இயேசு, "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். யோவான் 11:11 இயேசு, "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். யோவான் 11:11 

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 4

"இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" (யோவான் 11:4) என்று இயேசு கூறுவதை, எளிதான வழியில் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 4

தங்கள் சகோதரனும், இயேசுவின் நண்பருமான இலாசர் நோயுற்றிருக்கிறார் என்ற அவசர செய்தியை, மார்த்தாவும், மரியாவும், இயேசுவுக்கு அனுப்பினர். அதைக் கேட்டதும், இயேசு, பெத்தானியாவுக்கு விரைந்து சென்றிருப்பார் என்று நாம் எதிர்பாப்பதற்கு நேர்மாறாக, அவர் நடந்துகொண்டது, புதிராக உள்ளது. அங்கு நிகழ்ந்தனவற்றை, நாம் யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்

யோவான் 11 3-15

இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.

"இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்று இயேசு கூறும் புதிரான கூற்று, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் இயேசு கூறிய மற்றொரு புதிரான கூற்றை நம் நினைவுக்குக் கொணர்கிறது. அங்கு, பார்வையற்ற மனிதரைக் கண்ட சீடர்கள், இயேசுவிடம், "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" (யோவான் 9:2) என்ற கேள்வியை எழுப்பினர். பார்வையற்றவர், தன் முன்பிறவியில் பாவம் செய்திருக்கவேண்டும், அல்லது, அவரது பெற்றோர் பாவம் செய்திருக்கவேண்டும் என்ற தீர்ப்புகள், சீடர்கள் எழுப்பியக் கேள்வியில் மறைந்திருந்தன.

பார்வையற்று பிறந்ததால், ஏற்கனவே துன்பத்தில் வாழ்ந்த ஒருவரை, மேலும் துன்புறுத்தும் வண்ணம், சீடர்கள், அவரை நோக்கி, தங்கள் கண்டன விரல்களைச் சுட்டிக்காட்டினர். இயேசுவோ, சீடர்களின் கவனத்தை, கடவுள் மீது திருப்பினார். அவர்களது கண்ணோட்டங்களை மாற்றும் வண்ணம், இயேசு, அவர்களுக்குப் பதில் தந்தார். "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி"  (யோவான் 9: 3-5) என்று இயேசு, தெளிவாக, திட்டவட்டமாகக் கூறினார்.

இயேசுவின் இக்கூற்றினை மேலோட்டமாகக் காணும்போது, கூடுதல் பிரச்சனைகளைக் கொணர்வதாக உணர்கின்றோம். "கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்று இயேசு கூறும் சொற்கள், கடவுளை, மென்மேலும், இரக்கமற்றவராகச் சித்திரிக்கின்றன. 'தன் அற்புதமானச் செயல்கள் வெளிப்படுவதற்காக, கடவுள், இம்மனிதரை, பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறக்கச் செய்தார்' என்ற கொடூரமானக் கருத்தை, இயேசுவின் கூற்று வெளிப்படுத்துவதுபோல் உள்ளது.

இயேசுவின் இக்கூற்று, பல விவிலிய ஆய்வாளர்களையும், விரிவுரையாளர்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அவர்கள், தங்கள் ஆய்வுகளின் வழியே தொகுத்துக் கூறியுள்ளவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம். இக்கூற்றின் முழுப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு, நற்செய்திகள் எழுதப்பட்ட மொழி, அவை எழுதப்பட்ட முறை ஆகியவற்றை ஓரளவு புரிந்துகொள்ளவேண்டும்.

புதிய ஏற்பாட்டு நூல்கள், கிரேக்க மொழியில், கையெழுத்து வடிவத்தில் எழுதப்பட்டன. இந்தக் கையெழுத்து வடிவங்களில், சொற்கள் அனைத்தும், கோர்வையாக, எவ்வித இடைவெளியும் இல்லாமல், முற்றுப்புள்ளி, கால்புள்ளி போன்ற குறியீடுகள் ஏதுமின்றி எழுதப்பட்டன.

இந்தக் கையெழுத்து வடிவங்களை, பிற மொழிகளில் மொழிபெயர்த்தவர்கள், அந்தந்த மொழியில் புரிந்துகொள்ளும் வகையில், கால்புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய குறியீடுகளை புகுத்தினர். சிலர், தாங்கள் கூறுவதை இன்னும் தெளிவாக்கும் முயற்சியில், சொற்களை முன்னும், பின்னுமாக மாற்றியுள்ளனர்; வேறு சிலர், கூடுதலாக, ஒரு சில சொற்களையும் இணைத்துள்ளனர்.

