தேடுதல்

சிலுவைப்போர்கள் சிலுவைப்போர்கள்  

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பாகம் 3

11ம் நூற்றாண்டின் இறுதிக்குள், பழமையான கிறிஸ்தவ உலகின் மூன்றில் இரண்டு பகுதியை செல்சுக் முஸ்லிம் பேரரசு ஆக்ரமித்தது. இந்தப் பகுதியை மீட்பதற்காக இடம்பெற்றவையே சிலுவைப்போர்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

மத்திய கால ஐரோப்பாவில், கத்தோலிக்கம் மட்டுமே மதமாக இருந்தது.  நோயாளர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல்,  மக்களுக்கும், மன்னர்களுக்கும் ஆன்மீக வழிகாட்டிகளாகவும் போதகர்களாகவும் இருத்தல், பயணம் செய்வோர்க்கு தங்குமிடமும், பசியுற்றோர்க்கு உணவும் அளித்தல், நீதிமன்றங்கள் வழியாக நீதி வழங்குதல், துறவிகளுக்கும், அருள்சகோதரிகளுக்கும் கல்வியறிவு வழங்குதல் உள்ளிட்ட பல பணிகளை திருஅவை ஆற்றி வந்தது. ஆனால் 1054ம் ஆண்டில், உரோம் திருத்தந்தைக்கும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், கிறிஸ்தவத்தில், மேற்கு, கிழக்கு என, இரு பெரும் பிரிவினைகள் உருவாகின. 11ம் நூற்றாண்டின் இறுதிக்குள், மேற்கு ஐரோப்பா, தனக்கென உரிமைகளைக் கொண்டு வல்லமை வாய்ந்த பகுதியாக உருவெடுத்திருந்தது. அதேநேரம், உரோமைப் பேரரசில் பாதியாக இருந்த, முன்னாள் கிழக்கு உரோமைப் பேரரசு அதாவது பைசான்டைன் பேரரசின் பெரும் பகுதியை, செல்சுக் முஸ்லிம் பேரரசு ஆக்ரமித்தது. 11ம் நூற்றாண்டின் இறுதிக்குள், பழமையான கிறிஸ்தவ உலகின் மூன்றில் இரண்டு பகுதியை இந்த முஸ்லிம்கள் ஆக்ரமித்திருந்தனர். பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, ஆசியா மைனர் (ஆசிய துருக்கி) ஆகிய முக்கிய கிறிஸ்தவப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பகுதியை முஸ்லிம்கள் ஆக்ரமித்திருந்தனர். பல ஆண்டுகள் குழப்பம் மற்றும் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இராணுவ அதிபர் Alexius Comnenus என்பவர், 1081ம் ஆண்டில் பைசான்டைன் பேரரசின் அரியணையில் அமர்ந்தார். பேரரசர் முதலாம் அலெக்சிசாக, எஞ்சியிருந்த பைசான்டைன் பேரரசை, தன் கட்டுப்பாட்டுக்குள் அவர் கொண்டு வந்தார்.

செல்சுக் முஸ்லிம் பேரரசால் ஏற்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கென, மேற்கிலிருந்து படைகளை அனுப்புமாறு, 1095ம் ஆண்டில், பேரரசர் அலெக்சிஸ், திருத்தந்தை 2ம் உர்பான் அவர்களுக்கு தூது அனுப்பினார். அச்சமயத்தில், உலகின் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு இடையே உறவுகள், நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டு இருந்தாலும், பேரரசர் அலெக்சிஸ், உதவி கேட்ட நேரம், அந்த உறவில் சிறிது நல்ல முன்னேற்றம் தெரிந்ததால், 1095ம் ஆண்டு, தென் பிரான்சின் Clermontல் நடந்த பொதுச் சங்கத்தில், பைசான்டைன் பேரரசுக்கு உதவுவதற்கு மேற்குக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்து புனித பூமியை மீட்பதற்காகவும், பழமையான கிறிஸ்தவ பகுதிகளில், இஸ்லாம் பரவுவதைக்  கட்டுப்படுத்துவதற்காகவும், ஆயுதங்களைக் கையிலெடுக்குமாறு மேற்குலகைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இதுவே சிலுவைப்போர்களின் அதாவது ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் புனிதப் போர்களுக்குக் காரணமாகும். திருத்தந்தை 2ம் உர்பான் அவர்களின் விண்ணப்பத்திற்கு, ஐரோப்பிய இராணுவம் மற்றும் குடிமக்களிடையே பெருமளவில் வரவேற்பு இருந்தது. ஆயுதங்களுடன் திருப்பயணமாகச் சென்றவர்கள், திருஅவையின் அடையாளமாக, சிலுவையை அணிந்திருந்தனர். 1096ம் ஆண்டு முதல், 1291ம் ஆண்டுவரை எட்டு பெரிய சிலுவைப் போர்கள் நடந்தன.

