Cerca

Vatican News
மத்திய கிழக்கில் கிறிஸ்தவ தலைவர்கள் மத்திய கிழக்கில் கிறிஸ்தவ தலைவர்கள்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 6

மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் துன்பங்களைத் தாங்க இயலாமல், கட்டாயமாக தங்களின் பூர்வீக இடங்களைவிட்டு வெளியேறி வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு பிறந்து வாழ்ந்து மரித்த புனித இடங்களையும், தொடக்க காலத்தில் கிறிஸ்தவம் பரவி வந்த இடங்களையும், முஸ்லிம்களின் ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை எட்டு பெரிய புனிதப் போர்கள் அல்லது சிலுவைப்போர்கள் நடைபெற்றன. அவற்றில் ஒரு சிலுவைப்போர், சிறார் சிலுவைப்போர் என அழைக்கப்படுகின்றது. ஆனால் இதில் சிறார் ஈடுபடுத்தப்படவில்லை. இப்படி அழைக்கப்பட்டதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது.  மேலும், 1213ம் ஆண்டில், திருத்தந்தை 9ம் கிரகரி அவர்கள், அரசர் 2ம் பிரெட்ரிக் அவர்களை, ஐந்தாவது சிலுவைப்போருக்குத் தூண்டினார். திருஅவை, புனித பூமியைத் தாக்குவதற்கு, மீண்டும் முயற்சித்தது. ஹங்கேரி, ஆஸ்ட்ரியா மற்றும் பவேரியாவைச் சேர்ந்த படைகள் 1219ம் ஆண்டில், எகிப்தின் Damietta நகரைக் கைப்பற்றின. ஆயினும் கெய்ரோவில் நடைபெற்ற சண்டையில் தோற்றதால், சிலுவைப்போர் வீரர்கள் சரணடைய வேண்டியதாயிற்று.

அரசர் 2ம் பிரெட்ரிக் அவர்களை, திருத்தந்தை திருஅவையைவிட்டு புறம்பாக்கியபின்,  1228ம் ஆண்டில், அந்த அரசர், சிரியா நாடு செல்வதற்காக பிரிந்திசியிலிருந்து புறப்பட்டார்.  துருக்கியர்களுடன் உரையாடியதன் பயனாக, அரசர் 2ம் பிரெட்ரிக் அவர்கள் வெற்றி பெற்றார். அதோடு, எருசலேம், நாசரேத், பெத்லகேம் ஆகிய நகரங்கள், பத்து ஆண்டுகளுக்கு எவ்விதப் போருமின்றி, சிலுவைப்போர் வீரர்களிடம் அளிக்கப்பட்டன. இது, திருத்தந்தையின் முயற்சி இல்லாமல் வெற்றி பெற்ற பெரிய சிலுவைப்போராகும். அந்த ஆறாவது சிலுவைப்போர் 1229ம் ஆண்டுவரைதான் நீடித்தது. 1244ம் ஆண்டில், ஏழாவது சிலுவைப்போர் தொடங்கியது. எகிப்தியர்கள் எருசலேமைத் தாக்கினர். பிரான்ஸ் நாட்டு அரசர் 9ம் லூயிஸ் அவர்கள், எகிப்துக்கு எதிராக, 1248ம் ஆண்டு முதல், 1254ம் ஆண்டுவரை சிலுவைப்போரை நடத்தினார். அது தோல்வியை எட்டியது. பின்னர், சிரியாவிலுள்ள சிலுவைப்போர் மாநிலங்களுக்கு உதவுவதற்காக, 1270ம் ஆண்டில், பிரான்ஸ் அரசர் 9ம் லூயிஸ் அவர்கள் போருக்குப் புறப்பட்டார். ஆனால், சிலுவைப்போர் வீரர்கள் Tunis வரைக் கைப்பற்றினர். இதற்கு ஒருமாதம் சென்று அரசர் லூயிஸ் காலமானார்.

