தேடுதல்

இயேசுவிடம் வாதாடும் பரிசேயர்கள் இயேசுவிடம் வாதாடும் பரிசேயர்கள் 

பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம் பெறும் ஆபத்தைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

020918 ஞாயிறு சிந்தனை

ஐசக் ஒலே (Isaac Ole) என்ற இளையவர், தன் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் நிலவும் பெருமை மிகுந்த ஒரு பாரம்பரியத்தைப்பற்றி பாட்டி சொன்னது, ஐசக்கை அதிகம் கவர்ந்தது. அதாவது, ஐசக்கின் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று, மூன்று தலைமுறையினர், தங்கள் 21வது பிறந்தநாளன்று, ஊருக்கு நடுவே இருந்த ஏரியில் நடந்து சென்று, மறுகரையில் இருந்த 'கிளப்'பில் முதல் முறையாக, சட்டப்பூர்வமாக மது அருந்திவிட்டு, மீண்டும் ஏரியில் நடந்து, வீட்டுக்குத் திரும்பினர் என்று பாட்டி சொன்னது, ஐசக்கின் மனதில் ஆழப் பதிந்தது.

ஐசக் ஒலே, தன் 21வது பிறந்தநாளன்று, நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஏரிக்குச் சென்றார். இருவரும் ஒரு படகில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து அடுத்தக் கரைக்கு நடந்து செல்ல, ஐசக் படகைவிட்டு இறங்கி, நீரில் கால் வைத்தபோது, தண்ணீரில் மூழ்கினார். படகிலிருந்த நண்பர் அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்தார்.

அவமானமும், ஆத்திரமும் நிறைந்தவராய், வீடு திரும்பிய ஐசக், பாட்டியிடம் சென்று, "என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, எல்லாரும் 21வது வயதில் ஏரியில் நடந்தார்கள் என்றால், என்னால் மட்டும் ஏன் அது முடியாமல் போனது?" என்று கத்தினார்.

பாட்டி அவரை அமைதிப்படுத்தி, அமரவைத்து, "ஏனெனில், உன் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும் சனவரி மாதம் பிறந்தவர்கள். எனவே, அவர்களுடைய பிறந்தநாளன்று, ஏரி பனியால் உறைந்திருந்தது. நீயோ, வெப்பம் நிறைந்த ஜூலை மாதம் பிறந்தவன்" என்று அன்பாக விளக்கமளித்தார்.

இது ஒரு சிரிப்புத் துணுக்கு என்றாலும், சிந்தனையைத் தூண்டும் கதை இது. பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மிக எளிதாக மறைக்கப்படும் உண்மைகளைப்பற்றி சிந்திக்க, இந்தத் துணுக்கு உதவியாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; அப்பா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்... என்று வரிசையாகச் சொல்லி, 21ம் பிறந்தநாளன்று, ஆண் வாரிசுகள் ஏரியில் நடப்பது, அக்குடும்பத்தின் பாரம்பரியம் என்பதில், குடும்பத்தினர் பெருமைப்பட்டனர். ஆனால், அந்த சாகசத்தின் பின்னணியில், சனவரி மாதம், குளிர்காலம், ஏரி நீர் உறைந்திருப்பது போன்ற விவரங்கள், பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டன. பின்னணிகளை மறைத்துவிட்டு, ஏரியில் நடப்பதை மட்டும், ஒரு பாரம்பரியச் சடங்காக மாற்றிவிட்டது அக்குடும்பம். பாரம்பரியச் சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.

குடும்பங்களில், சமுதாயத்தில், பணியாற்றும் இடங்களில் பல பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்குக் காரணங்களும் உள்ளன. ஆனால், காலப்போக்கில், காரணங்கள் மறக்கப்பட்டு, அல்லது, மறைக்கப்பட்டு, 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்ற கட்டாயமாக மாறும்போது, அவை சடங்குகளாகின்றன.

