தேடுதல்

Vatican News
பாலஸ்தீனாவின் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ கட்டிடங்கள் பாலஸ்தீனாவின் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ கட்டிடங்கள்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 7

புனித திருத்தந்தை கிரகரி அவர்கள், மேற்கிலுள்ள திருஅவைகளின் ஆயர்கள் மற்றும் துறவிகளை அடிக்கடி தொடர்புகொண்டு நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கினார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

கி.பி.476ம் ஆண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியுறத் தொடங்கியதையடுத்து, ஐரோப்பாவில் திருஅவை முக்கியமானதாக மாறியது. மத்திய காலத்தில், ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மதம் கிறிஸ்தவமாகும், அதிலும் சிறப்பாக கத்தோலிக்கமாகும். திருஅவை, துறவு இல்லங்கள் உட்பட, சமய நிறுவனங்கள், செல்வமிக்கவையாய், செல்வாக்குள்ளவையாய், அதிகாரம் கொண்டவையாய் விளங்கின. இது எந்த அளவுக்கு இருந்ததென்றால், நாடுதள் தங்களின் வரவு செலவு பட்டியலில் ஒரு குறிப்பிட்ட தொகையை மத நடவடிக்கைகளுக்காக ஒதுக்கின. மத்திய காலத்தில், கிறிஸ்தவத்தின் வரலாறு என்பது, உரோமைப் பேரரசு வீழ்ச்சியுற்றதற்கும், 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறிஸ்தவத்தில் சீர்திருத்த சபை தோன்றியதற்கும் இடைப்பட்ட கால வரலாறாகும். இந்தக் காலம், ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் அல்லது இடைப்பட்ட காலம் என அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் உரோம், கான்ஸ்தாந்திநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா ஆகிய ஐந்து திருஆட்சிப்பீடங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவை ஒவ்வொன்றும் தனக்கென நிர்வாகத்தைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு திருஆட்சிப்பீடமும், ஒரு திருத்தூதரை தனது நிறுவனராகக் கொண்டு, அந்த ஆட்சிபீடத்தில் தலைமை வகிப்பவர், அந்த திருத்தூதரின் வழிவருபவராகக் கருதின. உரோம் திருஆட்சிப்பீடம் புனித பேதுருவையும், கான்ஸ்தாந்திநோபிள், புனித அந்திரேயாவையும், எருசலேம் திருஆட்சிப்பீடம் புனித யாக்கோபையும், அந்தியோக்கிய திருஆட்சிப்பீடம் புனித பவுலையும், அலெக்சாந்திரியா திருஆட்சிப்பீடம் புனித மாற்குவையும் இவ்வாறு கருதின.

Ostrogoths எனப்படும் இனத்தவர், 3ம், 4ம் நூற்றாண்டுகளில், பால்டிக் கடல் பகுதியிலிருந்து வெளியேறி, கருங்கடலுக்கு வடக்கே அரசை அமைத்து, கருங்கடல் முதல் பால்டிக் வரை ஆட்சி செய்து வந்தனர். இந்த இனத்தவர், தோதிலா என்பவரின் தலைமையில், 6ம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். இந்த ஆக்ரமிப்புக்காக இவர்கள் நடத்திய 21 வருட சண்டையில் இத்தாலியில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. மக்கள் தொகையும் குறைந்தது. இந்த இனத்தவரில் எஞ்சியிருந்தவர்கள், 568ம் ஆண்டில், இத்தாலியின் லொம்பார்தியா பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இவர்கள் இத்தாலியர்களை அச்சுறுத்தி வட இத்தாலியைக் கைப்பற்றியதோடு, தெற்கு நோக்கி நகர்ந்து 579ம் ஆண்டில் உரோம் நகரைக் கைப்பற்றினர். இது, உரோமைக் கலாச்சாரம் குறைவதற்குக் காரணமானது. உலகின் முடிவு இது என பலர் கருதினர். இத்தாலி இருண்ட காலத்தை அனுபவித்த அந்தக் காலக்கட்டத்தில், கி.பி.604ம் ஆண்டில், புனித பேதுருவின் வழிவருபவராக, மிக உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த திருத்தந்தை புனித பெரிய கிரகரி அவர்கள், திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றார். இவரின் சிறந்த அறிவு, ஆழமான ஆன்மீகம், சோர்வுறாத வலிமை ஆகியவை, மத்திய காலத்தில், பாப்பிறையின் தலைமைப் பணிக்கு, மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்திருந்தன.

