தேடுதல்

இலங்கை காரித்தாசின் பொன் விழா நிகழ்வு இலங்கை காரித்தாசின் பொன் விழா நிகழ்வு 

இலங்கை காரித்தாசின் 50 வருட பணிகள்

இலங்கை காரித்தாஸ், ஒன்பது மாநிலங்களில், நாற்பது அமைதி கிராமங்களை உருவாக்கி, ஏறத்தாழ 5000 குடும்பங்களுக்கு தற்காலிக, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழைகள் மற்றும், சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், நாட்டின்  அமைதிக்கும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நற்பணியாற்றிவரும் இலங்கை காரித்தாஸ் அமைப்பு, இலங்கை உள்நாட்டுப் போரின்போது, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என, அந்த அமைப்பின் தேசிய இயக்குனர், அருள்பணி Mahendra Gunatilleke அவர்கள் கூறினார்.

இலங்கை காரித்தாஸ் அமைப்பு, தனது பொன் விழாவைச் சிறப்பித்துவருவதையொட்டி, பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த அருள்பணி Gunatilleke அவர்கள், இலங்கையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போதும், போர் முடிந்த பின்னும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ளது என்று கூறினார்.

2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போர், ஏராளமான மக்களின் வாழ்வையும், சொத்துக்கலையும் அழித்து, மனித மாண்பில் மிக ஆழமான காயங்களை உருவாக்கியுள்ளது என்றும், பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், இலங்கை காரித்தாஸ், நாட்டில், ஒப்புரவு, மற்றும், மறுசீரமைப்புப் பணிகளில், பெரிய அளவில் பணியாற்றியுள்ளது என்றும், அருள்பணி Gunatilleke அவர்கள் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், வீடுகளையும், உடல் உறுப்புகளையும் இழந்துள்ளனர்; கட்டாயப் புலம்பெயர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்; ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிக்கப்பட்டன என்றுரைத்த அருள்பணி Gunatilleke அவர்கள், இலங்கையின் வடக்கில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மக்களின் துன்ப துயரங்களில் எப்போதும் உடனிருந்து உதவி வருகிறது என்று தெரிவித்தார்.

இலங்கை காரித்தாஸ், ஒன்பது மாநிலங்களில், நாற்பது அமைதி கிராமங்களை உருவாக்கி, ஏறத்தாழ 5000 குடும்பங்களுக்கு தற்காலிக, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது என, பீதேஸ் செய்தியிடம் தெரிவித்தார், அந்த அமைப்பின் அருள்பணி Gunatilleke. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2018, 15:58