தேடுதல்

ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள், உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்திக்கிறார் ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள், உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்திக்கிறார் 

மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த ஆயர் மஸ்கரீனஸ்

இந்தியக் கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக வாக்களித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்களும், மேகாலயா மாநில முதல்வர், கொன்ராட் சங்மா அவர்களும், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்களை, செப்டம்பர் 3, இத்திங்களன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்று, இந்திய ஆயர் பேரவை, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்தும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்தும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் விளக்கிக் கூறியதை, அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பொறுமையாக செவிமடுத்தார் என்று, இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று சமுதாயப்பணிகள் ஆற்றி வரும் 88 அரசு சாரா தன்னார்வக் குழுக்கள் மீது கடினமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இக்குழுக்கள் அனைத்தும், கிறிஸ்தவ குழுக்கள் என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆயரும், மேகாலயா முதல்வரும் கூறியவற்றை கவனமுடன் செவிமடுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்றும், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் கூறினார். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2018, 14:46