உரோம் நகரில் செல்வமிக்க, உயரிய குடும்பத்தில் பிறந்து உரோம் நகரில் வளர்ந்த கிரகரி அவர்கள், தனது குடும்ப செல்வாக்கு மற்றும் அறிவினால் உரோம் நகரில் உயரிய பதவிகளை வகித்தார். உரோம் மாநகரின் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் திடீரென எல்லாவற்றையும் துறந்து, துறவு இல்லங்கள் கட்டுவதற்கு, தனது சொத்துக்களைச் செலவழித்தார். தனது மாளிகையையே துறவு இல்லமாக மாற்றி, அங்கு படிப்பதிலும், கடின தவ வாழ்விலும் நாள்களைச் செலவழித்தார். ஒரு கட்டத்தில் தனது ஒதுங்கிய வாழ்வைத் துறந்து, கான்ஸ்தாந்திநோபிளுக்கு, உரோமின் தூதராக, ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். அதற்குப்பின் மீண்டும் துறவு இல்லம் சென்று, கடின தவ வாழ்வை மேற்கொண்டார். 590ம் ஆண்டில் திருத்தந்தையின் இடம் காலியாகவே, உரோம் மக்களின் வற்புறுத்தலின் பேரில், திருத்தந்தை பணியை ஏற்றார். இவரே, மத்திய கால கிறிஸ்தவத்திற்கு அடிக்கல்களை நாட்டினார் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. மத்திய இத்தாலியில், திருத்தந்தையர்க்கு, சட்டப்படி எல்லா உரிமையும் உண்டு என்ற விதிமுறையை இவர் உருவாக்கினார். மேற்குலகில் இருந்த திருஅவைகளுக்கு திருத்தந்தையே தலைவர் என்பதை உறுதிப்படுத்தினார். காட்டுமிராண்டி இனத்தவரை கத்தோலிக்கத்திற்கு மாற்றும் பணியைத் தொடங்கினார். 

முதலில், ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரை மனமாற்றும் முயற்சியில் இறங்கினார், திருத்தந்தை பெரிய கிரகரி. இறையியல் மற்றும் ஆன்மீகம் பற்றி, இவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள், மத்தியகால எண்ணத்தை வடிவமைப்பதற்கு பெரிதும் உதவின. மேற்கு உரோமைப் பேரரசில், லொம்பார்தி இனத்தவரின் அட்டூழியங்களை கிழக்கு உரோமைப்  பேரரசால் ஒடுக்க இயலவில்லை என்பதை உணர்ந்த திருத்தந்தை கிரகரி அவர்கள், உரோம் நகரின் மக்களுக்கு உணவளிப்பதற்கும், மதில் சுவர்களைப் பழுதுபார்ப்பதற்கும், படைகளைத் திரட்டுவதற்கும் பொறுப்பேற்றார். பல தூதரக முயற்சியால், உரோம் நகர் லொம்பார்தி இனத்தவரால் சூறையாடப்படுவதிலிருந்து காப்பாற்றினார். இவ்வாறு பொதுவில் அமைதி நிலவுவதற்கு இவர் பாதை அமைத்துக் கொடுத்தார். அரசு அதிகாரிகளின் கையாலாகாத தன்மையால், மத்திய இத்தாலியின் ஆட்சியாளராக திருத்தந்தை கிரகரி அவர்கள் மாறினார். அதோடு, திருத்தந்தையர், பாப்பிறை மாநிலங்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும் வழி செய்தார். கான்ஸ்தாந்திநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா ஆகிய திருஆட்சிப்பீடங்களின் உரிமைகளை அங்கீகரித்த அதேநேரம், மேற்கிலுள்ள திருஅவைகளின் வாழ்வில் தலையிட்டார். ஆயர்கள் மற்றும் துறவிகளை அடிக்கடி தொடர்புகொண்டு நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கினார். Gaul மற்றும் இஸ்பெயின் திருஅவைத் தலைவர்கள், நடைமுறையில் தங்களின் சுதந்திரத்தைக் கடைப்பிடித்தனர். அவர்களிடம், தனது அறநெறி மற்றும் ஆன்மீக அதிகாரத்தைக் காட்டி, எந்தவிதமான சிறப்பு வழிகாட்டுதலுக்கும் உரோம் நகரை அணுக வேண்டும் எனச் சொன்னார்.

03 October 2018, 17:13