தேடுதல்

Vatican News
சிலுவைப் போர் சிலுவைப் போர்  

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பாகம் 4

முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்த எருசலேமை கைப்பற்றுவதற்காக, திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள் விடுத்த அழைப்பின்பேரில், இலத்தீன் கிறிஸ்தவப் படைகள் 1202-1204ம் ஆண்டுவரை போரிட்டன. இதுவே 4வது சிலுவைப் போர் ஆகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

11ம் நூற்றாண்டின் இறுதியில், முஸ்லிம் பேரரசு, பழமையான கிறிஸ்தவ உலகின் மூன்றில் இரண்டு பகுதியை ஆக்ரமித்திருந்தது. இந்த பகுதியை மீட்பதற்காக, திருத்தந்தை 2ம் உர்பான் விடுத்த விண்ணப்பத்தின்பேரில், ஐரோப்பிய கிறிஸ்தவ சிலுவைப் போர் வீரர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையே 1096ம் ஆண்டு போர் தொடங்கியது. 1099ம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற பெரிய போரில், சிலுவைப்போர் வீரர்கள் எருசலேமைக் கைப்பற்றினர். இத்துடன் இந்தப் போர் முடிவடைந்தது. இப்போர், முதல் சிலுவைப் போர் என்று அழைக்கப்படுகின்றது. தங்களின் இலக்கு நிறைவேறியதால், சிலுவைப் போர் வீரர்களில் பலர், தங்களின் நாடுகளுக்குத் திரும்பினர். ஐரோப்பா திரும்பாமல், அங்கேயே தங்கிய எஞ்சிய சிலுவைப்போர் வீரர்கள், புனித பூமியில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் நான்கு பெரிய மேற்கத்திய குடியிருப்புக்களை, அதாவது, எருசலேம், Edessa, அந்தியோக்கியா, ட்ரிப்பொலி ஆகிய முக்கிய நகரங்களில் சிலுவைப்போர் நாடுகளை அமைத்தனர். Edessa என்பது, தற்போது துருக்கியின் தென்கிழக்கேயுள்ள Urfa என்ற நகரமாகும். நகரங்களைச் சுற்றிலும் உறுதியான கோட்டைகளை அமைத்து, ஏறத்தாழ 1130ம் ஆண்டுவரை அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் படைகள், இந்தக் கிறிஸ்தவர்களை, பிராங்ஸ் என அழைத்து, அவர்களுக்கு எதிராக, மீண்டும் ஜிகாத் என்ற புனிதப்போரைத் தொடுத்தன.

இரண்டாவது சிலுவைப்போர்

1144ம் ஆண்டில் செல்சுக் முஸ்லிம் பேரரசின் அதிபரான மொசூல் ஆளுனர் Zangi  என்பவர் Edessaவைக் கைப்பற்றினார். இதனால், வடக்கிலிருந்த சிலுவைப்போர் நாடு, பெரும்   இழப்பைச் சந்தித்தது. இச்செய்தி ஐரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேற்கிலிருந்த கிறிஸ்தவ அதிகாரிகள், மற்றுமொரு சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தனர். பிரான்சின் 7ம் லூயிஸ், ஜெர்மனியின் 3ம் கோன்ராட் ஆகிய இரு பெரும் அரசர்கள் தலைமையில் 1147ம் ஆண்டில், இரண்டாவது சிலுவைப்போர் தொடங்கியது. அதே ஆண்டு அக்டோபரில், துருக்கியர்கள், அரசர் கோன்ராடின் படைகளை, Dorylaeum எனுமிடத்தில் முறியடித்தனர். அதே இடத்தில்தான் முதல் சிலுவைப்போரில், கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. அரசர்கள் லூயிஸ், கோன்ராட் ஆகிய இருவரும், எருசலேமில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் படைகளை குவித்து, சிரியாவின் முக்கிய நகரமான தமஸ்கைத் தாக்குவதற்குத் திட்டமிட்டனர். தமஸ்கை ஆட்சிசெய்தவர், மொசூலில், Zangi  என்பவருக்குப்பின் ஆட்சி செய்த நூர் அல்-தினிடம் உதவி கேட்டார். முஸ்லிம் நேசப்படைகள், மீண்டும் சிலுவைப்போர் வீரர்களுக்கு அவமானத்தை உண்டுபண்ணின. நூர் அல்-தின், தமஸ்கையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தி, 1154ம் ஆண்டில், தன் பேரரசை விரிவுபடுத்தினார்.

