COMECE கூட்டத்தில் அருள்பணி Saulius Stumbra COMECE கூட்டத்தில் அருள்பணி Saulius Stumbra  

முதல் உலகப் போரில் இறந்தோரின் நினைவாக…

முதல் உலகப்போர் நிறைவுற்றதன் முதல் நூற்றாண்டு நிறைவுறும் இவ்வாண்டு, இந்த உலகப்போரில் இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான COMECE என்ற ஆயர் அவை, அக்டோபர் 24ம் தேதி, பெல்ஜியம் நாட்டின் Ypres நகரில், முதல் உலகப் போரில் இறந்தோரின் நினைவாக ஒரு வழிபாட்டை மேற்கொண்டது.

1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி ஆரம்பமான முதல் உலகப்போர், 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவடைந்ததையடுத்து, இவ்வாண்டு, இவ்வுலகப்போர் நிறைவடைந்ததன் முதல் நூற்றாண்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இத்தகையத் தருணத்தில், முதல் உலகப்போரின் மிக கொடுமையான விளைவுகளைச் சந்தித்த Ypres நகரில், புனித மார்ட்டின் பேராலயத்தில், COMECE அவையின் ஆயர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோர் கலந்துகொண்டனர்.

இத்திருப்பலியைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் ஆலயத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஒன்று நடைபெற்றது என்றும், இதைத் தொடர்ந்து, அந்நகரில், முதல் உலகப்போரினால் இறந்தோர் புதைக்கப்பட்டுள்ள கல்லறையில், மலர் வளையங்கள் வைக்கப்பட்டன என்றும் COMECE அவையின் அறிக்கை கூறுகிறது.

பெல்ஜியம் நாட்டின் Brussels நகரில், அக்டோபர் 25, 26 ஆகிய நாள்களில் COMECE ஆயர்கள் அவையின் இலையுதிர் கால கூட்டம் நடைபெறுகிறது என்றும், இந்த ஆயர்கள் கூட்டத்தில், 2019ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் நிகழவிருக்கும் தேர்தல்கள் குறித்து பேசப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2018, 14:40