உலக குடும்பங்கள் மாநாட்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்துக்கு சென்ற வேளையில் பேராயர் மார்ட்டின் அவருடன்... உலக குடும்பங்கள் மாநாட்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்துக்கு சென்ற வேளையில் பேராயர் மார்ட்டின் அவருடன்... 

தீமைகளுக்கு எதிராக, செபமாலை செபிக்க அழைப்பு

செபமாலை செபிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பில், அயர்லாந்து மக்கள் இணையவேண்டும் – டப்ளின் பேராயர் மார்ட்டின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் நிலவும் தீமைகளுக்கு எதிராக, தலைமைத் தூதரான புனித மிக்கேலின் பாதுகாப்பையும், அன்னை மரியாவின் துணையையும் நாடி, செபமாலை செபிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பில், அயர்லாந்து மக்கள் இணையவேண்டும் என்று, அந்நாட்டு பேராயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அயர்லாந்து ஆயர் பேரவையின் துணைத்தலைவரும், டப்ளின் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Diarmuid Martin அவர்கள், புனித காவல் தூதர்களின் திருநாளான, அக்டோபர் 2ம் தேதி, நிறைவேற்றியத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல், 26ம் தேதி முடிய, அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருப்பலியில், பேராயர் மார்ட்டின் அவர்கள் அக்டோபர் மாதத்தின் பக்தி முயற்சியான செபமாலையைக் குறித்து, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

உலக குடும்பங்கள் மாநாட்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்துக்கு வருகை தந்தது, அயர்லாந்து தலத்திருஅவைக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்று பேராயர் மார்ட்டின் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

மக்களைப் பிரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மொழி, தற்போது கத்தோலிக்கத் திருஅவையிலும் பயன்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்ட, பேராயர் மார்ட்டின் அவர்கள், கிறிஸ்தவ உலகம், நற்செய்தியின் விழுமியங்களை உள்வாங்கி ஒன்றுபட்டு வரவேண்டும் என்று செபிப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 16:45