தேடுதல்

Vatican News
இயேசு, தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். (யோவான் 11:7) இயேசு, தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். (யோவான் 11:7) 

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 5

பின்னர் இயேசு தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள். - யோவான் 11:7-8

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

091018 இலாசர் உயிர்பெற்றெழுதல் - பகுதி 5

தன் நண்பன் இலாசர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்த இயேசு, தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். (யோவான் 11:7). இதைக்கேட்ட சீடர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். காரணம், யூதேயாவில், இயேசுவுக்கு எதிராக அவர்கள் கண்ட வெறுப்பும், எதிர்ப்பும் அவர்கள் உள்ளங்களில் பசுமையாக பதிந்திருந்தன. யூதேயாவில், இயேசு சந்தித்த எதிர்ப்பையும், வெறுப்பையும் நற்செய்தியாளர் யோவான் பல இடங்களில் பதிவுசெய்தாலும், 10ம் பிரிவில் மட்டும் அவற்றைக் குறித்து, மூன்று முறை குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ஒரு நல்ல ஆயனாகவும், ஆடுகளுக்கு வாயிலாகவும் உருவகித்துப் பேசிய இயேசு, அத்துடன், 'கூலிக்கு மேய்க்கும்' மற்ற ஆயர்களைப் பற்றியும் குறிப்பிட்டார் என்று கூறும் யோவான், தொடர்ந்து, இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது. அவர்களுள் பலர், "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று பேசிக் கொண்டனர் (யோவான் 10:19-20) என்ற வாக்கியத்தைப் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவதாக, எருசலேமில் நடைபெற்ற கோவில் அர்ப்பண விழாவில் கலந்துகொள்ள சென்ற இயேசு, அங்கு, "நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று கூறியதும், அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர் (யோவான் 10:30-31) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தில், 'மீண்டும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளது, நம் நினைவை, யோவான் நற்செய்தி 8ம் பிரிவுக்கு கொண்டு செல்கிறது.

அங்கு, பரிசேயரும், மறைநூல் அறிஞரும், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவிடம் கொணர்ந்து, அப்பெண்ணைக் குறித்து அவர் வழங்கும் தீர்ப்பு என்ன என்று கேட்கும் நிகழ்வுடன் 8ம் பிரிவு ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து, 8ம் பிரிவு முழுவதும், இயேசுவுக்கும், பரிசேயருக்கும் இடையே காரசாரமான பல விவாதங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். அப்பிரிவின் இறுதி வாக்கியத்தில், "இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவி, கோவிலிலிருந்து வெளியேறினார்" (யோவான் 8:59) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்ற வெறியுடன் மதத் தலைவர்கள் இயேசுவை அணுகிய நிகழ்வுடன் 8ம் பிரிவை துவக்கிய நற்செய்தியாளர் யோவான், அப்பிரிவின் இறுதியில், இயேசுவை கல்லால் எறியும் வெறியை குறிப்பிட்டுள்ளார்.

10ம் பிரிவின் இறுதிப் பகுதியில், இயேசுவுக்கு எதிராக எழுந்த வெறுப்பை மூன்றாம் முறையாக யோவான் குறிப்பிட்டுள்ளார். இயேசு கூறிய சொற்கள் யூதர்களை மீண்டும் ஆத்திரம் அடைய வைத்தது என்று கூறும் யோவான், இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார் (யோவான் 10:39) என்று கூறியுள்ளார்.

அடுக்கடுக்காய் அதிகரித்துவந்த வெறுப்புணர்வு, தாக்குதல் முயற்சிகள் ஆகியவை, இயேசுவின் உயிருக்கு ஆபத்தாக அமைந்தன என்பதை, சீடர்கள் கண்கூடாகக் கண்டிருந்தனர். எனவே, அவர் மீண்டும் யூதேயா செல்வதைப்பற்றி குறிப்பிட்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இயேசு தன் சீடர்களிடம், "மீண்டும் பெத்தானியாவுக்கு போவோம், வாருங்கள்" என்று கூறியிருந்தால், அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். சீடர்களைப் பொருத்தவரை, 'யூதேயா' என்ற சொல், பகைமையையும், வெறுப்பையும் உணர்த்தும் சொல்லாக இருந்ததுபோல், 'பெத்தானியா' என்ற சொல், அன்பையும், விருந்தோம்பலையும் நினைவுறுத்தும் சொல்லாக இருந்திருக்கும்.

யூதேயாவுக்குச் செல்வதைப்பற்றி இயேசுவுக்கும், சீடர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல், இன்னும் சில உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

யோவான் 11:7-8

பின்னர் இயேசு தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள்.