மூன்றாம் சிலுவைப் போர்

எருசலேமிலிருந்த சிலுவைப்போர் வீரர்கள், எகிப்தைக் கைப்பற்றுவதற்கு பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் நூர் அல்-தினின் படைகள் 1169ம் ஆண்டில் கெய்ரோவைக் கைப்பற்றி, சிலுவைப்போர் வீரர்களைக் கட்டாயமாக வெளியேற்றின. 1174ம் ஆண்டில், நூர் அல்-தின், காலமானதைத் தொடர்ந்து, 1187ம் ஆண்டில், ஆட்சிக்கு வந்த சலாதின், எருசலேமைக் கைப்பற்றுவதற்கு பெரிய போரை நடத்தினார். அவரின் படைகள் கிறிஸ்தவப் படைகளை, ஹட்டின் என்ற இடத்தில் வீழ்த்தி, முக்கியமான எருசலேம் நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றின. இந்தத் தோல்வியால் கோபம் கொண்டு, பிரான்சின் 2ம் பிலிப், இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்டு, வயதான அரசர் பிரெட்ரிக் பார்பரோசா ஆகியோர், மூன்றாம் சிலுவைப்போரை நடத்தினர். 1191ம் ஆண்டு செப்டம்பரில், அரசர் ரிச்சர்டின் படைகள், Arsuf போரில், சலாதின் படைகளை வீழ்த்தின. அரசர் ரிச்சர்டு, ஜாப்பா நகரைக் கைப்பற்றி, சில பகுதிகளையும் கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, எருசலேம் நகரை நெருங்கினார். 1192ம் ஆண்டில், எருசலேம் அரசை மீண்டும் உருவாக்கும் அமைதி ஒப்பந்தத்தில், இங்கிலாந்து அரசர் ரிச்சர்டும், சலாதினும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில், எருசலேம் நகரம் இணைக்கப்படவில்லை. இதோடு மூன்றாம் சிலுவைப் போர் முடிவுக்கு வந்தது. 

நான்காவது சிலுவைப் போர்

1198ம் ஆண்டில் திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள், புதியதொரு சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், ஐரோப்பாவுக்கும், பைசான்டைன் பேரரசுக்கும் இடையே நிலவிய அதிகாரப் போராட்டங்கள், சிலுவைப்போர் வீரர்களின் பணியின் நோக்கத்தை திசை திருப்பின. பைசான்டைன் பேரரசர் 3ம் அலெக்சியுசின் மருமகன் 4ம் அலெக்சியுசுக்கு ஆதரவாக, 3ம் அலெக்சியுசை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதில் சிலுவைப்போர் வீரர்கள் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பைசான்டைன் பேரரசரராக 4ம் அலெக்சியுஸ் ஆட்சிக்கு வந்தார். இப்புதிய பேரரசர், பைசான்டைன் ஆலயத்தை உரோமைக்கு எழுதி வைக்க எடுத்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், 1204ம் ஆண்டில், பைசான்டைன் மாளிகையில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில், பேரரசர் 4ம் அலெக்சியுஸ் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, சிலுவைப்போர் வீரர்கள், கான்ஸ்தாந்திநோபிள் நகரத்திற்கு எதிராகப் போரை அறிவித்தனர். நான்காவது சிலுவைப் போராக அமைந்த மற்றும், பெருமளவாக இரத்தம் சிந்தப்பட்ட இந்தப் போரில் கான்ஸ்தாந்திநோபிள் நகரம் வீழ்த்தப்பட்டது.

12 September 2018, 14:53