வட மற்றும் தென் கொரிய நாடுகளின் அடுத்த சந்திப்பு குறித்த திட்டங்கள் வகுக்கும் உயர்மட்டக் குழு வட மற்றும் தென் கொரிய நாடுகளின் அடுத்த சந்திப்பு குறித்த திட்டங்கள் வகுக்கும் உயர்மட்டக் குழு 

கொரியத் தலைவர்களின் புதிய சந்திப்பு அமைதிக்கு வழி

வட கொரியத் தலைநகர் Pyongyangல், இரு கொரிய நாடுகளின் தலைவர்கள், செப்டம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டில் இரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்களை நடத்தியுள்ள, இரு கொரிய நாடுகளின் தலைவர்கள், மீண்டும் இந்த செப்டம்பரில் சந்திக்கவிருப்பது, கொரிய தீபகற்பத்தில், அமைதியை நோக்கி புதிய மைல்கல் பதிக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-Jung.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்–உன், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் ஆகிய இருவரும், 2018ம் ஆண்டில் மூன்றாவது முறையாக சந்திக்கவிருப்பது குறித்து, பீதேஸ் செய்தியிடம் பேசிய கர்தினால் Yeom அவர்கள், இவ்விரு நாடுகளுக்கு இடையே உறவுகளில் இடம்பெறும் முன்னேற்றத்தையே, இசந்திப்பு காட்டுகின்றது என்று கூறினார்.

வட கொரியத் தலைநகர் Pyongyangல், செப்டம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை, இவ்விரு தலைவர்களும் சந்திக்கவிருப்பது குறித்து, தான் இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும், இச்சந்திப்பு, கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு உறுதியாய் இருப்பதைக் காட்டுகின்றது எனவும் கூறினார், கர்தினால் Yeom. இந்த சந்திப்பு வெற்றியடைய வேண்டுமென கொரியத் திருஅவை செபித்து வருகின்றது எனவும், சோல் பேராயரும், Pyongyang அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான, கர்தினால் Yeom அவர்கள் தெரிவித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 15:49