Cerca

Vatican News
உலகப்புகழ் பெற்ற மிக்கேலாஞ்சலோ உருவாக்கிய அன்னை மரியாவின் “பியெத்தா” (Pieta) திருஉருவம் உலகப்புகழ் பெற்ற மிக்கேலாஞ்சலோ உருவாக்கிய அன்னை மரியாவின் “பியெத்தா” (Pieta) திருஉருவம்  (©foxnavy - stock.adobe.com)

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 7

இலாசர் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டில் சலனமற்று அமர்ந்திருக்கும் மரியா, இறந்த இயேசுவின் உடலைத் தாங்கி, அமைதியாக அமர்ந்திருக்கும் அன்னை மரியா ஆகியோர், மரணம் என்ற கொடுமையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் அன்னையரை நம் கண்முன் கொணர்கின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

241018 விவிலியம் இலாசர் உயிர்பெற்ற புதுமை - பகுதி 7

இயேசு பெத்தானியாவுக்கு வந்துகொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மார்த்தா, அவரைச் சந்திக்க விரைந்தார். இச்சந்திப்பை, நற்செய்தியாளர் யோவான், இவ்வாறு அறிமுகம் செய்துள்ளார்:

யோவான் 11:20-22

இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார்.

இப்பகுதியில், "மார்த்தா இயேசுவை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்." என்ற இறைவாக்கியம், விவிலிய விரிவுரையாளர்களிடமிருந்து பல்வேறு கருத்துக்களை வெளிக்கொணரந்துள்ளது. "மரியா வீட்டில் இருந்துவிட்டார்" என்று தமிழில் கூறப்பட்டுள்ள வாக்கியம், ஆங்கில மொழிபெயர்ப்பில், "Mary sat still in the house", அதாவது, "மரியா வீட்டில் அசையாமல் உட்கார்ந்திருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. பெரும் துயரத்தில் ஒருவர் மூழ்கும்போது, செயலிழந்து, உறைந்து போவதை பல வழிகளில் நாம் உணர்ந்திருக்கிறோம்.

பெரும் இழப்புக்களைச் சந்திப்போர் செயலிழந்து, உட்கார்ந்துவிடுவதை, விவிலியத்தின் பல இடங்களில் நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, யோபு, தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து, இறுதியில் தன் உடல் நலனையும் இழந்தபோது, அவர் தரையில், 'சாம்பலில் உட்கார்ந்திருந்தார்' (யோபு 2:8) என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது மூன்று நண்பர்களின் வருகையைக் குறிப்பிடும் ஆசிரியர், அக்காட்சியை இவ்வாறு சித்திரிக்கிறார்:

யோபு 2:11-13

அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர்.... அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர். தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள். அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.

தன் சகோதரன் இலாசரின் மரணத்தால், அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்திருந்த மரியா, வீட்டில் அமர்ந்திருந்தார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறும் இக்காட்சியைப் போலவே, இயேசுவின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு பின்வரும் வரிகளில் கூறியுள்ளார்:

மத்தேயு 27:59-61

(அரிமத்தியா ஊரைச் சேர்ந்த) யோசேப்பு (இயேசுவின்) உடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

இயேசுவின் மரணம், அடக்கம் ஆகியவை நிகழ்வதை, 'மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்’ (மத்தேயு 27:55-56) என்று குறிப்பிடும் நற்செய்தியாளர் மத்தேயு, நான்கு இறைவாக்கியங்களுக்குப்பின், மீண்டும் பெண்களைக் குறித்துப் பேசும்போது, "மகதலா மரியாவை" பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறார். ஆனால், "யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவை" பெயர் சொல்லிக் குறிப்பிடாமல், "வேறொரு மரியா" என்று மட்டும் குறிப்பிடுகிறார். இந்த மாற்றத்தை, ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு, அந்த "வேறொரு மரியா" இலாசரின் சகோதரி மரியாவாக இருந்திருக்கக்கூடும் என்று கணித்துள்ளனர். தன் சகோதரன் இலாசரின் அடக்கத்திற்குப்பின் வீட்டில் அசையாமல் அமர்ந்திருந்த மரியா, இப்போது, இயேசுவின் அடக்கத்தைத் தொடர்ந்து, அக்கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இயேசுவின் மரணம், அடக்கம் ஆகிய நிகழ்வுகளைச் சிந்திக்கும் வேளையில், கல்வாரிக் குன்றில், சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர் (யோவான் 19:25) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. இயேசுவின் தாய் நின்றுகொண்டிருந்தார் என்று விவிலியத்தில் கூறப்பட்டாலும், சிலுவையடியில், இயேசுவின் இறந்த உடலைத் தாங்கி அமர்ந்திருந்த அன்னை மரியாவின் உருவமும், அதைச் சுற்றி, கத்தோலிக்க சமுதாயத்தில் வளர்ந்துள்ள பக்தி முயற்சிகளும், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவம் தந்து, உலகப்புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் மிக்கேலாஞ்சலோ அவர்கள் உருவாக்கிய அன்னை மரியாவின் “பியெத்தா” (Pieta) திருஉருவம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கோடான கோடி மக்களின் உள்ளங்களில், கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தியை வளர்த்து வருகிறது.

இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும்? ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று, இந்த அன்னையின் உருவைப் பார்க்கும்போது, நம் மனதில், கேள்விகள் எழுகின்றன.

அன்னை மரியா, தன் மகனை மடியில் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு, விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று, "ஆண்டவர் என் ஆயன்" என்ற நூலில் கூறும் யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல, மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று குஷ்னர் அவர்கள் கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைவனை, தாயின் வடிவத்தில் காண்பது, இந்திய, ஆசிய, ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.

மிக்கேலாஞ்சலோ அவர்கள் வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது குறைந்தது, 50ஆக இருந்திருக்கும். ஆனால், “பியெத்தா”வில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.

நன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை, முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது, எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், “பியெத்தா”வில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண், அதையும் சாதித்திருக்கிறார். இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ அவர்கள் செதுக்கியுள்ளார். இது, இரண்டாவது அம்சம்.

இந்த இரு அம்சங்களும், “பியெத்தா”வில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள். “பியெத்தா”வில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு தாய்மை உருவில் இறைவன் அமர்ந்துள்ளார் என்று எண்ணிப் பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கமுடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்.

அதேவண்ணம், நன்கு வளர்ந்துள்ள தன் மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தத் தாயைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் தாயான இறைவன் என்பதையும் உணரலாம்.

தன் சகோதரர் இலாசர் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டில் சலனமற்று அமர்ந்திருக்கும் மரியா, இறந்த இயேசுவின் உடலைத் தாங்கி, அமைதியாக அமர்ந்திருக்கும் அன்னை மரியா ஆகியோர், மரணம் என்ற கொடுமையை பல்வேறு வழிகளில் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் அன்னையரை நம் கண்முன் கொணர்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், இறைவன், ஆழ்ந்த அமைதியை வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

மார்த்தா, மரியா ஆகிய இரு சகோதரிகள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வில், நாம் கற்றுக்கொள்ளக்கூடியப் பாடங்களை, அடுத்தத் தேடலில் தொடர்ந்து பயில்வோம்.

23 October 2018, 16:13