சிலுவைப்போர், சிலுவைப்போர், 

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 5

சிறார் அணியின் தலைவர்களில் ஒருவர், 1251ம் ஆண்டின் மேய்ப்பர்களின் சிலுவைப்போருக்குத் தலைவரானார்

மேரி தெரேசா - வத்திக்கான்

புனித பூமியிலுள்ள புனித இடங்களை முஸ்லிம்களிடமிருந்து மீட்பதற்காக, 1096க்கும் 1291ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே எட்டு பெரிய போர்கள் நடந்தன. இவை, சிலுவைப்போர்கள் அல்லது புனிதப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. 1212ம் ஆண்டில் நடந்த சிலுவைப்போர், சிறார் சிலுவைப்போர் எனவும் அழைக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு அழைக்கப்பட்டது என்பதற்கு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

1212ம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற நான்கு சிலுவைப்போர்களில், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாக எழுந்த ஆர்வத்தைக் கண்ட, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலிருந்த சிறார் இணைந்து, புனித இடங்களை மீட்பதற்காகப் போருக்குப் புறப்பட்டனர். பிரான்ஸ் அல்லது ஜெர்மனியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தான் இயேசுவை காட்சியில் கண்டதாகவும், அமைதியான வழியில் முஸ்லிம்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றுமாறு இயேசு கூறியதாகவும் சொல்ல, அச்சிறுவனைப் பின்பற்றி, பல சிறார் ஓர் அணியாகத் திரண்டு இத்தாலிக்குச் சென்றனர். இத்தாலியில் அச்சிறார் கப்பல்களில் அனுப்பப்பட்டனர். அந்தக் கப்பல்கள், புயலில் சிக்கின அல்லது அவை ஆப்ரிக்காவின் மொராக்கோ சென்றன. இச்சிறாரில் பலர் பசியால் மடிந்தனர் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டனர் எனச் சொல்லப்படுகின்றது.

ஜெர்மனியிலிருந்து நிக்கொலாஸ் என்ற இடையன், முதல் அணியைத் திரட்டிக்கொண்டு ஆல்ப்ஸ் மலையைக் கடந்து, 1212ம் ஆண்டின் வசந்த கால ஆரம்பத்தில் இத்தாலிக்குள் நுழைந்தான். ஏறத்தாழ ஏழாயிரம் பேர் அவ்வாண்டு ஆகஸ்ட் இறுதியில் ஜெனோவா துறைமுக நகரத்தை அடைந்தனர். ஆனால் அச்சிறார் அணியின் முயற்சி வெற்றிபெறவில்லை. எனவே இவர்களில் சிலர் சொந்த வீடுகளுக்கும், வேறு சிலர் உரோமைக்கும் சென்றனர். இன்னும் சிலர் மார்செய்ல்ஸ் சென்றனர், அங்கு அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். எவருமே புனித பூமிக்குச் செல்லவில்லை.

இரண்டாவது அணி, Chateaudun கிராமத்திற்கு அருகிலிருந்து, Stephen de Cloyes என்ற இடையன் சிறுவனின் தலைமையில், 1212ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புறப்பட்டது. பிரான்ஸ் அரசருக்கு இயேசுவிடமிருந்து ஒரு கடிதம் இருப்பதாக அச்சிறுவன் சொன்னான். முப்பதாயிரத்துக்கும் அதிகமானோரைச் சேர்த்துக்கொண்டு செயின்ட் டென்னிஸ் சென்றான் அச்சிறுவன். அங்கு அற்புதங்கள் நடக்கக் கண்டான் அவன். 2ம் பிலிப் அரசரின் ஆணை மற்றும் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் ஆலோசனையின் பேரில், அந்த அணியினர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த அணியும் எருசலேம் செல்லவில்லை.

அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த சிறார் படையினர் அனைவரும், சிறார் அல்ல என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த அணியினர், 1200களின் தொடக்க காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால், பிரான்சின் வடக்கு மற்றும் ஜெர்மனியில் வாழ்ந்த, பல ஏழை விவசாயிகள் எனவும், இவர்கள், கட்டாயமாக தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, செய்வதறியாது அலைந்துகொண்டிருந்தவர்கள் எனவும், இலத்தீனில் இவர்கள் சிறுவர்கள் எனவும் அழைக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1212ம் ஆண்டில், ஸ்டீபன் என்ற ஓர் இளம் ப்ரெஞ்ச் சிறுவனும், நிக்கொலாஸ் என்ற ஜெர்மானிய ஏழைச் சிறுவனும், அதாவது இந்த ஏழை விவசாயிகள், இயேசுவை ஒரேமாதிரி காட்சியில் கண்டதாக அறிவித்தனர். இதன் விளைவாக, இந்த ஏழை விவசாயிகள் ஒன்றுதிரண்டு, திக்குத்தெரியாது அலைந்துகொண்டிருந்த தங்கள் வாழ்வை, சமய இயக்கமாக மாற்றி, திருப்பயணத்தைத் தொடங்கினர். இந்த ஏழைகள் சிலுவையைப் பின்தொடர்ந்து, போருக்கு அணிவகுத்துச் சென்றனர். இவர்கள், தங்களை, இயேசுவின் நற்செய்தி பயணத்தோடு தொடர்புபடுத்தினர். எனினும், இதற்கும், புனிதப் போருக்கும் தொடர்பில்லை. அக்காலத்தில் அனைத்து விவரங்களும் இலத்தீனில் எழுதப்பட்டன. இது நடந்து முப்பது ஆண்டுகள் சென்று, இவை குறித்து எழுதப்பட்ட விவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், pueri அதாவது சிறார் என மொழிபெயர்க்கப்பட்டன. இவ்வாறு பிறந்ததே சிறார் சிலுவைப்போர்.

இந்த ஏழை விவசாயிகள், அறியாமையால், துறவி பீட்டர் அவர்களின் சிலுவைப்போர் யுக்திகளைப் பின்பற்றினர். அவர்கள் வாழ்வும் சோகத்தில் முடிந்தது. பாரிஸ் நகர் மாத்யு அவர்களின் குறிப்புகளின்படி, இந்தச் சிறார் அணியின் தலைவர்களில் ஒருவர், 1251ம் ஆண்டின் மேய்ப்பர்களின் சிலுவைப்போருக்குத் தலைவரானார் எனத் தெரிகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2018, 14:57