பெத்தானியாவில் மார்த்தா, மரியா சகோதரிகளுடன் இயேசு பெத்தானியாவில் மார்த்தா, மரியா சகோதரிகளுடன் இயேசு 

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 8

வேதனைகள் சூழம்போது, கடவுளை நோக்கி கேள்விகள் எழுப்புவதும், முறையிடுவதும் காலம்காலமாக நடந்துவருகின்றது. அதற்கு, மார்த்தாவும், மரியாவும் விதிவிலக்கல்ல.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

311018 விவிலியம் இலாசர் உயிர்பெற்ற புதுமை - பகுதி 8

இலாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும் தங்கள் சகோதரனின் மரணத்தால் நிலைகுலைந்து போயினர். அவர்களது வேதனையைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் பலர் அங்கே வந்திருந்தனர் (யோவான் 11:19) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். மார்த்தா, மரியா ஆகிய இருவரையும் சுற்றி அமர்ந்திருந்தவர்களுடன், நாமும் கற்பனையில் இணைவோம்.

கூடியிருந்தோர், அவ்விரு சகோதரிகளுக்கும் ஆறுதல் சொன்ன வேளையில், இலாசரைப் பற்றி, அவருடன் தாங்கள் பெற்ற அற்புத அனுபவங்களைப் பற்றி பேசியிருப்பர். அப்போது, இலாசரின் நெருங்கிய நண்பரான இயேசுவைக் குறித்தும் ஒரு சிலர் பேசியிருப்பர். "அவர் ஏன் இன்னும் வரவில்லை?", "அவர் இங்கு இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?" என்ற கேள்விகள் அங்கு கூடியிருந்தோர் நடுவே வலம் வந்திருக்கும். "இயேசு இங்கே இருந்திருந்தால்..." என்ற எண்ணம், மார்த்தாவையும், மரியாவையும் வாட்டி, வதைத்திருக்கவேண்டும்.

இயேசுவும், அவரது சீடர்களும், பெத்தானியாவுக்கு வந்த வேளைகளில், இயேசு, வெவ்வேறு ஊர்களில், முன்பின் அறிமுகமில்லாதவர்கள் பலருக்கு செய்த புதுமைகள் குறித்து சீடர்கள், மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய மூவரிடமும் கதை, கதையாய் சொல்லியிருப்பர். அந்தப் புதுமைகளின் நினைவுகள், அவ்விரு சகோதரிகளின் உள்ளங்களில் மீண்டும், மீண்டும் அலைமோதியிருக்கும். ஊருக்கெல்லாம் நல்லது செய்த இயேசு, தங்கள் சகோதரனைக் காப்பதற்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி, அவர்கள் உள்ளங்களில் வேதனையையும், ஏன், சொல்லப்போனால், கோபத்தையும் கிளறியிருக்கும்.

இயேசுவுக்கு எதிராக, எருசலேமில் உருவாகிவந்த பகைமை உணர்வுகளை அவ்விரு சகோதரிகளும், கேள்விப்பட்டிருந்தாலும், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா இருந்ததால், அவர் அங்கு வருவது ஆபத்து என்பதை, அவர்கள் உணர்ந்திருந்தாலும், இலாசர் நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டால், இயேசு கட்டாயம் தங்கள் இல்லத்திற்கு வருவார் என்பதையும் அவ்விரு சகோதரிகளும் எதிர்பார்த்திருப்பர்.

"ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" (யோவான் 11:3) என்ற செய்தியை, மார்த்தாவும், மரியாவும் இயேசுவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனுப்பியது, ஒரு செய்தி வடிவில் இருந்தாலும், அதை, ஒரு செபமாகக் கருதலாம் என்று இப்புதுமையின் ஆரம்பத் தேடல் ஒன்றில் சிந்தித்தோம். அவர்கள் அனுப்பிய செபத்தைக் கேட்டதும், இயேசு விரைந்து வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நிகழவில்லை. எனவே, அவ்விருவரின் உள்ளங்களை வேதனையும், கேள்விகளும் நிறைத்தன. செபத்தில் கேட்டது கிடைக்காமல் தவிக்கும் பல்லாயிரம் மக்களின் பிரதிநிதிகளாக, மார்த்தா, மரியா இருவரையும் நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இத்தகையச் சூழலில், இயேசு பெத்தானியா வந்து சேர்ந்தார் என்பதை அறிந்த மார்த்தா, அவரைச் சந்திக்கச் சென்றார். தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த வேதனை, ஏமாற்றம், கோபம் அனைத்தையும் இயேசுவிடம் வெளிப்படுத்தினார்: "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11,21) என்று முறையிட்டார். வேதனைகள் சூழம்போது, கடவுளை நோக்கி கேள்விகள் எழுப்புவதும், முறையிடுவதும் காலம்காலமாக நடந்துவருகின்றது. அதற்கு, மார்த்தாவும், மரியாவும் விதிவிலக்கல்ல.

