தேடுதல்

ஏமன் போரினால் சிதைந்திருக்கும் பள்ளி ஏமன் போரினால் சிதைந்திருக்கும் பள்ளி 

ஏமன் மோதல்களால் சிறார் நிலை பின்னேற்றம்

கல்வியின்றி குழந்தைகள் வாழ்வதும், பெண்களின் இளவயது திருமணங்களும், ஏமன் மோதல்களின் விளைவுகளாக உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏமன் நாட்டில் 1 கோடியே 10 இலட்சம் சிறார், ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், 20 இலட்சம் சிறார் கல்விக் கூடங்களுக்குச் செல்லாமல் இருப்பதாகவும், 40 இலட்சம் பேர் தங்கள் கல்வியாண்டை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது, யுனிசெஃப் என்ற உலக குழந்தைகள் நிதி நிறுவனம்.

இன்றைய ஏமனில் 2500க்கும் மேற்பட்ட பள்ளிகள், பயன்படுத்த முடியா நிலையில் இருப்பதாகவும், இதில் 66 விழுக்காடு பள்ளிகள் போரால் சேதமடைந்தவை எனவும் கூறும் குழந்தைகளின் நிதி அமைப்பான யுனிசெஃப், ஏமன் சிறாரில் 2,635க்கும் மேற்பட்டோர் ஆயுத குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், ஏமன் பெண்களுள் நான்கில் மூன்று பகுதியினர், 18 வயதிற்குள்ளேயே திருமணம் செய்யப்படுவதாகவும், இதிலும் 44.5 விழுக்காட்டினர், 15 வயதிற்குள் திருமண வாழ்வில் புகுவதாகவும் தெரிவிக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு மேலாக ஏமனில் இடம்பெறும் மோதல்களால், ஏமன் நாட்டின் சிறார்களுள், ஏறத்தாழ, 80 விழுக்காட்டினர், அதாவது, 1கோடியே 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர், மனிதாபிமான உதவிகளை சார்ந்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் கூறும் இந்த அமைப்பு, உணவின்மை, நோய், அடிப்படை வசதிகளின்மை, கட்டாயக் குடிபெயர்தல் போன்றவைகளுக்கு இச்சிறார்கள் உள்ளாகும் ஆபத்து உள்ளது என தெரிவிக்கிறது.

சிறார்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்துடன் தற்காலிக கல்வி முகாம்கள் துவக்கப்பட்டுள்ளதாகவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மன-சமூக அளவிலான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் யுனிசெஃப் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2018, 17:05