தேடுதல்

அருளாளர் ஆறாம் பால் அவர்கள் அருளாளர் ஆறாம் பால் அவர்கள்  

குடும்பம், மீட்பிற்கும், புனிதத்துவத்திற்கும் தலைசிறந்த வழி

ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பு, அமைதி, அன்பு ஆகியவை, குடும்பங்களில் காணப்படாதபோது, அவற்றை நம்மால் உலகிலும் காணமுடியாது –அருளாளர் ஆறாம் பால்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருமண உறவும், குடும்பமும் மீட்பிற்கும், புனிதத்துவத்திற்கும் தலைசிறந்த வழிகள் என்ற கருத்து, அருளாளரான திருத்தந்தை ஆறாம் பால் அவர்களின் எண்ணங்களிலும், எழுத்து வடிவத்திலும் இருந்தது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

அக்டோபர் மாதம், திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அவர்கள், புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, வத்திக்கான் நாளிதழில், "மொந்தீனி அகராதியின்படி, குடும்பம், சிறிய திருஅவை" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையொன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இவ்வுலகம் சார்ந்த அன்பு, உறவு ஆகியவற்றின் ஓர் அடையாளமாக விளங்கும் குடும்பங்களும், திருமண உறவும், 'இல்லமாகிய திருஅவை' என்று, ஆறாம் பால் என்ற பெயருடன் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற கர்தினால் மொந்தீனி அவர்கள் தன் உரைகளிலும், திருமடல்களிலும் கூறி வந்துள்ளார் என்று இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

மிலான் பேராயராக பணியாற்றிவந்த வேளையில், கர்தினால் மொந்தீனி அவர்கள் தன் மேய்ப்புப்பணி மடல்களிலும், மறையுரைகளிலும் குடும்பத்தைப் பற்றி வெளியிட்டிருந்த மாண்புமிக்க கருத்துக்கள், 'மனித வாழ்வு' என்று பொருள்படும் Humanae vitae என்ற திருமடலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பு, அமைதி, அன்பு ஆகிய விழுமியங்கள்,  குடும்பங்களில் காணப்படாதபோது, அவற்றை நம்மால் உலகிலும் காணமுடியாது என்ற கருத்து, அருளாளர் ஆறாம் பால் அவர்களின் எண்ணங்களிலும், எழுத்திலும் வலியுறுத்தப்பட்டது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2018, 15:57