தேடுதல்

Vatican News
இளையோர் கூட்டம் இளையோர் கூட்டம்  (AFP or licensors)

ஆஸ்திரிய இளையோரின் நிதி திரட்டும் முயற்சி

எத்தியோப்பியா, ஈக்குவதோர், மற்றும் இந்தியாவில் உதவி தேவைப்படுவோரை மையப்படுத்தி, ஆஸ்திரிய இளையோர் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபாட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியா, ஈக்குவதோர், மற்றும் இந்தியாவில் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில், ஆஸ்திரியாவின் இளையோர் அமைப்பு ஒன்று, நிதி திரட்டும் முயற்சியை துவங்கியுள்ளது.

மிஸ்ஸியோ (Missio) என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்திரிய இளையோரின் உதவியுடன் நடத்தும் இந்த நிதி திரட்டும் முயற்சி, இவ்வாண்டு, 'உண்மையிலேயே இனிமையானது' என்ற தலைப்புடன் நடைபெறுகிறது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத மூலப்பொருள்களைக் கொண்டு, சமூக விழிப்புணர்வுடன் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், மற்றும் பழ இரசம் ஆகியவற்றை விற்பனை செய்வதன் வழியே, இளையோர் திரட்டும் நிதி, வறுமைப்பட்ட நாடுகளில் உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்தப்படும் என்று, மிஸ்ஸியோ நிறுவனத்தின் தேசிய இயக்குனர், அருள்பணி கார்ல் வால்னர் (Karl Wallner) அவர்கள் கூறினார்.

எத்தியோப்பியாவின் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மையம், பாலின வழியில் பாதிக்கப்பட்ட இளையோருக்கென ஈக்குவதோர் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மையம், இந்தியாவின் குழந்தைகள் நல ஆதரவு மையங்களின் தினசரி தேவைகள் போன்றவற்றிற்கு, ஆஸ்திரிய கத்தோலிக்க இளையோர் இவ்வாண்டு திரட்டும் நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஆஸ்திரியாவில், இளையோர் மேற்கொண்ட இந்த முயற்சியில், 110 பங்குத்தளங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

06 October 2018, 17:13