வத்திக்கானில் கியூபா ஆயர் Alvaro Beyra வத்திக்கானில் கியூபா ஆயர் Alvaro Beyra  

புதிய அரசியலமைப்பு குறித்து கியூபா ஆயர்களின் கருத்து

கியூபாவின் புதிய அரசியலமைப்பில், மனித மாண்புக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கியூபா நாட்டில் புதிய அரசியலமைப்பு குறித்த முன்வரைவு தற்போது, மக்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் மாண்பு, மனித உரிமைகள், குடும்பம், பொருளாதாரம், பொதுநலப்பணி போன்றவை, அதில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

1976ம் ஆண்டு முதல் கியூபாவில் செயல்பட்டுவரும் அரசியலமைப்பை மாற்றியமைக்கும் நோக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு முன்வரைவு, ஏற்கனவே, ஜூலை மாதம், பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்றுள்ளதுடன், பொது கருத்து வாக்கெடுப்புக்கு முன், மக்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்கென இந்த நவம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், மாற்றுக் கருத்துக்களும் செவிமடுக்கப்பட வேண்டும், வாழ்வதற்கான உரிமை, மனச்சான்றிற்கு இயைந்த வகையிலான மறுப்புரிமை, மத நம்பிக்கைகளை வெளியிடும் உரிமை போன்றவை குறித்தும் விண்ணப்பித்துள்ள கியூபா ஆயர்கள், வறியோருக்குக் கல்வி வழங்குதல், கலாச்சாரம், நலஆதரவு போன்ற துறைகளில் பணியாற்ற, திருஅவை, அனுமதிக்கப்பட  வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

அரசியலமைப்பில் வழங்கப்படும் உரிமைகள், சரியான முறையில் அமல்படுத்தப் படுகின்றனவா என்பதை உறுதிச் செய்யும், தனிப்பட்ட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர், கியூபா நாட்டு ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:26