தேடுதல்

வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜாங்-உன், திருத்தந்தை பிரான்சிஸ் வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜாங்-உன், திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ள வட கொரிய அரசுத் தலைவர்

உலக நாடுகளுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள விழையும் வட கொரிய அரசுத்தலைவைர், திருத்தந்தையை தங்கள் நாட்டுக்கு அழைத்திருப்பது, மற்றுமொரு நேர்மறையான அடையாளம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கானுக்கு வருகை தரும் வேளையில், வட கொரிய அரசுத் தலைவர், கிம் ஜாங்-உன் அவர்கள், திருத்தந்தையை, தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைக்கும் விண்ணப்பத்தை, தன்னுடன் எடுத்துச் செல்கிறார் என்ற செய்தி, மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று, சோல் பேராயர் கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜுங் அவர்கள் கூறியுள்ளார்.

அரசுத்தலைவர், மூன் ஜே-இன் அவர்கள், இம்மாதம் 17, 18 ஆகிய நாள்களில், இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் பயணம் மேற்கொள்ளும் வேளையில், 17ம் தேதி மாலை 6 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காவில், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியிலும், 18ம் தேதி, திருத்தந்தையுடன் நிகழும் சந்திப்பிலும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைதி உருவாக, இந்தப் பயணம் ஒரு முக்கிய முயற்சியாக அமையும் என்று பீதேஸ் செய்தியிடம் கூறிய கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள், இந்த முயற்சியின் பயனாக, வட கொரியாவில் வாழும் மக்களுக்குத் தேவையான ஆன்மீக பலன்கள் அனைத்தும் கிடைக்க வழி வகுக்கும் என்று எடுத்துரைத்தார்.

1950ம் ஆண்டுக்கு முன்னர், வட கொரியாவில் 57 ஆலயங்களும், 55,000த்திற்கும் அதிகமான விசுவாசிகளும் இருந்தனர் என்றும், 1948ம் ஆண்டு முதல் அங்கு நிலவிய அடக்குமுறை அரசால், அங்குள்ள திருஅவை, "மௌனத்தின் திருஅவை" என்று அழைக்கப்படுகிறது என்றும், பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் Daejeon மறைமாவட்டத்தின் ஆயர், Lazzaro You Heung-sik அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், உலக நாடுகளுடன் வட கொரியாவின் உறவை புதுப்பித்துக்கொள்ள விழையும் அரசுத்தலைவைர் கிம் ஜாங்-உன் அவர்கள், தென் கொரிய அரசுத்தலைவர் வழியே திருத்தந்தையை அழைத்திருப்பது, மற்றுமொரு நேர்மறையான அடையாளம் என்று மகிழ்வுடன் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:14