இவ்விதம் பல நூற்றாண்டுகளாக உருவான பல்வேறு மாற்றங்களை, விவிலியம் முழுவதும் காணலாம். யோவான் நற்செய்தி, 9ம் பிரிவில், இயேசு, தன் சீடர்களுக்குக் கூறும் பதிலுரையில், இத்தகைய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று, விவிலிய விரிவுரையாளர்கள் கருதுகின்றனர். மொழிபெயர்ப்பு முயற்சிகளால் உருவான மாற்றங்களை நீக்கிவிட்டு, முதல் வடிவத்தில் இயேசு கூறியச் சொற்களை இணைத்துப் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள கூற்று இவ்வாறு இருந்தது:

"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டு, என்னை அனுப்பியவரின் செயலை, பகலாய் இருக்கும் வரை, நாம் செய்ய வேண்டியிருக்கிறது" என்பதே, இயேசுவின் கூற்றாக இருந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகையக் கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

கேள்வி கேட்ட சீடர்களிடம் இயேசு கூறிய பதிலை நாம் எளிதான சொற்களில், இவ்வாறு கூறலாம்: “இவருக்கு ஏற்பட்டுள்ள துன்பம், யாரால், எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வது முக்கியமல்ல. பார்வையற்ற அவர் பார்வை பெற வேண்டும். அதன் வழியாக, கடவுளின் செயல் வெளிப்பட வேண்டும். அதற்கான வழியைச் சிந்திப்போம்” என்பதே, இயேசு சீடர்களுக்குத் தந்த பதில்.

அதேவண்ணம், இலாசர் நோயுற்றிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும், இயேசு கூறும் பதில்மொழியையும், இத்தகைய கோணத்தில் நாம் சிந்திக்கவேண்டும். "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்று இயேசு கூறுவதை, எளிதான வழியில் புரிந்துகொள்ள முயல்வோம். அதாவது, "என் நண்பருக்கு வந்துள்ள நோய், அவரைச் சாவுக்கு இட்டுச் செல்லாது. இன்னும் சொல்லப்போனால், இவரது நோயின் வழியே இறைவனின் மாட்சி மீண்டும் ஒருமுறை வெளிப்படும்" என்பதே இயேசு கூறிய அந்த புதிரான பதிலில் பொதிந்திருந்த பொருள்.

இயேசுவின் கண்ணோட்டத்தில், 'சாவு' என்பதற்கு, வேறுபட்ட பொருள் இருந்தது. மற்றொரு நிகழ்வில், மக்கள் 'சாவு' என்று கருதியதை, இயேசு 'தூக்கம்' என்று சொல்வதாக நாம் வாசிக்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர், யாயீரின் மகளை இயேசு உயிர்பெற்றெழச் செய்த புதுமை, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது (மத். 9:18-26; மாற். 5:21-43; லூக். 8:40-56). தொழுகைக்கூடத் தலைவரின் மகள், 'சாகுந்தறுவாயில் இருப்பதாக' மாற்கும், லூக்காவும் (மாற். 5:23; லூக். 8:42) கூறியுள்ளனர். மத்தேயு நற்செய்தியிலோ, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்" (மத்.9:18) என்று தொழுகைக்கூடத் தலைவர் இயேசுவிடம் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லூக்கா நற்செய்தியில், ஒரு கூடுதலான விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

லூக்கா 8:49-50

இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஒருவர் வந்து, "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார். இதைக் கேட்ட இயேசு, சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

இதன்பின், தொழுகைக்கூடத் தலைவர் வீட்டை அடைந்த இயேசு, அங்கு நிலவிய கூச்சலையும், குழப்பத்தையும் கண்டு, "சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்று கூறியதும், அங்கிருந்தோர் அவரைப் பார்த்து நகைத்தனர் என்று மூன்று நற்செய்திகளும் கூறியுள்ளன (மத். 9:24; மாற். 5:39-40; லூக். 8:52-53). மக்களின் நகைப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றிற்கு ஓர் எதிர் அடையாளமாக, இயேசு அச்சிறுமியின் கரங்களைப் பிடித்து எழுப்புகிறார். அச்சிறுமியும் உறக்கத்திலிருந்து விழிப்பதைப்போல் எழுந்து அமர்கிறார்.

யாயீர் வீட்டில், சாவை, தூக்கத்திற்கு ஒப்புமைப்படுத்திப் பேசியதைப்போலவே, இலாசரைக்குறித்தும், இயேசு, தன் சீடர்களிடம் பேசுகிறார்.

யோவான் 11:11-15

இயேசு, "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்துவிட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார்.

தன் சீடர்கள் நம்புவதற்கு ஒரு வாய்ப்பாக இப்புதுமை அமையும் என்று இயேசு கூறினார். ஆனால், சீடர்கள் மட்டுமல்ல, மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகள், பெத்தானியாவைச் சேர்ந்தவர்கள், இன்னும், இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மக்கள் அனைவரும் நம்புவதற்கு ஒரு வாய்ப்பாக, அமைந்த இப்புதுமையில், நம் தேடல் பயணம், அடுத்த வாரம் தொடரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 15:00