ஒன்பதாம் சிலுவைப்போர்

அரசர் முதலாம் எட்வர்ட் அவர்கள், இங்கிலாந்தின் அரசராக முடிசூடுவதற்குமுன், 1271ம் ஆண்டில் சிலுவைப் போரை ஆரம்பித்தார். ஆனால் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவர் அதற்கு அடுத்த ஆண்டில், ஓய்வுபெற்றார். இதை ஒன்பதாம் சிலுவைப்போர் என்கின்றனர். இதற்குப் பின்னர், வேறு பல காரணங்களுக்காக மக்கள் சிலுவைப்போர்களை நடத்தினர். 1291ம் ஆண்டில் Acre வீழ்ச்சியடைந்தது. இரண்டு நூற்றாண்டுகள் போருக்குப் பின்னர் சிலுவைப்போர்கள் முடிவடைந்தன. இவற்றில் சிலுவைப்போர் வீரர்களுக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டன.

21ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

முதல் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியதுமுதல்,  அப்பகுதியில் குறிப்பிடத்தக்க சிறுபான்மை மதமாகவே இருந்து வந்தது. மத்திய கிழக்கில், முதல் உலகப் போருக்குமுன் இருபது விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள், தற்போது ஏறத்தாழ ஐந்து விழுக்காடாகக் குறைந்துள்ளனர். ஆயுத மோதல்களும், இஸ்லாம் தீவீரவாதிகளின் தாக்குதல்களுமே இதற்குக் காரணம். மத்திய கிழக்கிலுள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும், மரபுகளும் பன்மைத்தன்மை கொண்டவை. சைப்ரசிலுள்ள ஏறத்தாழ 78 விழுக்காட்டு கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினோர் கிரேக்கர்கள் மற்றும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபையினர். லெபனான் நாட்டிலுள்ள ஏறத்தாழ 41 விழுக்காடு கிறிஸ்தவர்களுள், பெரும்பான்மையினோர் மாரனைட் கிறிஸ்தவர்கள். எகிப்திலுள்ள ஏறத்தாழ 11 விழுக்காட்டு கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினோர் காப்டிக் கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்கள், எகிப்தைத் தவிர, சூடான், லிபியா, ஜோர்டன், லெபனான், டுனிசியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் உள்ளனர். எகிப்தில், காப்டிக் கிறிஸ்தவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே இருந்தபோதிலும், ஐஎஸ் இஸ்லாமிய அரசு உருவானதற்குப் பின்னர், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. லிபியாவில்  21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவ கட்டடத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு, லிபியக் கடற்கரையில் தலைவெட்டப்பட்டு இறந்த காணொளி, 2015ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வெளியானது. 2016ம் ஆண்டு டிசம்பரிலிருந்து, ஐ.எஸ். அமைப்பால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2017ம் ஆண்டு ஏப்ரலில் குருத்தோலை ஞாயிறன்று, இரு ஆலயங்கள் குண்டு வைத்து தாக்கப்பட்டன. இவற்றில் 45 பேர் இறந்தனர். இதே ஆண்டு மே மாதத்தில், ஏறத்தாழ முப்பது கிறிஸ்தவர்கள், தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   

ஈராக்கில், 2003ம் ஆண்டில் சதாம் ஹசேனின் வீழ்ச்சிக்குமுன்னர், 15 இலட்சமாக இருந்த கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது ஐந்து இலட்சத்திற்கும் குறைவாக உள்ளது. சிரியாவில் 2011ம் ஆண்டில் உள்நாட்டுப்போர் தொடங்குமுன்னர் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ ஒன்பது விழுக்காடாக இருந்தனர். தற்போது அவர்களில் பாதிப்பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள், பெருமளவில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு, இந்த 21ம் நூற்றாண்டிலும், மதத்தின் பெயரால் போர்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து, சித்ரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். துன்பங்களைத் தாங்க இயலாமல், இவர்கள், கட்டாயமாக தங்களின் பூர்வீக இடங்களைவிட்டு வெளியேறி வருகின்றனர். தொடக்க கால கிறிஸ்தவ இடங்களில், கிறிஸ்தவர்களே இல்லாமல் போகும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.

26 September 2018, 15:39