துன்பங்கள், அலை, அலையாய் நம்மைச் சூழும் நேரங்களில், அந்த அலைகளில் மட்டும் நம் கவனம் ஆழ்ந்துவிடுவதால், அதே அலைகள் மீது நடந்துவரும் ஆண்டவனைக் காணமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?

எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. ஒரு மனிதர், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கிறார். பயணத்தில், கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக, பாதை முழுவதும் இரு சோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அம்மனிதருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், கூர்ந்து கவனித்த வேளையில், ஒரு சில நேரங்களில், அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறார். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவர் தன் வாழ்வுப் பாதையில், அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறார். உடனே அம்மனிதர், கடவுளிடம், "துன்ப நேரத்தில், என்னை, தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறார். "மகனே, துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தபோது, ஒரு சோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில், உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.

அந்த மனிதரைப்போலவே, மார்த்தா, இயேசுவிடம் முறையிடுகிறார். தங்களையும், தங்கள் சகோதரனையும் தவிக்க விட்டுவிட்டு தூரமாய்ப் போய்விட்டார் என்று  மார்த்தா, இயேசுவிடம், தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார். ஆனால், அவர், உடனே, நம்பிக்கை நிறைந்த சொற்களையும் இணைத்துக் கூறுகிறார். இதோ, மார்த்தாவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்:

யோவான் 11:22-27

மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.

தன் சகோதரனைக் காப்பதற்கு இயேசு வரவில்லை என்பதை, ஒரு குற்றச்சாட்டைப் போல் முன்வைத்த மார்த்தா, இறுதி நாளில் தன் சகோதரன் உயிர் பெற்றெழுவான் என்பதையும் கூறுகிறார். அவ்வேளையில், அவரிடம் வெளியான அரைகுறை நம்பிக்கையை உறுதிப்படுத்த, இயேசு, மார்த்தாவிடம் "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவான் 11:25) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.

இயேசு, தன்னைப் பற்றி, "நானே..." என்று கூறியுள்ள இறை வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில், ஏழு முறை இடம்பெற்றுள்ளன.

வாழ்வு தரும் உணவு நானே - யோவான் 6: 35

உலகின் ஒளி நானே - 8: 12

நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை - 10: 9

நல்ல ஆயன் நானே -  10: 12

உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே - 11: 25

வழியும், உண்மையும், வாழ்வும் நானே - 14: 6

உண்மையான திராட்சைச் செடி நானே - 15: 1

என்பவை அற்புதமான 'நானே' வாக்கியங்கள்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னைப்பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆய்வு சேய்தால், அவை எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு, தன்னை பல்வேறு உருவகங்களில் அடையாளப்படுத்தி, இவ்வாக்கியங்களைக் கூறினார் என்பதை உணரலாம்.

இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் இந்தப் புதுமைக்கு முன்னதாக, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமையைச் சிந்தித்தோம். அந்தப் புதுமையைத் தொடர்ந்து, 10ம் பிரிவில், இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தி பேசினார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்ன அந்த வார்த்தைகள், தன் புகழைப் பறைசாற்ற அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும் தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மற்றவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில் இயேசு சொன்ன வார்த்தைகள் இவை.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். இயேசு அற்புதங்கள் ஆற்றுகிறார் என்பதைவிட, அவர், ஒய்வு நாளைக் கடைபிடிப்பதில்லை (யோவான் 9:16) என்பதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24). அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம்.

சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட அம்மனிதருடன் இயேசு ஆரம்பித்த அந்த உரையாடலில், 'நல்ல ஆயன் நானே' என்று அவர் கூறுகிறார். தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்திய தலைவர்களுக்கு, தன்னைப்பற்றிய உண்மையை இடித்துரைக்கவேண்டும் என்பதற்காக இயேசு இவ்வாறு பேசவில்லை, மாறாக, தன்னால் குணம் அடைந்தவர், மதத் தலைவர்கள் மீது கொண்ட பயத்தினால், வெறுப்பினால், மீண்டும், தன் அகக்கண்களை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு தன்னை ஒரு பாசமுள்ள ஆயன் என்று குறிப்பிடுகிறார்.

அதேவண்ணம், வேதனையால் நொறுங்கிப்போயிருக்கும் மார்த்தாவின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில், இயேசு தன்னையே உயிர்த்தெழுதலாகவும், வாழ்வாகவும் அடையாளப்படுத்துகிறார்.

இயேசுவுக்கும், மார்த்தாவுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலை, நற்செய்தியாளர் யோவான், முதல் கிறிஸ்தவர்களை மனதில் கொண்டு எழுதினார் என்று ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். இந்த எண்ணத்தை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்கவும், மார்த்தாவின் சகோதரி, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை அசைபோடவும், நாம் அடுத்த தேடலில் முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:20