தென்னாப்பிரிக்காவின் Soweto நகரில் பதட்டநிலை தென்னாப்பிரிக்காவின் Soweto நகரில் பதட்டநிலை 

தென்னாப்ரிக்கா : வெளிநாட்டவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

காழ்ப்புணர்வு, முற்சார்பு எண்ணங்கள், அறியாமை ஆகிய இருளில் இன்னும் நடப்பவர்கள், இரக்கம், மனித ஒருமைப்பாடு ஆகிய ஒளிகளுக்குத் திரும்புமாறு பேராயர் Tlhagale வலியுறுத்தல்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தென்னாப்ரிக்காவில் அண்மையில் வெளிநாட்டு குடிமக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், தென்மண்டல ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பணிக்குழுத் தலைவர்.

தென்னாப்ரிக்காவின் Soweto மற்றும் Zeerust நகரங்களில், வெளிநாட்டு குடிமக்கள் அண்மையில் தாக்கப்பட்டிருப்பதைக் கடுமையான சொற்களால் சாடியுள்ள, Johannesburg பேராயர் Buti Tlhagale அவர்கள், நன்றாக உடையணிந்து, நன்றாக உணவூட்டப்படும் தென்னாப்ரிக்கர்கள், வெளிநாட்டவரின் கடைகளைச் சூறையாடி, உரிமையாளர்களைத் தாக்கி, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் கொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

சூறையாடியவர்கள், கடைகளிலிருந்து குளிர்சாதனப் பெட்டிகளையும், அடுப்புகளையும், ஏனைய சாமான்களையும் கடைகளிலிருந்து சூறையாடி, லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்கையில், காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்ற காட்சியைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது என்றும், பேராயர் Tlhagale அவர்கள் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர், போதைப்பொருள்களையும், காலாவதியான பொருள்களையும் விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தால், அதை சட்டமுறையாக கையாள்வதைவிட்டு, உள்ளூர் மக்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், பேராயர் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 15:43