்வேறு நாடுகளில் மிக சிக்கலானச் சூழல்கள் உருவாகியுள்ளன என்றும், ஹொண்டூராஸ் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

தங்கள் நாட்டில் உருவாகியுள்ள நிலையற்ற சூழல், இம்மக்களை இத்தகைய ஆபத்துக்களை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்றும், 'அமெரிக்க கனவு' என்ற வேட்கையுடன் செல்லும் இம்மக்கள் சந்தித்து வரும், இனி, சந்திக்கப்போகும் ஆபத்துக்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலை கொள்வதாகவும் ஆயர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

மத்திய அமெரிக்க கண்டத்தின் வரலாற்றில் இதுவரை எழாத ஒரு சூழல் உருவாகியிருப்பதை, ஹொண்டூராஸ் அரசு உடனடியாக நிறுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, ஆயர்களின் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹொண்டூராஸ், எல் சால்வதோர், கவுத்தமாலா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டை நோக்கிச் செல்லும் இந்த மக்கள் கூட்டம், அக்டோபர் 22ம் தேதி வரை 7000த்திற்கும் அதிகமானோர் என்று, ஐ.நா. அவை மேற்கொண்ட ஒரு கணிப்பு கூறுகிறது.

இம்மக்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், தன் இராணுவத்தை அனுப்பியுள்ளார் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 15:55