தேடுதல்

ஏமன் நாட்டில் சிறாரை போர் வீரர்களாக மாற்ற முயலும் பெரியவர்கள் - "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு 9: 42) ஏமன் நாட்டில் சிறாரை போர் வீரர்களாக மாற்ற முயலும் பெரியவர்கள் - "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது" (மாற்கு 9: 42) 

பொதுக்காலம் 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது" (மாற்கு நற்செய்தி 9: 42)

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

300918 ஞாயிறு சிந்தனை

கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளையவர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் பொங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.

பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில், வென்றவர்களை விட, கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களுமே அதிகம் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

பொறாமை என்ற உணர்வின் ஊற்றாக இருப்பது, 'நான்-நீ', நாங்கள்-நீங்கள்' என்ற பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.

மோசேயுடன் சேராத இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இதையொத்த மற்றொரு நிகழ்வை நாம் நற்செய்தியிலும் காண்கிறோம்.

மாற்கு 9: 38

அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டு, தவறான முடிவுகள் எடுத்தவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.

நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம். நமது பொறாமை உணர்வுகள் பொருளற்றவை என்பதை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது.

எண்ணிக்கை 11:29

மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார்.

அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.

மாற்கு 9: 39

அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார்.

பொறாமையால் உங்கள் பார்வையை இழந்துவிடாதீர்கள் என்று கூறும் இயேசு, அடுத்து வரும் வரிகளில், உங்கள் பார்வையைப் பறிகொடுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை, மற்றொரு காரணத்திற்காகப் பரிந்துரைக்கிறார். இப்பகுதியில், இயேசு கூறும் சில அறிவுரைகள், கேட்பதற்கு கடினமாக உள்ளன.

சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறியவேண்டும் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன.

நாம் உட்கொள்ளும் பல மருந்துகள் கசப்பானவையெனினும் உடல் நலனை மனதில் கொண்டு அவற்றை உட்கொள்கிறோம், அல்லவா? அதேபோல், இயேசுவின் கூற்றுகள் நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

சவால்கள் நிறைந்த இயேசுவின் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ள, அவர் எந்தப் பின்னணியில் இவற்றைச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப்போல் மாறுங்கள் என்று கூறினார் இயேசு. ஆனால், நடைமுறையில் அவர் கண்டது வேறு. அவரது கூற்றுகளுக்கு நேர் மாறாக, குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை, வயதில் முதிர்ந்தவர்களின் உலகில், வலுக்கட்டாயமாக திணிப்பவர்களைக் குறித்து, இயேசு இன்றைய நற்செய்தியில் எச்சரிக்கை விடுக்கிறார். மனசாட்சியற்ற இந்த அரக்கர்களால் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துக்களை நினைத்து, கொதித்தெழுகிறார்.

குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள், சமுதாயத்தில் சிறியவர்கள், அனைவரையும் “இச்சிறியோருள்” என்ற சொல்லில் இணைத்துவிடுகிறார் இயேசு. "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையை பெரிதும் வேதனையில் ஆழ்த்திவரும் ஒரு குற்றச்சாட்டு, சிறியோருக்கும், பெண்களுக்கும் எதிராக, அருள்பணியாளர்களால், ஆயர்களால் இழைக்கப்பட்டுவரும் பாலியல் குற்றங்கள். இனிவரும் காலங்களில், சிறியோரும், பெண்களும், திருஅவையில், பாதுகாப்பை உணரும்வண்ணம், தகுந்த வழிமுறைகள் உருவாக வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.

சமுதாயம் என்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவரையை, இயேசு, இன்றைய நற்செய்தியில், கடினமான வழியில் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மாற்றங்களை உருவாக்குவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டியிருக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கை, கால் இவற்றை வெட்டிப் போடுங்கள், கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், என்று இயேசு கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையில் கொத்திவிடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு அது. மருத்துவமனை செல்வதற்கு நேரமோ, வாகனவசதியோ இல்லாத நிலை. வாகனத்திற்காகக் காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து இருந்தது. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற பல நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்தக் கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயத்தால் புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும்போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.

உயிரா, உறுப்பா என்ற கேள்வியை வந்தடையும் கடைசி நிலை, ஒரு நாளிலோ, ஓரிரவிலோ வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கொத்தியதால், கையை வெட்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்படும் நிலை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்வைப் புரட்டிப்பார்த்தால், சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு வரும் சர்க்கரை வியாதியை எண்ணிப்பார்ப்போம். அந்த நிலை வருவதை, பல வழிகளில் நம்மால் தடுக்கமுடியும். ஒரு சிலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனையாக இருக்கலாம். சரி... அந்தக் குறை இருக்கிறதென்று கண்டுபிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், சர்க்கரை வியாதி என்ற குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும்.

ஆனால், அவ்வகை கட்டுப்பாடு ஏதுமில்லாமல், அல்லது, அக்காட்டுப்பாடுகளை அடிக்கடி மீறி, வம்பை வலியச்சென்று வரவழைத்துக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். வழியோடு போகும் பாம்பைச் சீண்டி, விளையாடுபவர்கள், இவர்கள். இன்னும் சிலரோ, பாம்பு வாழும் புத்தைத் தேடிச்சென்று, புத்தில் கைகளைவிட்டு விளையாட நினைப்பவர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல பழக்கங்களைத் தேடிச் செல்பவர்களை நாம் அறிவோம். நம் குடும்பங்களில், நண்பர்கள் குழுவில் இத்தகைய ஆபத்தான பழக்கங்களுக்கு அடிமையாகியிருப்பவர்களை, இன்று இறைவனின் சந்நிதியில் கொணர்ந்து, அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

சர்க்கரை வியாதியால் துன்புறுகிறவர்களை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வாழும்போது, திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும், அவர்களுக்கு தரப்படும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்... கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்... தேவையற்ற ஆபத்துக்களை தேடிச்செல்வது, மதியீனம்... என்ற அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!

இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர், இவற்றை, கோபமாக சொல்கிறாரா, சாந்தமாகச் சொல்கிறாரா என்ற ஆய்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணரவும், அதன்படி வாழவும் முயல்வோம்!

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி.

"நான் செல்லும் கடல் பயணத்தில், வீசும் காற்றை என்னால் திசை திருப்ப இயலாது, ஆனால், அந்தக் காற்றுக்கு ஏற்றவாறு, என் பாய்மரத்தை திருப்பி, நான் செல்லவேண்டிய கரையை அடையமுடியும்" என்று சொன்னவர், ஜிம்மி டீன் என்ற புகழ்பெற்ற பாடகர்.

"I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination." Jimmy Dean

அரண்மனையைவிட்டு ஒருபோதும் வெளியே வராத ஓர் அரசர், ஒருநாள், மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்துசென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை, தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, ஊர் முழுவதும், அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்க நினைத்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம், "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களைமட்டும் மாட்டுத் தோலால் மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.

ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2018, 16:25