முதல் சிலுவைப்போர் 1096-1099

மேற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நான்கு இராணுவத் தலைவர்களின் தலைமையில், 1096ம் ஆண்டில் நான்கு படைகள், பைசான்டைன் பேரரசுக்குச் சென்றன. அக்காலத்தில் மறையுரையாற்றுவதில் பிரபலம் அடைந்திருந்த துறவி பீட்டர் என்பவரின் கட்டளையின்படி சென்ற மற்றொரு குழுவினர், திறமையாகத் திட்டமிட்டுச் செல்லவில்லை. இக்குழு, மக்களின் சிலுவைவீரர் என அழைக்கப்பட்டது. ஏனைய சிலுவைப் போர் வீரர்களுக்காகக் காத்திருக்குமாறு, பேரரசர் அலெக்சிஸ் சொன்ன ஆலோசனையைப் புறக்கணித்து,  துறவி பீட்டரின் படைகள், 1096ம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், பாஸ்பரசைக் கடந்து சென்றன. இந்த சிலுவைப் போர் வீரர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற பெரிய போரில், துருக்கி படைகள் இவர்களை சிபோட்டுஸ் எனுமிடத்தில் நசுக்கின. எமிக்கோ என்பவரின் தலைமையில் சென்ற மற்றொரு சிலுவைப் போர் வீரர்கள், 1096ம் ஆண்டில், ரைன் பகுதியின் பல்வேறு நகரங்களில் யூதர்களைப் படுகொலை செய்தனர். இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே, பெரிய பிரச்சனைக்கு வித்திட்டது.

இதற்கிடையே, 1096ம் ஆண்டில் நான்கு இராணுவத் தலைவர்களின் தலைமையில், கான்ஸ்தாந்திநோபிள் சென்ற நான்கு படைகளிடம், அலெக்சிஸ் தனக்கு பிரமாணிக்கமாக இருக்குமாறு வாக்குறுதி கொடுக்கச் சொன்னார். துருக்கியரிடமிருந்து கைப்பற்றும் இடங்கள் மற்றும் அப்படைகள் கைப்பற்றும் வேறு இடங்கள் மீது தனக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்குமாறு, அப்படைகளிடம் உறுதிமொழி வாங்கினார் அலெக்சிஸ். பின்னர், 1097ம் ஆண்டு மே மாதம், சிலுவைப் போர் வீரர்களும், பைசான்டைன் நேசப்படையினரும், தற்போதைய துருக்கியிலுள்ள ஈஸ்னிக் எனுமிடத்தில் தாக்குதல் நடத்தினர். பின்னர் ஜூன் மாதத்தில் அந்த நகரம் சரணனடைந்தது. சிலுவைப் போர் வீரர்களுக்கும் பைசான்டைன் தலைவர்களுக்கும் இடையே உறவுகள் நலிவடைந்து வந்தாலும், இரு தரப்புப் படைகளும் சேர்ந்து, அனத்தோலியா வழியாக படையெடுத்துச் சென்று, 1098ம் ஆண்டு ஜூனில், சிரியாவின் பெரிய நகரமாகிய அந்தியோக்கியாவைக் கைப்பற்றியது. பல்வேறு உட்பூசல்களுக்கு மத்தியிலும், சிலுவைப் போர் வீரர்கள், 1099ம் ஆண்டு ஜூனில் எருசலேமைக் கைப்பற்றினர். இத்துடன் முதல் சிலுவைப்போர் முடிவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 15:05