இத்தகையைச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுளோடும், கோவிலோடும் இணைக்கப்படும்போது, அவை, இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச் சடங்குகளாக மாறிவிடுகின்றன. பல வேளைகளில், இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம் பெறும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய ஓர் ஆபத்தைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன. வெறுமையான சடங்குகளை மதம் என்று சொல்லும் விபரீதத்தை ஆய்வு செய்ய, இன்றைய வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

இன்றைய நற்செய்தியில், ‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன:

மாற்கு நற்செய்தி 7: 3-4

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

மேலோட்டமாகப் பார்த்தால், இச்சடங்கு மக்களின் உடல் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ள முடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்கள் சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல், வெளியில் சென்று வீடு திரும்புவோரும் கிருமிகள் பலவற்றைச் சுமந்து வர வாய்ப்புண்டு. எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்க இயலாது.

ஆனால், பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டிய காரணம், புற இனத்தவருடன் அவர்கள் கொண்ட தொடர்புகள். சந்தையில் வாங்கிய பொருள்கள், வெளி உலகில் அவர்கள் நடமாடிய இடங்கள் ஆகியவை, புற இனத்தவரும் பயன்படுத்திய இடங்கள், அல்லது, பொருள்கள் என்பதால், அவை 'தீட்டுப்பட்டவையாக' மாறுகின்றன. இந்தக் காரணமே, அவர்களை, இந்த கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ளத் தூண்டியது. இத்துணை முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் உருவாக்கியது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இவற்றை, கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மோசே, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

இணைச்சட்டம் 4: 1-2

இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew: "613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன என்று சொல்வோரும் உண்டு.)

சட்டங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் மீண்டும் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:

எசாயா 29 : 13

என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச்சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!

மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை, உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் வில்லியம் பார்க்லே அவர்கள், ஒரு குட்டிக்கதை வழியே கூறியுள்ளார்.

மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர், மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.

மதத்தின் உண்மைப் பொருள் மறைந்துவிடும் நேரங்களில், அந்த வெற்றிடத்தை, சடங்குகளும், சட்டங்களும் நிரப்பிவிடுகின்றன. இந்த எண்ணத்தை உணர்த்தும் மற்றொரு கதை இதோ - 'தாத்தா சாகக்கிடக்கிறார்' என்ற அவசரச் செய்தியைக் கேட்டு, இரவு நேரத்தில் பங்குத்தந்தை, அந்த முதியவர் வாழ்ந்த இல்லம் நோக்கிச் சென்றார். அப்போது, திடீரென, ஒருவர், பங்குத்தந்தையை துப்பாக்கி முனையில் மிரட்டி, பணம் கேட்டார். தன் 'பர்ஸை' எடுப்பதற்காக பங்குத்தந்தை முயன்றபோது, அவர் குரு என்பதைக் கண்டுகொண்ட மனிதர், "மன்னிக்கவும் சாமி. நீங்கள் ஒரு குரு என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். நீங்கள் போகலாம்" என்று கூறினார். இரவு குளிராக இருந்ததால், பங்குத்தந்தை, அம்மனிதரிடம் 'சிகரெட் பாக்கெட்'டை நீட்டினார். உடனே, அம்மனிதர், "வேண்டாம் சாமி. நான் வெள்ளிக்கிழமைகளில் சிகரெட் குடிப்பதில்லை" என்று கூறினார்.

மதத்தின் சடங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில் நாம் காட்டும் ஆர்வம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பின்பற்றுவதில் காணாமல் போய்விடுகிறது. இத்தகைய 'குருட்டு' ஆர்வத்தை தவறாகத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப் பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர் என்பது, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மை.

உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், யாக்கோபு தெளிவாகக் கூறியுள்ளார்:

யாக்கோபு எழுதிய திருமுகம் 1:27

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

புனித யாக்கோபு வரையறுத்த இந்த சமயவாழ்வை தன் சொந்த வாழ்வாக மாற்றி, வறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசா செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவற வாழ்வில் இணைந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்து செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா அவர்கள், அந்த பத்திரிகையாளரிடம் சொன்னார்.

இறைவனுக்கு நெருக்கமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவின் திருநாளை, செப்டம்பர் 5, வருகிற புதனன்று சிறப்பிக்கிறோம். அந்த அன்னையின் பரிந்துரையால், நாம் பின்பற்றும் மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 13:50