இயேசு தன் சீடர்களிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போகிறேன், நீங்களும் வாருங்கள்" என்று தன்னையும், அவர்களையும் பிரித்துப் பேசாமல், சீடர்களையும் தன்னுடன் இணைத்து, "யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். சீடர்களோ, அங்குள்ள ஆபத்தை உணர்த்தும்வண்ணம், "யூதேயாவுக்குப் போகிறோமா?" என்று, தங்களையும் இணைத்து கேட்டிருக்கவேண்டும். அதற்குப்பதில், அவர்கள், தங்களை இயேசுவிடமிருந்து பிரித்துக்கொண்டனர். "மீண்டும் அங்கு போகிறீரா?" என்ற கேள்வியின் வழியே, சீடர்கள், இயேசுவை, தனிமைப்படுத்தினர்.

யூதேயாவிலும், குறிப்பாக, எருசலேமிலும் தனக்கு வரவிருக்கும் ஆபத்தை நன்கு உணர்ந்த இயேசு, அதைக்குறித்து தன் சீடர்களிடம் பலமுறை கூறியுள்ளார் என்பதை, நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு இயேசு பேசியதைக் கேட்டு, சீடர்கள், ஒவ்வொரு முறையும், அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆபத்தை தேடிச்செல்ல விழைந்த இயேசுவுக்கு, பேதுரு, அறிவுரை கூற முற்பட்ட நிகழ்வு நம் நினைவுக்கு வருகிறது.

மத்தேயு 16:21-23

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்" என்றார்.

இயேசு எருசலேமுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை, பேதுருவும், ஏனைய சீடர்களும் பலமுறை, தடுக்க முயன்றாலும், இயேசு தன் உறுதியிலிருந்து சற்றும் குலையாமல் இருந்தார் என்பதை நான்கு நற்செய்திகளும் நமக்கு நினைவுறுத்துகின்றன.

"ரபி, மீண்டும் யூதேயாவுக்குப் போகிறீரா?" என்ற கேள்வி வழியே இயேசுவைத் தடுக்க நினைத்த சீடர்களிடம், இயேசு, இலாசரின் மரணம் குறித்து தெளிவாகப் பேசுகிறார். இதைக் கேட்ட சீடர்கள், இயேசு, யூதேயாவுக்கு செல்லவிழையும் காரணத்தைப் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு இயேசுவுடன் செல்லும் துணிவு வரவில்லை. அவ்வேளையில், திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார் (யோவான் 11:16) என்று கூறியதை, யோவான் பதிவு செய்துள்ளார்.

இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரில், 'தோமா'வும் ஒருவர் என்பதை, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் கூறியுள்ளனர். (மத். 10: 3). இதைத்தவிர, தோமாவைக் குறித்து முதல் மூன்று நற்செய்திகளும் வேறு எதையும் கூறவில்லை. நான்காவது நற்செய்தியாளரான யோவான் மட்டும், தோமாவைக் குறித்து மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். இவற்றில் நமக்கு மிகவும் பழக்கமான நிகழ்வு, இயேசுவின் உயிர்ப்பை தோமா சந்தேகித்த நிகழ்வு.

மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். (யோவான் 20:25) எட்டு நாட்களுக்குப் பின், சீடர்கள் நடுவே மீண்டும் தோன்றிய இயேசு, தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். (யோவான் 20: 27-28)

தோமாவைக் குறித்து, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடும் இரண்டாவது நிகழ்வு, இறுதி இரவுணவில் நிகழ்ந்தது. இயேசு, தான் தந்தையிடம் திரும்பிச் சென்று, சீடர்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின், அவர்களை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறியபோது, தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்றார். (யோவான் 14:5-6)

தோமாவைத் தொடர்புபடுத்தி, மூன்றாவது நிகழ்வாக, நற்செய்தியாளர் யோவான் கூறுவது, நாம் தற்போது சிந்தித்துவரும் 11ம் பிரிவில், தோமா வெளிப்படுத்தும் கூற்று. திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். (யோவான் 11:16)

தோமாவின் கூற்றைக் கேட்ட சீடர்கள் இயேசுவுடன் புறப்பட தீர்மானித்திருக்க வேண்டும். இயேசுவுடன் யூதேயாவுக்குச் செல்வதால், தங்களுக்கு மரணம் உறுதி என்ற விரக்தியில் புறப்பட்ட சீடர்கள், நம்பிக்கையூட்டும் இயேசுவின் புதுமைக்கு சாட்சிகளாக மாறினர். இலாசரை, இயேசு, உயிர்பெற்றெழச் செய்ததன் பயனாக, அவர், சீடர்களின் உள்ளங்களையும் உயிர்பெற்றெழச் செய்தார். இப்புதுமையில், நம் தேடல் பயணம் தொடர்கிறது.

09 October 2018, 16:42