“சுற்றுச்சூழல் நீதி குறித்த அறிக்கை” கையெழுத்தானது “சுற்றுச்சூழல் நீதி குறித்த அறிக்கை” கையெழுத்தானது 

அனைத்து ஆயர்களின் சார்பாக, “சுற்றுச்சூழல் நீதி குறித்த அறிக்கை”

பூமித்தாயின் செல்வங்களை ஆபத்தான வழிகளில் அழித்துவரும் போக்கினை, அனைத்து ஆயர்களும் இணைந்து எதிர்க்கிறோம் – ஆயர்களின் உறுதிப்பாட்டு அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த பூமி கோளத்தின் அழுகுரலுக்கும், வறியோரின் அழுகுரலுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பிற்கும் செவிமடுத்து, பூமித்தாயின் செல்வங்களை ஆபத்தான வழிகளில் அழித்துவரும் போக்கினை, அனைத்து ஆயர்களும் இணைந்து எதிர்க்கிறோம் என்ற உறுதிப்பாட்டு அறிக்கையொன்று, அனைத்துலக ஆயர்களின் சார்பாக, அக்டோபர் 26, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், CIDSE என்ற பெயருடன் இயங்கிவரும் அனைத்துலக கத்தோலிக்க முன்னேற்ற இயக்கம், அனைத்துலக கத்தோலிக்க சுற்றுச்சூழல் இயக்கம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய கொள்கை அறிக்கை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் வெளியிடப்பட்டது.

ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர்களின் கையொப்பம்

ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சலாசார் கோமஸ், ஓசியானியா ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், பேராயர் பீட்டர் லோய் சோங், ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், பேராயர் Jean-Claude Hollerich, மற்றும் ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், பேராயர் Gabriel Mbilingi ஆகிய அனைத்து தலைவர்களும் இவ்வறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர்.

COP24 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டிற்கு முன்னேற்பாடாக...

“சுற்றுச்சூழல் நீதி குறித்த 2018ம் ஆண்டின் இணைந்த அறிக்கை” என்ற தலைப்பில் அனைத்து ஆயர் பேரவைகளின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, 2018ம் ஆண்டு போலந்து நாட்டின் Katowice நகரில் நடைபெறவிருக்கும் COP24 என்ற சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில், 2015ம் ஆண்டு பாரிஸ் மாநாட்டில் உருவான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பமாகிறது.

மூன்று முக்கிய கொள்கைகள்

சுற்றுச்சூழல் குறித்து இனியும் தாமதிக்க நமக்கு நேரம் இல்லை; நம் அடுத்த தலைமுறையினர் நம்மிடமிருந்து மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்; மிகவும் வலுவிழந்தோரின் மனித மாண்பும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை எழுதப்பட்டுள்ளது.

ஆறு அவசரக் கோரிக்கைகள்

இந்த மூன்று கொள்கைகளின் அடிப்படையில், உலக ஆயர்கள், ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவையாவன:

தொழில் மயமாவதற்கு முன், பூமிக்கோளத்தில் நிலவிய உலக வெப்பத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை உறுதி செய்யும் வகையில், வாழ்வு முறையில் மாற்றங்கள் நிகழவேண்டும்.

பழங்குடியினரின் எண்ணங்களுக்கு செவிமடுத்து, அவர்களுடைய தனிப்பட்ட பாரம்பரியங்களும் வாழ்வு முறையும் பாதுகாக்கப்படவேண்டும்.

பொருளாதாரம் ஏனைய துறைகளில் தலையிடாதவண்ணம், அத்துறையில், வெளிப்படையான வழிமுறைகள் உறுதிசெய்யப்படவேண்டும்.

நிலத்தடி எரிபொருளை பயன்படுத்துவதற்கு மாற்றாக, புதுப்பிக்கப்படக்கூடிய சக்திகளைப் பயன்படுத்தும் வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் வேளாண்மைத் துறையை, தகுதியான முறையில் முன்னேற்ற வேண்டும்.

‘இறைவா உமக்கே புகழ்’ என்ற திருமடலில் கூறியுள்ள எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், கத்தோலிக்க நிறுவனங்கள் எடுத்துவரும் பல்வேறு ஆன்மீக, மற்றும் நடைமுறை முயற்சிகள், உலகின் பிற அமைப்புக்களிலும் உருவாகவேண்டும் என்ற வேண்டுகோளுடன், ஆயர்களின் இவ்வறிக்கை நிறைவு பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 15:48